உங்கள் ஆணவத்திற்கான கடிவாளம் எங்கள் நாற்பது

இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகளும் வந்து விட்டன. இந்த முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கொஞ்சம் விநோதமாக மாறி இருக்கிறது.


காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிகழ்ந்தது. நம்மைப் பொறுத்தவரை மக்கள் மிகத் தெளிவானதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.


தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அவர்களும் ஆட்சியை அமைத்து விட்டார்கள். வென்றவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் என்ன விநோதம் வந்துவிட்டது என்ற கேள்வி இயல்பாகவே எழும்.


வேறொன்றும் இல்லை,


தோற்றுப் போனவர்கள் சோர்ந்து போவதும் வெற்றி பெற்றவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதும்தான் வாடிக்கை. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தோற்றுப் போனவர்கள் மகிழ்ச்சியாகவும் வெற்றி பெற்றவர்கள் மிகுந்த சோர்வோடும் இருக்கிறார்கள்.


எண்கள் என்ன செய்து விடும் என்றுதான் பொதுவாகப் பேசுவோம். சில சுயேச்சைகள் காங்கிரசில் சேர்ந்த பிறகு “இந்தியா” கூட்டணியின் எண்ணிக்கை 240 என்ற அளவைக் கடந்திருக்கிறது. இது அசுர பலத்திலான எதிர்க் கட்சியின் எண்ணிக்கை.


ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 290 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்சம் 272 இடங்கள் தேவை என்கிற நிலையில் இந்த 290 என்பது போதுமானது என்றாலும் ஒரு பலவீனமான எண்.


ஆக, மிகவும் அசுர பலத்தோடு கூடிய எதிர் வரிசையையும் மிகவும் பலவீனமானதொரு ஆளும் வரிசையையும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள் மக்கள்.


ஆளும் கூட்டணியில் இப்போதே தள்ளுமுள்ளுகளைப் பார்க்க முடிகிறது. மாறாக நாளுக்கு நாள் எதிர் வரிசை கெட்டிப்பட்டுக் கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. இந்த மண்ணை நேசிக்கும் எவரொருவரும் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய அம்சம் இது.


இது இப்படி இருக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணி அமோகமாக வென்றிருக்கிறது.


23 உறுப்பினர்களை கையில் வைத்திருக்கக் கூடிய திமுக நினைத்திருந்தால் நிச்சயமாக அதிகார பேரத்தில் இறங்கி இருக்கவும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கவும் முடியும். அதன் மூலம் எஞ்சிய தங்களது ஆட்சிக் காலத்தை இலகுவாகவும் சொகுசாகவும் நகர்த்தி இருக்க முடியும். 


எதிர்ப்பது என்பது அவர்களுக்கு இன்னும் மேலதிகமான குடைச்சல்களைக் கொண்டுவரக் கூடும். இவற்றை நன்கு அறிந்திருந்தாலும் கொண்ட கொள்கையில் திமுக உறுதியோடு நிற்கிறது. கட்சித் தலைமை மட்டுமல்ல அடிமட்டத் தொண்டனும் சலனமே இல்லாமல் உறுதியோடு நிற்பதையும் பார்க்க முடிகிறது.


இதற்காக திமுகவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் ஒரு வணக்கத்தையாவது சொல்லாவிட்டால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.  


இந்தத் தேர்தல் இந்திய மண்ணிற்கு சலனமற்று களமாடுகிற  சில தலைவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது. பல காலம் ”பப்பு” என்று பகடி செய்யப்பட்ட ராகுல் இந்தியாவின் ஆகப் பெரும் இளம் தலைவராக எழுந்து நிற்கிறார். இதை அமித்ஷாவே உள்ளுக்குள் ஒத்துக் கொள்வார்.


அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி, பிரியங்கா போன்ற இளைய தலைவர்களின் வரவு நமக்கு தெம்பைத் தருகிறது. இவர்கள் அனைவரும் தங்களது கூட்டணியின் தலைவராக, மூத்த சகோதரனாக ஸ்டாலின் அவர்களை உச்சி முகர்வதும், இடதுசாரிகளின் பங்களிப்பை உணர்ந்தவர்களாகவும் மதிப்பவர்களகவும் இருப்பதும், தன் உயரம் உணர்ந்தவராக ஸ்டாலின் இருப்பதும் இந்த மண்ணை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திகள்.


