பயணம் முடிந்து திரும்புவதற்குள் அடுத்தது தொடங்கியது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

 

இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று கொச்சு தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள்.

 

ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம். எதிரும் புதிருமாக் உட்கார்ந்து ஒருவர் கண்ணில் மற்றவர் ஆழ்ந்து நோக்கியபடியான பேச்சு மும்முரத்தில் உணவும் பானமும் கவனத்தில் கொள்ளப்படாமல் நழுவிப் போக, அவர்களின் முணுமுணுத்த குரலும் அடிக்கடி எழும் சிரிப்பும் அந்த அறையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.

 

சங்கரன் முசாபர் அலியையும், மெட்காஃபையும் அவனுடைய விநோதமான காரையும்  பரிச்சயம் செய்து கொண்டபோது, கார்ட்டூன் சித்திரங்களாக கொச்சு தெரிசா வசந்தியையும், பகவதிப் பாட்டியையும், பகவதிக் குட்டியையும், பிடார் ஜெயம்மாவையும் அறிமுகப் படுத்திக் கொண்ட பகல் உணவு நேரம் அது.

 

கொச்சு தெரிசா இனி என்றும் பிரிட்டன் திரும்பிப் போகும் உத்தேசத்தில் தான் இல்லை என்றாள்.  இந்த மண்ணுக்குத் தன்னை இழுத்த சக்தி, காலச் சக்கரத்தின் சுழற்சியில், புறப்பட்ட இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்க உத்தேசித்திருக்கிறது என்று அவள் நம்பத் தொடங்கி இருந்தாள் என்பது சங்கரனுக்கு வியப்பான செய்தியாக இருந்தது. அன்று புறப்பட்டவள் அவள் இல்லை தான். இன்று திரும்புகிறவளும் அவள் இல்லை என்று மனதில் படுவதாகச் சிரித்தபடி விளக்கினாள் கொச்சு தெரிசா.

 

தேடி வந்து யார்க்‌ஷயர் பகுதி கால்டர்டேலுக்கு வந்து அவள் வீட்டு முகப்பில் ஆடிய மயிலும், சாவக்காட்டு வயசனின் பாழடைந்த வீட்டில் கட்டி இருந்த பசுவும், ராத்தூக்கத்தில் இருந்து எழுப்பி அவளையும் கலந்து கொள்ளச் சொல்லிக் கேட்ட  மூங்கில் குரிசு ஊர்வலமும், அச்சில் கொண்டு வர வேண்டிய வலிய முத்தச்சன் ஆன ஜான் கிட்டாவய்யனின் கீர்த்தனங்களும், இந்த ஊர் அம்பலக் குளக்கரை மனதில் நிறைந்து கவிந்து சதா நீர்வாடை மூக்கில் படுவதும் இன்னும் எதெல்லாமோ அவளை இங்கேயே இருக்கும்படி  வேண்டியும் கட்டாயப்படுத்தியும் மன்றாடியும் கேட்டுக் கொண்டிருப்பவை.  அது கொச்சு தெரிசாவுக்கு அர்த்தமாகும்.

 

இங்கே இருக்கச் செலவுக்குத் தாராளமாகத் தன்னிடம் பணம் இருக்கிறது என்றாள் கொச்சு தெரிசா. தேவை என்றால் கால்டர்டெல்லில் மீனும்-வறுவலும் விற்கும் கடையையும் அங்கே ரெண்டு தலைமுறையாக இருக்கும் வீட்டையும் விற்றுப் பணம் அனுப்ப முசாபர் வழி செய்வான். சில லட்சங்கள் இந்திய ரூபாயில் அது இருக்கும். இங்கே பெரிய பங்களா, அம்பாசிடர் கார் என்று சொகுசாக நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட அது வழி செய்யும். சிக்கனமாகச் செலவழித்தால், அதற்கு மேலும் நீடிக்கும்.

 

இந்தத் தீர்மானம் எல்லாம் தன்னைத் தெரிசா சந்திக்கும் முன்னே எடுத்திருந்தாள் என்பதில் சங்கரனுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. அவள் பயணப்பட்ட பாதை தன் வழியில் இணைவது தவிர்க்க முடியாதது என்றாகி இருந்தது அவனுக்கு வியப்பையும் சற்று பயத்தையும் உண்டாக்கியது.

