ஆன்மீக அரசியல்



’கும்பமேளாக்களுக்குலட்சக்கணக்கில் பக்தர்களும், சாதுக்களும் திரண்டனர்’ என்ற செய்திகளையும் நிர்வாணச்சாமியார்களின் ஊர்வலப் படங்களையும் கலாய்த்து, தலையிலடித்து கடந்து போகிறவர்களாய் இருந்தால்நீங்கள் அதிர்ந்து போகக் கூடும். அந்த சடங்குகளின் மீதும், சாமியார்களின் மீதும் நம்பிக்கைகொண்டு கன்னத்தில் போட்டு, கும்பிட்டு காலம் தள்ளுகிறவர்களாய் இருந்தால் நீங்கள் விழித்துக்கொள்ளக் கூடும். ‘ஆன்மீக அரசியல்’ புத்தகம் அப்படிப்பட்டது. 2023ம் ஆண்டில் வாசித்தபுத்தகங்களில் மிக முக்கியமானது.
 
இந்திய நிலப்பரப்பின்பெருமையும், வரலாறும் ஆன்மீகம் வழிவந்தது என்றும், சாதுக்களும், சன்னியாசிகளும் கண்டடைந்தஞானமே நம் மக்களின் வாழ்வுக்கான வழிகாட்டி என்றும் வழிவழியாய் கதைகள் சொல்லப்பட்டுவருகின்றன. அவை எல்லாவற்றின் தோலையும் உரிக்கிறது இந்த புத்தகம். சாதுக்களின் பயணத்தில்முதல் பலியே ஆன்மீகமும், துறவும்தான் என்பதை சர்வ நிச்சயமாய் காட்டுகிறது.
 
சாதுக்கள் என்றால்கோவில்களில் பூசை செய்து கொண்டும், மக்களிடையே புராணக்கதைகள் பேசிக்கொண்டும், தர்மத்தையும்,அறத்தையும் பிரசங்கம் செய்து கொண்டும் இருப்பார்கள் என்னும் புனித பிம்பங்கள் நம்மையறிமாலேயேபொதுப் புத்தியில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்,எப்படி உருவாகிறார்கள், என்பதெல்லாம் அறியாமலேயே காலகாலமாய் அவர்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு திரிகிறது ஒரு பெரும்பான்மை சமூகம்.  வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த அவர்களது வாழ்வையும்அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறி பிடித்தவர்கள்  என்பதையும் நமக்கு ஆதாரங்களோடு கதை கதையாய் சொல்கிறது.பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை அடுக்கடுக்காய் கொண்ட வரலாறாக அது நீள்கிறது.
 
300 பக்கங்கள்கொண்ட புத்தகத்தில் நித்தியானந்தாவுக்கு ஒன்றிரண்டு பத்தியும், காஞ்சி சங்கராச்சாரிக்குஒன்றிரண்டு பக்கங்களுக்குமே இடம் கிடைக்கிறது. இந்த புத்தகத்தில் சொல்லப்படும் ’ஆன்மீகஅரசியல்’ எவ்வளவு விரிந்து பரந்து அடர்த்தியானது என்பதற்கான அளவுகோல் அது. அயோத்தியைச்சுற்றி மட்டிலும் நூற்றுக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அதுபோல் தேசமெங்கும் நிறைந்திருக்கும்கோவில்கள், அதன் நில புலன்கள், சொத்துக்கள், மக்களிடம் வியாபித்திருக்கும் செல்வாக்குஎல்லாம் சாதுக்களை எப்படி ஆட்டிப் படைக்கின்றன, அந்த சாதுக்கள் அரசியலையும், அதிகாரத்தையும்எப்படி ஆட்டிப் படைக்கின்றனர் என்பதை கடந்த கால வரலாற்றின் தொடர்ச்சியாக புத்தகம் நிறுவுகிறது.
 
