ஆடி ஓய்ந்த கால்கள் ஓரமாக நிற்க கைகள் வயிற்றைத் தொட்டுப் பசி என்று காட்டின

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து இது –

புதுப் புடவை, புதுப் புடவை.

 

இன்னும் பாட்டுகள் தொடர வாசலுக்கு வந்த அகல்யா, யாரோ நீட்டிய புதுப் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பூம் பூம் பூம். சங்கு ஊதியவன் நிறுத்தி தொடர்ந்து இருமிக் கோழையைச் சுவரில் துப்பி நூதனை நனைத்து விட்டுத் திரும்பச் சங்கூத ஆரம்பித்தான்.

 

ஆர்டிஸ்ட் பென்ஷன் ரொம்ப குறைவா இருக்கு, மகாராஜ். பாதி மாசம் தான் வருது. அப்போ அதை வச்சு கோதுமையோ அரிசியோ வாங்கறோம். அப்புறம் ஒரு வாரம் சோளம். அதுக்கு அடுத்து கஞ்சி. மாசக் கடைசியிலே விட்டோபா கோவில் வாசல்லே கை ஏந்தறேன். பரிதாபப்பட்டு, உள்ளே வந்து தானம் கேட்கச் சொன்னார் பூசாரி.

 

நான் சாயாக் கடை வச்சுத்தான் பிழைக்கறேன் மகராஜ். லாவணியில் டோலக் வாசிச்சு பாடி, ஷாலினிதாய் கூடவே முப்பது வருஷம் நடிச்சிருக்கேன். பென்ஷன் முப்பது ரூபா வருது. போஸ்ட்மேன் அஞ்சு ரூபா எடுத்துப்பான்.

 

ஷாலினிதாய் நிறைசூலியா ஆடினபோது நான் தான் திரை போட்டு பிரசவம் பார்த்தேன். இந்தப் பையன் மேடைக்குப் பின்னாடி பிறந்தவன் தான்.  அதுக்கு பென்ஷன் வேண்டாம். ஆடின காலுக்கு மூட்டுவலிக் களிம்பு வாங்கவாவது.

 

குரல்கள். கோரிக்கைகள். மன்றாடல். துயரம் பகிர்தல். எல்லாமும் ஆனார்கள் அந்த லாவணிக் கலைஞர்கள்.

 

சால் குடித்தனக்கார ஆண்களும் வீட்டுப் பெண்களும் சிறு பூமாலைகள் சகிதம் வாசல் கதவுக்கு வெளியே பொறுமையாக நின்றார்கள். மினிஸ்டர் பெரியப்பாவும் திலீப்பும் லாவணிக் கலைஞர்களும் நின்ற இடத்தைச் சுற்றி நீண்டது அந்த வரிசை.

 

ஜன்னலில் பாட்டி தலை தெரிந்தது. வாடிப் போயிருந்தாள். குழி விழுந்த கண்கள் பாசமும் ஆவலுமாகத் தன் ஒரே மகனைப் பார்த்துக் கொண்டே இருந்தன.

 

பாட்டி பார்க்கறா பெரியப்பா.

 

அவர் காதில் சொன்னான் திலீப்.

 

அவர் ஆமா என்று சொல்லி, எலக்‌ஷன் பிரச்சாரத்தில் ஓட்டுக் கேட்டுக் கை ஆட்டுகிற மாதிரி ரெண்டு கையும் ஆட்டினார். இதோ வரேன் என்று அவர் முனகியது அவருக்கே கேட்டிருக்காது.

 

பெரியப்பா, மெட்றாஸ் வீட்டிலே அப்பா பங்கை வச்சு எனக்கு ஒரு ஒரு ரெண்டு லட்சம் தர முடியுமா? நான் தொழில் பார்த்துப் பிழைச்சுக்கறேன்.

 

தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு வழியாகக் கேட்டு விட்டான் திலீப்.

 

ஏண்டா இந்த வேலைக்கு என்ன? சம்பளம் தரான் தானே பிஸ்கட் சாஸ்திரி.

 

அவன் கேட்டதை எதிர்பார்க்காத மினிஸ்டர் பெரியப்பா கூட்டச் சத்தத்தில் கரைந்து போன குரல் மீண்டும் எழுந்து கம்மக் கேட்டார்.

 

தரார் பெரியப்பா.

 

திலீப் அவசரம் கூட்டிப் பதில் சொன்னான்.

 

மெட்ராஸ் வீடு பத்தி மெல்ல பார்க்கலாம். உனக்குப் பணம் வேணும்னா நான் தரேன். வீடு இருக்கட்டும். நல்ல விலை வரட்டும்.

 

யாரோ மரியாதை தரும் இடைவெளி விட்டு அவர் பார்வைக்குக் காத்திருந்ததை திலீப் ஓரக் கண்ணால் பார்த்தான்.

 

சரி பெரியப்பா என்றான். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள அவனையறியாமல் மீண்டும் அவசரம் எழுந்தது. அவன் பழகியிருந்தது அப்படித்தான்.

 

உங்கப்பன் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கான் தெரியுமில்லையோ. அடிக்கடி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கிண்டு போவான்.

 

பெரியப்பா சொல்லியபடி கையைக் காட்ட, பக்கத்தில் வந்தார் ஒரு அதிகாரி.

 

சார், ப்ளாஸ்க் எடுத்து வரட்டா? பில்டர் காபி.

 

அவர் திரும்ப வாய் பொத்திக் கேட்க, துண்டால் முகம் துடைத்தபடி பெரியப்பா வேண்டாம் என்றார்.

 

ஐயா, பென்ஷன் பற்றி.

 

லாவணிக் கலைஞர்கள் ஏங்கின குழந்தைகளாக பசி என்று வயிற்றைக் காட்டி யாசிக்கும் தோதில் குரலெடுத்து மன்றாடினார்கள். ஷாலினிதாய் இறந்த துக்கத்தில் இதுவும் ஒரு அங்கம் என்று அவர்கள் கருதி இருக்கலாம். எல்லோரும் கஜ்ஜை கட்டி ஆடியவர்கள் தானே. எல்லோரும் கால் ஓய்ந்து, குரல் ஓய்ந்து போனவர்கள் தானே? ஷாலினிதாய்க்கு சித்த சுவாதீனம் இருந்தது என்றால் இவர்களில் எத்தனை பேருக்கு மனமும் உடலும் உபாதை இல்லாமல் உள்ளது?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2024 02:54
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.