இத்தனைக்குப் பிறகும் காந்தி …

 
.

 

 

1982 ஆம் ஆண்டின் சிறந்த படமாக “காந்தி”யையும், சிறந்த இயக்குநராக அந்தப் படத்தை இயக்கிய ஆட்டன்பரோவையும் ஆஸ்கார் தேர்வு செய்கிறது. இவைபோக இன்னும் ஆறு விருதுகள் என்ற வகையில் அந்த ஆண்டு எட்டு ஆஸ்கார் விருதுகளை மொத்தமாக அள்ளுகிறது ”காந்தி” திரைப்படம்.

 

விருதினை வாங்குவதற்காக ஆட்டன்பரோ எழுந்து மேடையை நோக்கி நடக்கிறார். மொத்த திரளும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிக்கிறது. ”ரகுபதி ராகவ” பாடல் பின்னணியில் ஒலிபரப்பாகிறது.

 

விருதினைப் பெற்றுக் கொண்டு, “இந்த விருது உலக மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற காந்தியின் குறிக்கோளுக்கான நமது மரியாதை” என்று ஆட்டன்பரோ சொல்கிறார்.

 

காந்தி படத்தை இயக்கியதால் ஆட்டன்பரோ உலகம் முழுக்கப் போய் சேர்கிறார். அதைஅவரும் உணர்ந்தவராகவே இருக்கிறார். அதனால்தான் அந்த விருதைகாந்தியின் உயரிய குறிக்கோளுக்கான நமது மரியாதை என்று அறிவிக்கிறார்.

 

உண்மை இப்படி இருக்க ஏதோ, ஆட்டன்பரோ படம் எடுத்ததால்தான் காந்தி உலகத்திற்கு அறிமுகமானதாக 2024 இல் கூறுகிறார் மோடி. இதை அவரது சொந்தக் கருத்தென்றோ அதற்கு தங்களால் பொறுப்பேற்க முடியாதென்றோ RSS அமைப்போ பாஜகவோ இதுவரை அறிவிக்கவில்லை.  எனவே அவர்களின் கருத்துதான் இது என்பது உறுதியாகிறது.

 

உலக வரலாற்றை உற்று நோக்கினால் அது ‘திரிபு’ கலந்ததாகத்தான் இருக்கும். இதை முற்றுமாகத் தவிர்க்கவும் இயலாது. ஆனால், பாஜக ஆட்சி திரிபையே இந்திய வரலாறாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறது.

 

அவர்களது நீண்டகால செயல் திட்டங்களில் இரண்டாக கீழ்வருவனவற்றைக் கொள்ளலாம்,

 

1)  என்ன பாடுபட்டேனும் காந்தியின்மீது இருக்கும் மரியாதைக்குரிய பிம்பத்தை சிதைப்பது
2)  காந்தியின் இடத்தில் சவார்க்கரை கொண்டுவந்து இருத்துவது

 

இதன் ஒரு பகுதிதான் மோடி “காந்தி” படம் வந்தபிறகே உலகிற்கு காந்தி அறிமுகமானார் என்று அப்பட்டமாக பொய் சொல்வது.

 

04.09.1888 அன்று சட்டம் பயில்வதற்காக லண்டன் செல்வதற்காக காந்தி கப்பல் ஏறிய செய்தியை “கத்தியவார் டைம்ஸ்” என்ற இதழ் வெளியிடுகிறது. இதுதான் காந்தி குறித்து முதலில் வந்த பத்திரிக்கை செய்தி என்று தனது “தென்னாப்பிரிக்காவில் காந்தி” என்ற நூலில் குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா.

 

தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி பொது விஷயங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார். அங்குள்ள வட்டார இதழ்களான ‘நோட்டல் மெர்குரி’, ‘ஜோஹன்ஸ்பர்க் ஸ்டார்’ போன்றவை இந்த செய்திகளை வெளியிட ஆரம்பிக்கின்றன.

 

காந்தி விரிய விரிய அவர்குறித்த செய்திகளும் ”The Times of London”, “Newyork Times” என்று விரிய ஆரம்பித்ததாக குஹா அதே புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

 

1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியை பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்த ஊடகங்கள் இன்றுவரை ஓயாமல் உற்சாகம் குன்றாமல் அந்த வேலையை செய்துகொண்டே இருக்கின்றன.

 

1925 ஆம் ஆண்டுதான் RSS அமைப்பே பிறக்கிறது. ஆக RSS பிறப்பதற்கு 37 ஆண்டுகளுக்கு முன்பே காந்தி உலக மக்களிடம் அறிமுகமாகி இருந்தார்.

 

1888 ஆண்டு தொடங்கிய காந்திக்கும் மக்களுக்குமான உறவை 1982 காந்தி திரைப்படம் வெளியான நாளுக்கு மோடி இழுத்து வருகிறார். அதாவது இடையில் 94 ஆண்டுகளை காணாமல் தொலைக்க அவர் முயற்சிக்கிறார்.

