மருத்துவர் அனிதா… மருத்துவர் ஜெகதீஷ்… மருத்துவர் கீர்த்தனா…

”நான் படித்தேன்
தீட்டென்றான்
மீறிப் படித்தேன்
நீட்டென்கிறான்”

என்ற கபிலனின் கவிதையைக் கொண்டு உரையாடல்களையும் கட்டுரைகளையும் நாம் தொடர்ந்து கட்டமைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நீட் குறித்தான, அதன் கார்பரேட் குணங்களைக் குறித்தான மிகக் கனமான விஷயங்களையே பேசியும், எழுதியும், கேட்டும், வாசித்தபடியுமாகவே இருக்கிற நமக்கு இந்த ஐந்தாறு சொற்கள் ”நீட்” தரும் வலியை எந்தப் பூச்சுமற்று தருகிறது.

நீயெல்லாம் படிப்பதற்கே தகுதி இல்லை, காரணம் நீ பிறந்த பிறப்பு அப்படி. என்று தடுக்கப்படுகிறார்கள். அந்தக் குழந்தை அந்தத் தடைகளை உடைத்து படித்து நல்ல மதிபெண்ணோடு வந்தால் இந்த மதிபெண்ணெல்லாம் பத்தாது நீட் வேண்டும் என்கிறார்கள்.

அந்தக் குழந்தையின் குரல்தான் கபிலனின் இந்தக் குரல். அதனால்தான் இதை ஒருபோதும் நம்மால் கைநழுவவிட முடியவில்லை.

இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்த குழந்தையால் நீட்டில் போதுமான மதிப்பெண் பெற முடியவில்லை என்றால் இந்த மதிபெண்ணில் ஊறு இருக்கிறது என்றுதானே கேட்டார்கள்.

குழந்தை அனிதா +2 பொதுத் தேர்வில் 1176/1200 எடுத்திருந்தாள். ஆனால் அவளால் நீட்டில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் எடுக்க முடியவில்லை.

எனக்கு நினைவு பிசகாமல் இருக்குமென்றால் சகோதரி தமிழிசையே இதை நக்கல் செய்திருந்தார்.

நீட்டில் நல்ல மதிப்பெண் எடுக்கும் குழந்தையால் பொதுத் தேர்வில் 1176 எடுக்க முடியவில்லை என்றால் நீட்டில் குறைபாடு இல்லையா என்று நாம் திருப்பிக் கேட்டோம்.

நமது குரலை அவர்களது அதிகாரம் பழைய அலுமினியப் பாத்திரத்தை பழைய பாத்திரம் வாங்குபவர் நசுக்கி தனது கூடைக்குள் எறிவதுபோல் எறிந்தது.

அப்போதுதான் நமது கோவத்தை, ஆற்றாமையை இந்த ஐந்தாறு வார்த்தைகளுக்குள் கொண்டு வந்தார்.

1176 மதிப்பெண் எடுக்கும் நம் குழந்தைகளால் ஏன் நீட்டில் சோபிக்க வாய்க்காமல் போனது? நிறைய காரணங்கள் உண்டு. இரண்டை மட்டும் பார்ப்போம்

1) நம் குழந்தைகள் மாநில பாடத் திட்டத்தில் படிப்பவர்கள். நீட் வினாத்தாள் CBSE பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்படுகிறது
2) நீட் வினாத்தாள் OBJECTIVE TYPE முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்

இவற்றில் முதல் கூறே போதும் நம் குழந்தைகள் ஏன் நீட்டில் சோபிக்க முடியவில்லை என்று.

ஆனால் இரண்டாவது கூறுதான் மிக முக்கியமானது. நீட்டில் ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண். மொத்தம் 180 கேள்விகள். ஆக, 720 மதிப்பெண்.

ஏதேனும் ஒரு கேள்விக்கு தவறான விடை தந்தால் குழந்தை ஒரு மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.

