வாடர்லூ போன நெப்போலியன் – போனி வெண்ட்டூ வாடர்லூ வெ அய் யாஆ

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதான வாழ்ந்து போதிரேயில் இருந்து அடுத்த  ஈடு

 

அப்பாவித்தனத்தை வெளிச்சம் போடும் அவனுடைய முகபாவத்தை நடாஷா ரொம்பவும் ரசித்துப் புன்னகை செய்தபடி இருந்தாள்.

 

நூலகரும், அலமாரிகளும் இல்லாவிட்டால் அவள் வேறு விதமாகச் செயல்பட்டிருப்பாள் என்று திலீப் செய்ய முற்பட்ட  கற்பனை அகல்யாவை பாந்த்ராவில் சகலரும் பார்க்க அவன் நிதானமாக முத்தமிடுவதில் நீட்சி பெற, பிஸ்கட் சாஸ்திரியைப் புட்டத்தில் உதைத்துத் தள்ளி முடித்து வைத்தான் அவன்.

 

வெறுப்பும் வேட்கையுமாக அவனுக்குள்ளே விநோதமான மிருகம் ஒன்று உட்புகுந்திருந்தது அந்தப் புழுக்கமான பகல் வேளையில். புத்தகங்களைக் கையில் வாங்கிப் பத்திரமாக, துணி விரித்த தன் மடியில் வைத்துப் புரட்ட ஆரம்பித்தாள் நடாஷா.

 

பெட்டிகளுக்குள் இருந்து முதலில் எடுக்கப்பட்ட புத்தகம் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதில், பிரான்ஸ் நாட்டில் மார்செயில்ஸ் நகரில் அச்சுப் போடப்பட்ட குழந்தைகள் கதைத் தொகுப்பாக இருந்தது. கையில் வாங்கிப் பார்த்த நூலகர், எத்தனை அபூர்வமான நூல் பாருங்கள், முக்கியமாக இந்தக் குழந்தைப் பாடல்கள். எனக்கு மிகப் பிரியமானவை இவை.

 

அவர் சொல்லி விட்டுப் பாட ஆரம்பித்தார் –

 

Bonny was a warrior | Way-ay-ah                 போனி ஒரு படைவீரன் வேஐ ஆ

Boney went to Waterloo| Way-ay-ah,           போனி வாடர்லூ போனான் வேஐ ஆ

Boney was defeated | Way-ay-ah,                 போனி தோற்று ஓடினான் வேஐ ஆ

 

நெப்போலியன் இங்கிலாந்தோடு செய்த யுத்தத்தில் தோற்றது குறித்து மனதை உருக்கும் பாடல் இது, கேட்டிருப்பீர்களே?

 

நூலகர் வினவ, ஆம் என்றாள் நடாஷா.

 

அப்போது, நீங்களும் சேர்ந்து பாடுங்களேன்.

 

நூலகர் வற்புறுத்தினார். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஏற்று வாங்கிப் பாடிய துணை நூலகரும் குரல் கம்ம, அழத் தொடங்கினார்.

 

நீங்கள் புத்தகங்களைப் பாருங்கள், இந்தச் சூழலில் நான் அழுது அழுதே, துக்கத்தில் கழுத்து வெடித்து இறந்து விடுவேன் போல இருக்கிறது.

 

நூலகரும் துணைவரும் தனித்தனியாகச் சொல்லி வெளியே போக, மற்ற ஊழியர்களும் வெளியே கதவைப் பகுதி மூடி, இன்று உலகத் துக்க தினமாவதால் நூலகம் பிற்பகலில் இயங்காது என்று சொல்லி மற்றவர்களை அனுப்பி விட்டு, வாசற்படிகளில் காத்திருந்தார்கள். அவர்கள் அத்தரும் புனுகும் ஏலமும் மணக்கும் புத்தகங்கள் பற்றி ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

பிரான்சில் 1900-களில் பள்ளி வகுப்புகளுக்கான அறிவியல், வரலாறு, கணிதம், புவியியல் என்று ஏகப்பட்ட பிரஞ்சு மொழிப் பாடப் புத்தகங்கள் அந்தப் பெட்டியில் இருந்தாலும் அவற்றை கேரளத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக எதுவும் கிடைக்கவில்லை.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2024 05:31
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.