மன்னர்கள் காலத்தில்கூலிப்படைகளாய் இருந்த சாதுக்களும், சன்னியாசிகளும் பிறகு மொகலாய அரசர்களுக்காகவும்,பின்னர் ஆங்கிலேயர்களுக்காகவும் கூட சண்டைகள் போட்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட கடந்தகால வீரத்தையும் வலிமையையும் இழந்து விட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் இப்போதும்சண்டைகளுக்கு குறைவில்லை. தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், அதிகாரம் நோக்கிய பதவிகளுக்குச்செல்லவும் சாதுக்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் சூழ்ச்சிகளாகவும், இரக்கமற்ற வன்முறைகளாகவுமேஇருக்கின்றன. இந்திய சினிமாக்களில் நாம் பார்த்த Gang War-களெல்லாம் சாதுக்களிடையேநடக்கிற சண்டைகளுக்கு முன்பு மிக மிகச் சாதாரணமானவையாய், அற்பமானவையாய்த்தான் தெரிகின்றன.
 
இந்திய அரசியல்அதிகாரத்தை கைப்பற்ற இந்த சாதுக்களை தன் வயப்படுத்த முனைந்தது ஆர்.எஸ்.எஸ். ஆரம்பத்தில்அதன் முயற்சிகள் பலிக்கவில்லை. அதற்கென நெய்யப்பட்ட வலையாக வி.ஹெச்.பி விரிகிறது.  காந்தியும், நேருவும், இந்திரா காந்தியும் தோற்றுப்போன இடத்தில் வி.ஹெச்.பி நுழைந்து சாதுக்களின் உலகத்திற்குள் ஊடுருவுகிறது. ராம ஜென்மபூமியை கையிலெடுக்கிறது. மதச்சார்பற்ற நாட்டை மதச் சார்புள்ள நாடாக மாற்றுவதே ராம ராஜ்ஜியத்தின்நோக்கமாக இருக்கிறது. சாதுக்களின் உலகத்தை இந்துத்துவ மயமாக்குகிறது. ஆன்மீகத்தை சந்தையாக்குகிறது.அதன் விளைவுகளையும், தாக்கங்களையும் ‘ஆன்மீக அரசியல்’ முன்வைக்கிறது.
 
இந்திய அரசியல்குறித்து அறியப்படாத இருண்ட பக்கங்களை இந்த புத்தகம் சொல்லிச் செல்கிறது. அதை அறியமுன்வருவோமானால் இந்திய அரசியலையேக் கவ்வியிருக்கும் ஆபத்தை உணர முடியும். அந்த உலகம்குறித்த பிரக்ஞையில்லாமல்தான் நம்மில் பலரும் மேலோட்டமாக இங்கு அரசியல் பேசிக்கொண்டுஇருப்பதாகப் படுகிறது.
 
பத்தாண்டுகளுக்கும்மேலாக முமுமையாக தன்னை ஈடுபடுத்தி, பலரையும் சந்தித்து, வரலாற்றை சேகரித்து, ஆய்வுநடத்தி ஆதாரமான தரவுகளோடு எழுதி இருக்கிறார் திரேந்திர கே. ஜா. கொலை பாதகர்களின் செயல்களைசுவாரசியமாக தொகுத்திருக்கிறார்.
 
இப்படி ஒருபுத்தகத்தை இப்படி ஒரு காலத்தில் எழுதி வெளிக்கொண்டு வருவதே மிக துணிச்சலான, நேர்மையானகாரியம் என்பதை புத்தகத்தை படித்து அறிந்து கொள்ளலாம். அதனை மிக நேர்த்தியாக தமிழில்மொழியாக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் இ.பா.சிந்தன்.
 
சுவாரசியமாகதொடர்ந்து படிக்கும் மொழிநடை கொண்டது இதன் சிறப்பம்சம். அவருக்கு தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது கிடைத்திருப்பது எவ்வளவு சரியானது என்பதற்கு இந்த புத்தகமேசாட்சி.
 
சமகாலத்தில்அதிகம் கவனம் பெற வேண்டிய, நம் சமூகம் தொடர்ந்து உரையாட வேண்டிய புத்தகம் இதுவென கருதுகிறேன்.
புத்தகம் பற்றியகுறிப்புகள் :-
 
ஆன்மீக ஆரசியல்
எழுதியவர்: திரேந்திர கே.ஜா
மொழிபெயர்ப்பாளர்: இ.பா.சிந்தன்
பக்கங்கள்: 312
விலை. ரூ.375/-
 
வெளியீடு :
எதிர் வெளியீடு
தொலைபேசி :9942511302

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2025 23:10
No comments have been added yet.