உள்ளிப்பூண்டு மணக்கும் ஓர் ஊர்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த  சிறுபகுதி

 

 

 

 

 

 

சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை.  டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும்  ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக் கொடியில் பறக்கும் பூமி அது. கேரளா போல.

 

பெரியம்மா ஆப்பிரிக்கப் பயணம் போக, இங்கே வந்த தூதுவர் வைத்தாஸ் ரெட்டி மூலம் அழைப்பு வந்திருக்கிறதாக திலீப்புக்குத் தெரியும். அப்படியே ஐரோப்பாவிலும் பயணப்பட, தில்லியில் மினிஸ்டர் கணவர் மூலம் அவள் முயற்சி எடுப்பதும் தெரியும். கொங்கணிப் பெண் சரச விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரியப்பா அவளை ஐரோப்பா அனுப்ப மும்முரமாக முயற்சி செய்வார் என்பது கூடத் திலீப்புக்குத் தெரியும்.

 

பத்து நாள் என்றால் பத்து நாள். பெரியம்மா உலகம் சுற்ற, பெரியப்பா நேரு நினைவுகளை கொங்கணி வாசனை மணக்க மணக்க அந்தச் சிவத்த ரெட்டை நாடிப் பெண்ணின் தேகத்தில் இருந்து ரசனையோடு அகழ்ந்தெடுப்பார். நடாஷா தயவில் சோவியத் பயணமும் பெரியம்மாவுக்கு வாய்த்தால், கொங்கணி மாமிக்கு அவர்  ஒரு நல்ல நாளில் கர்ப்ப தானமும் செய்யக் கூடும். திலீபுக்கு எல்லாம் தெரியுமாக்கும். ஜனனியிடம் சொன்னால் சிரிப்பாள்.

 

யாரும் எங்கேயும் போகட்டும். யாரோடும் கூடிக் குலாவட்டும். அவனுக்குச் செய்ய வேலை இருக்கிறது. நடாஷாவை எரணாகுளம் கூட்டிப் போகணும்.

 

மழை நேரத்து ஆட்டோ கிடைக்க வழக்கம் போல் சிரமமாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயம் – ஆட்டோ டிரைவருக்கு நல்ல மனது இருந்து, சவாரி போகலாம் என்று முடிவு செய்தால், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதமே இல்லாத இடம். சரியான தொகைக்கு மேல் ஒரு காசு கூடக் கேட்க மாட்டார்கள் யாரும். அரிவாளும் சுத்தியலும் கற்றுக் கொடுத்த சத்திய வழி என்று பெருமிதத்தோடு போன வாரம் ஒரு வண்டியோட்டி சொன்னார். ஆனால் பாதி வழியில் அவருடைய ஆட்டோ ரிக்‌ஷா நின்று போனது.

 

ஆலப்புழை போகணும். ஆட்டோ வருமா?

 

கண்ணில் பட்ட வாகனத்தை நிறுத்த, ஓட்டி வந்தவன் எதிர்க் கேள்வி கேட்டான் –

 

சேட்டன் அங்கே ஓட்டலில் தங்கியிருக்கற மதாம்மாவைக் கூட்டிட்டு இங்கே வந்து மயில்பீலி தூக்கம் படிப்பிக்கணும். அதானே? அலைச்சல் இல்லாம மதாம்மா இங்கேயே ஜாகை ஏற்படுத்திக்கலாமே? பெட்ரோல் மிச்சம் கூட.

 

அது சரி, ஆனால் இன்னிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்.

 

திலீப் கர்ம சிரத்தையாக விளக்கம் சொன்னான்.

 

ரயில்வே ஸ்டேஷனா, அதுவும் பக்கம் தான். டிரைவர் உற்சாகமாகக் கூறினான்.

 

ஆனா நான் போய்க் கூட்டிப் போகணுமே.

 

விடாது, திலீப் மேலும் விளக்கினான்.

 

நல்ல வேளை, பஸ்ஸில் ஆலப்புழை போய் அங்கே ஓட்டலில் இருந்து பொடி நடையாக நடாஷாவை ரயில் ஏறக் கூட்டிப் போகலாமே என்று கேட்காமல் ஆட்டோ திலீப்பை ஏற்றிக் கொண்டு ஆலப்புழை கிளம்பியது.

 

நடாஷா இருந்த ஆலப்புழை ஓட்டலுக்கு முன் சேறும் சகதியுமாகக் கிடந்தது.  அங்கங்கே மரப் பலகையைத் தரையில் இட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதன் மேல் ஜாக்கிரதையாகக் கால் வைத்த, தலை குளித்த பெண்கள் நோட்டுப் புத்தகம் சுமந்து பக்கத்தில் காலேஜுக்கோ,  தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கோ போய்க் கொண்டிருந்தார்கள். மழையும் வெள்ளமும் சகதியும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கும் அவர்களுக்கு.

 

திலீப்பும் மழை சுழன்றடிக்கும் பிரதேசத்தில் இருந்து வருகிறவன் தான். மராத்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் மழையை வரவேற்பது சகல கவனமும் எடுத்து. திலீப்புக்கு அதில்  அசாத்தியப் பெருமை. மழைக்காலத்தில் பம்பாய் எலக்ட்ரிக் ரயிலில் போவதை விடவா இதெல்லாம் பெரிய விஷயம்?

 

இல்லல்லோ என்று எதுக்கோ சொல்லி தங்களுக்குள் சிரித்துப் போன பெண்களைத் தொடர்ந்து திலீப் மரப் பலகையில் கால் வைக்க, வழுக்கி சேற்றில் இரண்டு காலும் அழுத்த நின்றான்.

 

நல்ல வேளை. ஓட்டல் மேனேஜர் அவனைப் பார்த்திருந்தார். மதாம்மா அகத்து உண்டு என்று எதிர்பார்ப்புகளோடு தினம் செய்தி அளிப்பதை அவர் கடமையாக ஆற்றுகிறவர். இவன் நடாஷா இருந்த அறைக்குள் போய் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அப்புறம் அவளோடு வெளியே போகும் போது எதற்காகக் கூர்ந்து பார்க்கிறார்,  எங்கே பார்க்கிறார் என்று திலீபுக்குத் தெரியும். அவரைப் போய்க் கேட்கவா முடியும்? அதுக்கெல்லாம் பத்து நிமிஷம் போதாதா என்று பதிலுக்குக் கேட்கக் கூடியவர். போதும் தான்.

 

 

மாடிப் படிக்கட்டில் விரித்த எத்தனையோ வருஷம் பழையதான கம்பளத்தில் ஈரக் கால்களை மணலோடு ஒற்றி ஒற்றிக் கடந்து, அவன் இரண்டாம் மாடியில் நடாஷா இருந்த அறைக்கு முன் நின்றான்.

 

ஆகக் குறைந்த உடுப்பில் கதவைத் திறந்தாள் அவள். அந்த அறையே உள்ளிப் பூண்டு வாடை சூழ்ந்து இருந்ததாக திலீப் நம்பத் தொடங்கி இருந்தான்.

 

உட்காரு, குளிச்சுட்டு வந்துடறேன்.

 

நடாஷா உள்ளே போனாள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2024 22:20
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.