எனவே நீட்டை எதிர்கொள்வதற்கு குழந்தைகள் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். கோச்சிங் வகுப்புகளுக்கு லட்சக் கணக்கில் அழவேண்டியது இருக்கிறது. இதனால் நன்கு படிக்கக் கூடிய நமது ஏழைக் குழந்தைகளுக்கு கோச்சிங்கில் சேர இயலவில்லை. மிகச் சுமாராகப் படிக்கும் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல் கோச்சிங் சென்று நல்ல மதிப்பெண் எடுத்துவிடுகின்றனர்.

பல தனியார் பள்ளிகளே கோச்சிங் வகுப்புகளை நடத்துகின்றன. நீட் கோச்சிங்கில் சேரும் குழந்தைகள் பள்ளி வகுப்புகளுக்கு வரத் தேவை இல்லை. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெறுவதற்கு அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு நீட்டில் ஒன்றிய அளவில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள ஒரு குழந்தை +2 பொதுத் தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கிறார்.

அதாவது, +2 வில் தேர்ச்சி பெறாத ஒரு குழந்தையால் ஒன்றிய ரேங்க்கோடு நீட் தேர்வில் வெற்றிபெற முடிகிறது.

இதன் பின்னணியில் தில்லுமுல்லுகள் உள்ளனவா என்றால் நிச்சயம் உண்டு.

இந்த ஆண்டு ஒன்றியத்தில் பெரும்பான்மையற்ற ஒரு அரசு அமைந்திருக்கிற காரணத்தினால் சில நீட் அட்டூழியங்களை நம்மால் வெளிக்கொணர முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 குழந்தைகள் 720/720 எடுத்திருக்கின்றனர். இவர்களில் ஆறேழு குழந்தைகள் ஒரே மையத்தில் எழுதிய குழந்தைகள் என்பது நிச்சயமாக தற்செயலானது அல்ல.

அதிலும் சிலர் அடுத்தடுத்து அமர்ந்து தேர்வு எழுதியவர்கள்.

சில பிள்ளைகள் 717, 719 என்றெல்லாம் மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். இதற்கு வாய்ப்பே இல்லை.

ஒன்று 720 எடுக்கலாம். அல்லது 716 எடுக்கலாம். இல்லை ஒரு கேள்விக்கு தவறான விடை எழுதி இருந்தால் 715 எடுக்கலாம். இரண்டு கேள்விகளுக்கு தவறான விடை அளித்திருப்பின் 710 தான் எடுக்க முடியும்.

அது எப்படி 719 ,718 எல்லாம் எடுக்க வாய்க்கும்?

உச்ச நீதிமன்றத்திற்கு போனால் ஏதோ சில கோளாறுகள் நடந்திருக்கின்றன சரி செய்கிறோம் என்று நிர்வாகம் கூறுகிறது.

கொஞ்ச நேரம் கழித்து இந்த மதிப்பெண் குளறுபடிகள் நாங்கள் சில மாணவர்களுக்குக் கொடுத்த கருணை மதிப்பெண் காரணமாக நிகழ்ந்து விட்டது என்று கூறுகிறது.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் தாங்கள் கருணை மதிப்பெண் கொடுத்த 1563 குழந்தைகளுக்கும் மறு தேர்வு வைத்து விடுகிறோம் என்கிறார்கள்.

தேர்வுத்தாள் சில இடங்களில் கசிந்திருக்கிறது என்றும் ஏறத்தாழ ஒப்புக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்போது சட்டையை வெட்டுகிறார்கள், முடியை வெட்டுகிறார்கள், தாலியைக் கழற்றுகிறார்கள். ஏதோ நடக்க இருக்கும் கொலையைத் தடுப்பதற்காக கெடுபிடிகளைக் கட்டவிழ்த்து விடுவதைப்போல் நடந்து கொள்கிறார்கள்.

ஆனால், வடக்கில் என்றால் இவ்வளவு அசட்டை எப்படி.