 

கொச்சு தெரிசா அரசூர் போயிருக்கிறாள்.  சின்னச் சங்கரனின் பூர்வீக வீட்டை வாசலில் இருந்து பார்த்திருக்கிறாள். உள்ளே வரச் சொல்லி யாரோ முது பெண் தன்னை அழைத்ததாக நம்புகிறாள். சங்கரனின் ஆருயிர் நண்பன் தியாகராஜ சாஸ்திரி தன்னிச்சையாக அரசூரில் கொச்சு தெரிசாவுக்கு எல்லா உதவியும் செய்திருக்கிறார். அது மட்டுமில்லை, கொச்சு தெரிசாவின் மூத்த பாட்டன் எழுதிய கிறிஸ்துவ கீர்த்தனைகளைப் புத்தகமாகக் கொண்டு வரத் தகுந்தவர்களை மதுரையில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதெல்லாம் சங்கரன் செய்ய வேண்டிய காரியங்களாச்சே.

 

அரசூர் பற்றி மட்டுமில்லை, அம்பலப்புழையில் பரம்பரை வீட்டை வாங்கும்படியும் மேல்சாந்தியின் மனைவி கொச்சு தெரிசாவுக்குச் சொல்லியிருக்கிறாள்.  சங்கரனிடமும் வசந்தியிடமும் சொன்னது தான் அது. பகவதிக் குட்டி வழித் தோன்றலாகத் தன்னையும், பகவதியின் சகோதரன் ஜான் கிட்டாவய்யனின் பரம்பரையாக கொச்சு தெரிசாவையும் அடையாளம் கண்டவள் அவள்.  இன்னும் ஏதோ தன்னையும் கொச்சு தெரிசாவையும் ஒரு கோட்டில் இணைக்க உண்டு. அது என்ன?

 

என்ன பலமான யோசனை?

 

பகல் உணவு முடித்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கொச்சு தெரிசா கேட்டாள்.

 

நாளை அரசூர் போகணும். அங்கேயிருந்து மதராஸ், பிறகு டெல்லி. வீடு. ஆபீஸ்.

 

சங்கரன் சொன்னபடி தன் அறைக்கு முன் நின்றான். ஒரு வினாடி அவனைப் பார்த்து விட்டு கொச்சு தெரிசா அடுத்த அறைக்கு நடந்தாள்.

 

இந்த உறவு பகல் சாப்பாட்டோடு முடிகிறது. இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே என்று அவன் சொன்னதாக அவளுக்கு அர்த்தமாகியது.

 

அவள் நாளைக்கு இந்த அறையைக் காலி செய்ய வேண்டும். இந்த ஊரிலோ பக்கத்திலோ மாத வாடகைக்கு வீடு பார்க்க வேண்டும்.  மூத்த பாட்டனின் புத்தகம் தயாராகிக் கொண்டிருப்பதாக மதுரைத் தமிழ்ப் பண்டிதர் எழுதியிருந்தார். மதுரைக்கு ஒரு தடவை போய் வரணும். பரம்பரை வீட்டை வாங்க  முன்னேற்பாடாக அங்கே இயங்குகிற நாட்டுப்புறக் கலை ஆராய்ச்சி மையத்தை வெளியே அனுப்ப வேண்டும். நடக்கிற காரியமா அது?

 

அந்த வீட்டை வாங்க, மேல்சாந்தியின் மனைவி சொல்லியபடி நான்கு பேர் தயாராக இருக்கிறார்கள். அவளும், சங்கரனும் தவிர ரெண்டு பேர். முதலாவதாக, அங்கே மயிலாட்ட ஆபீஸ் வைத்திருக்கும் மினிஸ்டர் மனைவி சியாமளா. அடுத்து, நேற்று விழாவில் பேசிவிட்டுப் போன ஆப்பிரிக்க நாட்டுத் தூதர் வைத்தாஸ் ரெட்டி.  இரண்டு பேரிடமும் கொச்சு தெரிசா பேசிவிட்டாள். வைத்தாஸ் என்கிற நடு வயதை எட்டிய அந்த கனவான் கொச்சு தெரிசா அந்த வீட்டையோ, அம்பலப்புழையில் வேறு வீட்டையோ, இல்லை அந்த ஊர் முழுவதையுமோ வளைத்துப் பிடித்து வாங்குவதில் ஒரு ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்து விட்டார். நேற்றைக்குக் காலையில் அவரை இதே ஓட்டலில், கீழே முதல் மாடியில் இருந்த அறையில் ஐந்து நிமிடம் சந்தித்தபோது அவர் கொச்சு தெரிசாவுக்கு இப்படி கண்ணியமும் கருணையுமாக வழிவிட்டு விலகினார்.