இவ்வளவு புளங்காகிதம் அடைவதற்கு கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இன்னும் ஒரு 25 இடங்களை கூடுதலாக மக்கள் பாஜகவிற்கு வழங்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்?


சுயேச்சைகளையும் சில அரசியல் சிதறல்களையும் இலகுவாக கொள்முதல் செய்திருப்பார்கள். நினைத்ததை எல்லாம் செய்திருப்பார்கள். என்ன செய்ய நினைத்தார்கள் என்பதை முன்னாள் ஆளுநர் சகோதரி தமிழிசை அவர்களின் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் குறித்த ஆதங்கத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.


நாற்பது இடங்களையும் திமுக கூட்டணிக்கு அளித்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் ஒரு மிகப் பெரிய தவறை செய்து விட்டதாக முதலில் கூறினார். ஆட்சி அமைக்க முடியாத ஒரு கூட்டணிக்கு வாக்களித்து விட்டார்கள் என்றார். 


எப்போது பார்த்தாலும் எதிர் நிலையை எடுக்கிற தவறையே செய்வதாக ஸ்டாலினை குறை சொன்னார்.


அதற்கு அடுத்ததாக இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேண்டீனில் வடை சாப்பிடுவதைத் தவிர  என்ன செய்துவிட முடியும் என்று புலம்பினார்.


தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் கடந்த காலத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை கோவையில் நடந்த வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் பட்டியலிட்டார் ஸ்டாலின். உங்கள் ஆணவத்தை அடக்க அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை “Wait and see” என்று அவர் சொன்னபோது நமக்கே கொஞ்சம் சிலிர்க்கத்தான் செய்தது.


தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ”ஜெய் ஸ்ரீராம்” சொன்னால் நம்மைத் தாக்குவார்கள். உயிருக்கு உயிராக நாம் மதிக்கும் “ஜெய் ஸ்ரீராம்” நாம் உச்சரிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது தகுதிக்கு மிகக் கீழே இறங்கி பரப்புரை செய்தார் மோடி.


அயோத்தியே அவர்கள் கையைவிட்டுப் போனதும் அவர் ராமரை உறவு துறப்பு செய்துவிட்டு “ஜெய் ஜெகனாத்” என்று முழங்க ஆரம்பித்து விட்டார். நாளை ஒடிசா அவர்கள் கையை விட்டுப் போனால் ஜெகநாதரையும் அவர் உறவு துறப்பு செய்வார். 


இதன் மூலம் கடவுளும் மதமும்கூட இவர்களது வாக்கிற்கான கருவிகள்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக அம்பலப்பட்டு நிற்கிறது.


அனைத்து மதங்களையும் தாங்கள் சமமாகப் பார்ப்பதாக மோடி இப்போது கூறி இருக்கிறார். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததில் ”நாற்பதற்கு நாற்பதின்” பங்கு அதிகம் என்பதை சகோதரி தமிழிசைக்கும் மக்களுக்கும் நாம் தொடர்ந்து  எடுத்து சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.


”இந்திய அரசமைப்பு சட்டப் புத்தகத்தை” பயபக்தியோடு மோடி வணங்கி முத்தமிடுகிற மாதிரி ஒரு புகைப்படம் சமீபத்தில் வைரலானது. 


400 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கூறினார்.


ஆனால் அதே சட்டப் புத்தகத்தை மோடி பணிந்து வணங்கினார். அப்படி அவரைப் பணிய வைத்தது இந்த நாற்பதுக்கு நாற்பது. 


பாங்குச் சத்தம் குறைந்திருக்கிறது. வெற்றி பெற்றதும் பாங்குச் சத்தமே இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்றார் யோகி.


இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிற சந்திரபாபு நாயுடு ஆதரவோடுதான் இவர்களால் ஆட்சியை அமைக்க முடிந்திருக்கிறது. இந்த நெருக்கடியை பாஜவிற்கு கொடுத்திருப்பது இந்த “நாற்பதுக்கு நாற்பது”


இந்த நாற்பதுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது.