திராவிடப் பிள்ளைகள் மருத்துவர்களாகிவிடக் கூடாது என்பதுதானா என்ற அய்யம் இயற்கையாகவே ஏற்படுகிறது.

அது சரி, அந்தக் கருணை மதிப்பெண் யார் யாருக்கு வழங்கப் பட்டது?

எவ்வளவு வழங்கப் பட்டது? என்று கேட்டால், விடுங்கள் அதுதான் கொடுத்தவர்களுக்கு மறுதேர்வு வைக்கிறோமே என்கிறார்கள்.

720/720 எடுத்த 67 பேரில் 50 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப் பட்டிருக்கிறது. ஆகவே இப்போது முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது.

அய்யத்தைக் கிளப்பாமல் போயிருந்தால் அந்த 50 பேரும் மிகச் சிறந்த கல்லூரிகளுக்குப் போயிருப்பார்கள். அப்படிப் போயிருந்தால் தகுதி வாய்ந்த 50 பேருக்கு உரிய இடம் மறுக்கப் பட்டிருக்கும்.

அந்த 50 பேர் யார்? அவர்கள் குடும்பங்களின் அரசியல் அல்லது சமூகப் பின்னணி என்ன? அவர்கள் எந்தெந்த கோச்சிங் மையங்களில் பயிற்சி பெற்றார்கள்? அந்த கோச்சிங் மையங்களின் அரசியல் மற்றும் சமூகப் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

இப்படி எடுத்ததெற்கெல்லாம் சந்தேகப் படாதீர்கள். கொஞ்சம் நம்புங்கள் என்று சொல்கிறார்கள்.

இதுவே இந்த அரசு முழுப் பலத்துடன் இருந்திருக்குமானால் இந்தக் குழறுபடிகள் குறித்து நம்மால் கேள்வி கூட கேட்டிருக்க முடியாது. ஆமாம் அப்படித்தான் என்ன செய்துவிட முடியும் என்றுகூட கேட்டிருப்பார்கள்.

கோச்சிங் மையம் என்பது தனிப்பயிற்சி செண்டர்தான். ஒரு தனிப்பயிற்சி மையம் கிரிக்கெட் போட்டிக்கு 5000 கோடி ஸ்பான்சர் செய்திருப்பதாக பிரபலமான பத்திரிக்கையாளர் திரு உமாபதி கூறுகிறார்.

ஒரு தனிப்பயிற்சி மையம் 5000 கோடி ரூபாயை ஒரு விளையாட்டிற்கு ஸ்பான்சர் செய்ய முடிகிறது என்று சொன்னால் அதன் வருட வருமானம் எவ்வளவு? அந்த மையத்தின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் யார்? அவர்களது அரசியல் பின்னணி என்ன?

ஒரே நாடு ஒரே தனிப்பயிற்சி மையம் என்கிற நிலைக்கு மாறுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அவர் ஒரு நேர்காணலில் கூறுகிரார்.

இப்படியான, மபியாத்தனமான கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பது உண்மை எனில் அதன் லாபத்தில் பங்கெடுக்கும் அரசியல் சக்திகள் எவை?

அத்தனையும் வெளி வரும்.

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்று எழும் கோரிக்கையில் நமக்கு இடைக்கால உடன்பாடுதான்.

நம்மைப் பொறுத்தவரை நீட் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

பலமற்ற ஒன்றிய அரசு,

பீஹார், கர்நாடகா, மத்தியபிரதேசம், போன்ற மாநிலங்களும் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களும் இப்போது நீட்டை எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் நீட்டிற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும்.

அனிதாக்களும், ஜெகதீஷ்களும், கீர்த்தனாக்களும் மருத்துவர்கள் ஆவார்கள்.

மருத்துவம் மக்களுக்கானதாக மாறும்.

_ புதிய ஆசிரியன் ஜூலை 2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2024 01:13
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.