 

அறியாமல் இப்படி உளறுகிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. அறிந்தேதான், ஒரு திட்டத்தோடுதான் இந்தப் பொய்யை சொல்கிறார். இந்தப் பொய்க்குப் பின்னால் அவர்களின் நுட்பமான அரசியல் இருக்கிறது.

 

எப்படியாவது 94 ஆண்டுகால இந்திய வரலாற்றிலிருந்து காந்தியை அப்புறப்படுத்திவிட்டால் இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த வெற்றிடத்தில் புல்புல் பறவையின் மீதேற்றியாவது சவார்க்கரைக் கொண்டுவந்து நட்டு வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 

இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இது சவார்க்கரின் நாடு என்ற வரலாற்றைக் கொடுப்பதற்காக இவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.  

 

இந்துக்களுக்கு எதிரானவர் காந்தி என்ற பொய்யை நிறுவிவிட்டால் அவரை இந்தியாவிற்கு எதிரானவர் என்றும் நிறுவிவிடலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதற்கான முயற்சியில் அவர்கள்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

 

15.08.1947 அன்று புனாவில் ஸ்வஸ்திக் சின்னத்தைக் கொண்ட RSS கொடி ஏற்றப்படுகிறது. சுமார் 500 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் கோட்சே கீழ்வருமாறு  பேசியதை “கோட்சேயின் குருமார்கள்” என்ற தனது நூலில் வைத்திருக்கிறார் தோழர் அருணன்.

 

“இந்தியப் பிரிவினை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு. இதைச் செய்தது காங்கிரஸ். இதைச் செய்தவர் காந்தி”

 

ஆக, இந்தியப் பிரிவினைக்கு காந்தியையும் காங்கிரசையும் கோட்சே காரணமாகக் கூறுகிறான். இன்னும் ஒருபடி மேலே போய் 01.11.1947 அன்று நடந்த ‘இந்துராஷ்ட்ரா’ இதழின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கீழ்வருமாறு அவன் பேசியதையும் ‘கோட்சேயின் குருமார்கள்’ நூலில் தோழர் அருணன் வைத்திருக்கிறார்.

 

“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியுமென்று காந்தி கூறினார். இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது. காந்தி இன்னும் உயிரோடு இருக்கிறார்”

 
அவர்கள் விரும்பிய இந்து ராஷ்ட்ரத்தை அடைய முடியாமல் போனதற்கு காந்தியின் பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதனால்தான் காந்தியைக் கொல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்ட கோட்சே அதை செய்து முடித்தான்.

 

காந்தியின் நினைவு இனியும் அவர்களது ஆசையைத் தடுக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை அழித்துவிடத்தான் இத்தனையையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

 

இவர்கள் மட்டும்தான் இப்படி என்று இல்லை. ஒரு பக்கம் இவர்கள் இந்துக்களிடம் காந்தி ஒரு இந்து விரோதி என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபக்கம் இஸ்லாமிய தீவிரத்தன்மையாளர்கள் இஸ்லாமியர்களிடம் காந்தியை ஒரு இஸ்லாமிய விரோதியாக அடையாளப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

 

19.07.1947 அன்று பாகிஸ்தானில் இருந்து வரும் “The Dawn” இதழில் அதன் ஆசிரியர் கேட்டார்,

 

“ இந்துக்களைத் தாக்குகிற இஸ்லாமியர்களை கட்டுப்படுத்துமாறு ஜின்னாவிடம் பேசும் காந்தி ஏன் இஸ்லாமியர்களைத் தாக்கும் இந்துக்களைத்தடுக்குமாறு நேருவிடம் பேசுவதில்லை”

 

”யாருக்கு எதிராக யார் அநியாயம் செய்தாலும் நான் கேட்பேன், நாம் கேட்க வேண்டும். நான் நேருவிடம் இஸ்லாமியர்களின் பாதுகாப்பிற்காகவும் கேட்பேன், ஜின்னாவிடம் இந்துக்களின் பாதுகாப்பிற்காகவும் பேசுவேன்.” என்று டான் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு காந்தி பதில் எழுதினார்.

 

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறும்போது “காந்தி ஒழிக” என்றும் சொல்லியபடிதான் வந்தார். அப்படி சொன்னவர்தான் இந்தியாவிற்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார்.

 

மதவெறி சக்திகள் இந்தியாவை செரித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் காந்தியின் நினைவைப் பாதுகாக்க வேண்டும் என்று. அவர் உணர்ந்திருந்தார்

 

ஊடகங்கள், அதிகாரம், இவர்களிடம் இருக்கும் இன்னபிற எந்த ஆயுதங்களைக் கொண்டும் காந்தியின் நினைவை இவர்களால் ஒருபோதும் கொன்றுவிட முடியாது
தீக்கதிர்29.09.2024

 


 

 

 

 

 

 

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2024 04:23
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.