2010 வாக்கில் அருந்ததி ராய் அவர்கள் மீது போடப்பட்ட ஒரு வழக்கினை தூசு தட்டி கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்கூட எடுக்கவில்லை. அதற்குள் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது அரசு.


நாங்கள் மாறவில்லை, மாற மாட்டோம். எங்கள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்போம் என்று அவர்கள் உணர்த்தத் தொடங்கி இருக்கிறார்கள்.


கருத்துரிமையின் குரல்வளையில் கையை வைத்து விட்டார்கள். இந்தியா கூட்டணி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


குஜராத்தில் ஒரு தொழிற்சாலையை அமெரிக்காவின் நிறுவனத்தோடு இணைந்து நிறுவ இருக்கிறார்கள். 2.5 பில்லியன் டாலர் மதிப்பீடு. இதில் இரண்டு பில்லியன் டாலரை ஒன்றிய அரசும் மாநில அரசும் மானியமாக வழங்கும். எஞ்சிய அரை பில்லியன் டாலரை அந்த அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்யும்.


ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. எனில், 250 கோடி டாலர் மதிப்பீட்டில் ஒரு தொழிற்சாலை அமைகிறது. அதில் 200 கோடியை மாநில அரசும் ஒன்றிய அரசும் மானியமாக வழங்குகிறது. 50 கோடியை அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது.


அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது. நமது அரசுகள் கூட்டாக முதலீடு செய்ய வில்லை. 50 கோடி முதலீட்டிற்கு நாம் கொடுக்கும் நன்கொடை 200 கோடி. 


கேட்டால் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.


இதைக் கேள்வி கேட்பவர் இன்றைய ஒன்றிய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமி. நன்கொடையாக நாம் தரும் அந்த 200 கோடி டாலரை மட்டும் நாம் முதலீடு செய்தாலே 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரலாமே என்று கேட்கிறார்.


ஆட்சிப் பொறுப்பேற்று அவைக்குள் செல்வதற்கு முன்னமே தொழிலாளிகளின் அடிவயிற்றில் காலை வைத்திருக்கிறது அரசு.


தொழிலாளிகளிடம் பிடிக்கும் பி.எப் தொகையைக் கட்டாமல் வைத்திருந்தால் முதலாளி கட்ட வேண்டிய அபராதத் தொகையை கணிசமாகக் குறைத்திருக்கிறது அரசு. அப்போதுதான் முதலாளிகள் இலகுவாக தொழில் நடத்த முடியும் என்று அரசு கூறுகிறது. 


மாதா மாதம் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஒரு குறிப்பிட்டத் தொகையை அவரது சம்பளத்தில் இருந்து பிடிப்பார்கள். எவ்வளவு பிடிக்கிறார்களோ அதே அளவு தொகையை நிர்வாகம் போடும். அதை பி.எப் அலுவலகத்தில் ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும்.


அதாவது 1,000 ரூபாய் ஊழியரிடம் இருந்து பிடித்தால் 1,000 ரூபாய் நிர்வாகம் போட்டு 2,000 ரூபாயை ஊழியரின் கணக்கில் கட்ட வேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்தத் தொகையை மாதா மாதம் ஊழியரின் கணக்கில் கட்டிவிட வேண்டும்.


இனி இப்படி மாதா மாதம் கட்டத் தேவை இல்லை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஊழியனின் பணத்தை வேண்டுமளவிற்கு உருட்டிக் கொள்ளலாம் என்று வாய்ப்பளித்திருக்கிறது.


என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார் சகோதரி தமிழிசை.


உங்களது ஆணவத்திற்கு எங்களது உறுப்பினர்கள் கடிவாளம் போடுவார்கள் என்கிறார் ஸ்டாலின்.


மேற்சொன்னவை அனைத்தும் அவர்களது ஆணவத்தின் தெறிப்புகள்தான் என்பதை ஸ்டாலின் அவர்களுக்கும் இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.


அவர்களைக் கொஞ்சம் பதட்டத்தோடே வைத்திருங்கள். இல்லாது போனால் அவர்கள் மக்களை பதட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2024 23:11
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.