பறவைகளின் பாதம் போன்றும்
பாதத்தடங்கள் போன்றும்
பிஞ்சுக் குழந்தைகளின்
பூவிரல் படம்போலும் தொடுகைபோலும்
விழிகளைப் பறிக்கின்றன
இந்த மேப்பில் வண்ண உதிர் இலைகள்
கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும்
உயிர்த்தபடி
அறைவாசற் கதவோரம்
காலண்டரின் வெண்முதுகுப் பரப்பில்
ஓவியமாய் ஒட்டப்பட்டு
சுவரில் தொங்குகின்றனர்
தூர தேசத்திலிருந்து
அஞ்சலில் வந்து சேர்ந்த இந்தத் தூதுவர்கள்!
தங்கள் நாட்டை அறியாது
காலங்களை அறியாது
தூரங்களை அறியாது
மானுடத் துயர்கள்
எதையுமே அறியாது
பொங்குமாங் காதல்
உள்ளங்களை மட்டுமே அறிந்து களிப்பவர்கள்.
பேருணர்வுகளாற் சிவந்த உதிரங்களேயானவர்கள்!
Published on February 11, 2025 11:30