 

ஆனால் சியாமளா கிருஷ்ணன் என்ற மினிஸ்டர் மனைவி அப்படியானவள் இல்லை. போன வாரம் மதராஸ் போகும் முன் போய்ச் சந்தித்தபோது, உன்னோடு பேசி வீணாக்க எனக்கு நேரமில்லை என்று துரத்திவிட்டாள்.  ஐரோப்பியச் சாயலில் ஆறடி உயரத்தில் அவள் எதிரே ஒரு இளம்பெண் உட்கார்ந்து திகைத்தபடி பார்க்க, சியாமளா இரக்கமே இல்லாமல் விரல் சுட்டி வாசலைக் காட்டி கொச்சு தெரிசாவை வெளியே அனுப்பினாள் அப்போது. இன்னும் அது மனதில் வலித்தாலும் மேல்சாந்தி மனைவி நல்வாக்கு சொன்னபடி நல்லதே நடக்கப் போகிறது என்று திடமாக நம்புகிறாள் கொச்சு தெரிசா.

 

சோழி உருட்டிப் பார்த்துத்தான் இப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறாள் அந்த முதுபெண். அவள் இன்னொன்றும் சொன்னாள். அதுவும் நடக்கக் காத்திருக்கிறாள் கொச்சு தெரிசா.

 

அரையுறக்கத்தில் பொழுது நழுவ, கைக்கடியாரத்தில் மணி பார்த்தாள். பிற்பகல் ரெண்டே முக்கால் மணி. மழையில் வெளியேயும் போகமுடியாது. சும்மா நாற்காலி போட்டு உட்கார்ந்து சுவரைப் பார்த்தபடி இருக்கவும் முடியாது. சுகமாகப் படுத்து உறங்கினாலோ?

 

சுவருக்கு நடுவே மர பீரோவை அடுத்துத் திரை போட்டு வைத்திருந்த இடத்தில் பார்வை நிலைத்தது. அங்கே காற்றில் திரை விலக, மரக் கதவு தட்டுப்பட்டு திரும்பவும் அது திரை மறைவில் ஆனது.

 

இந்த அறை அடுத்த அறையோடு சேர்ந்த கூட்டு அறை என்ற accompanying room எகாம்பனியிங் ரூம் என்று அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. குழந்தை குட்டியோடு வரும் பெரிய குடும்பங்களில் குழந்தைகளை இங்கேயும் அடுத்த அறையில் பெரியவர்களையும் தங்க வைத்துச் சிறியவர்கள் மேல் கவனமும் கட்டுப்பாடுமாக இருக்கவும் வழி செய்யும் இந்த மாதிரி அறைகள் இங்கிலாந்து தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதி என்றாலும் இங்கே அப்படி ஒரு அமைப்பைப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. குழந்தை தங்கும் அறையில் நான். அடுத்த அறையில் என்னைக் கண்காணிக்கும் பெரியவர்?

 

அந்தக் கதவைத் திறந்து பார்க்க, கட்டிலில் சிரசாசனம் செய்தபடி இருந்த சங்கரன் கண்ணில் பட்டான். முழங்கால் வரை வரும் உடுதுணியோடு, மேலே சட்டையில்லாமலும் மேல்கூரைக்குக் கால் உயர்த்தியும் நின்ற அவனைப் பார்த்ததும் சிரிப்பும் வெட்கமும் ஏற்படக் கதவை அவசரமாகத் திரும்ப அடைத்தாள் அவள்.

 

தாழ்ப்பாளைப் போடுவதற்குள் அந்தக் கதவு மறுபடி திறந்தது. சங்கரன் தான். கால்களுக்கு இடையே தார் பாய்ச்சி இறுகக் கட்டிய உடுப்பில் பதிந்த கண்ணை விலக்கி அவனைப் பார்த்துச் சிரிப்பில் என்ன விஷயம் என்று கேட்டாள் கொச்சு தெரிசா. அவன் இன்னும் நெருங்கி வந்து நின்றான். சங்கரன் மார்பிலிருந்து உருளும் வியர்வைத் துளியை விரல் மேல் வாங்கி உள்ளங்கையில் வைத்தபடி அவள் வசீகரமாகச் சிரித்தாள்.

 

கொச்சு தெரிசாவை அணைத்தபடி அங்கேயே நின்றான் சங்கரன். அவள் விலகினாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2024 22:28
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.