சோபான சங்கீதம் கேட்கச் சகிக்காது -கிழ விமர்சகர் அபிப்பிராயம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் 4 – அடுத்த சிறு பகுதி

 

 

 

சின்னச் சங்கரன் குளித்து, புட்டும் கடலையும் காலை ஆகாரமாகக் கழித்து பந்தலில் வந்து நின்று எடக்க தட்டி, மாரார் பாடிய சோபான சங்கீதத்தைக் கேட்டபடி கொஞ்ச நேரம் நின்றான்.

 

கேரளா பக்கத்தில் சோபான சங்கீதம் என்று பாடுவார்கள். சகிக்காது.

 

இப்படி தில்லி ப்ரஸ் கிளப் கேண்டீனில் மங்களூர் போண்டா சாப்பிட்டு விட்டு வெற்றிலைச் சீவலைக் குதப்பிக் கொண்டு, பல் இல்லாத ஒரு கிழவர், க்ரிட்டிக்காம் அவர், எந்த பீ அள்ளும் பத்திரிகைக்கோ வியாசமெழுதி மயிரைப் பிடுங்குகிற கிழம், அந்த உச்சைக் கிறுக்கன் இப்படிப் பிதற்றிக் கொண்டிருப்பது நேரம் கெட்ட நேரமாக நினைவில் வந்தது.  கிழம் இங்கே வந்திருந்தால், ஓரமாகக் கூட்டிப் போய் கையைக் காலை உடைத்து காதை அறுத்திருக்கலாம் என்று சங்கரனுக்கு தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட கோபம் வேறு தாறுமாறாக வந்தது. அறுத்த காதை என்ன செய்வது என அடுத்த யோசனையும் கூட.

 

மழைக்கு நடுவே வானத்தில் குறுக்கே கோடு கிழித்துப் பிரகாசமாகக் கிறுக்கிப் போன மின்னல் சங்கரனை தங்குமிடம் போய் உட்காரச் சொன்னது.

 

ராஜா உடுப்புலே ஒருத்தர்.

 

அரண்மனை ஜோசியர் சங்கரனைக் கும்பிட்டுக் கேட்டார்.

 

தில்லிக் கிழம் பற்றிய சினம் சின்னாபின்னமாகி மறைய அவரிடம் உபரி தகவல் கேட்க ஆரம்பித்த வினாடி வானமே பிய்த்துக் கொண்டு விழுந்த மாதிரி இடிச் சத்தம்.

 

யந்திரம் நிறுத்தினது என்ன ஆச்சோ. பார்த்துட்டு வரேன்.

 

ஜோசியர் அவசரமாக மழையில் நனைந்தபடி ஓட, யாரோ குடையோடு வந்து சங்கரனிடம் மரியாதையோடு நீட்டினார்கள். சர்க்கார் ஊழியராகத்தான் இருக்க வேண்டும். என்ன தான் கொடி பிடித்து முத்ரா வாக்கியம் முழக்கி எதிரெதிரே நின்று வர்க்கப் போராட்டம் நடத்தினாலும் ஒரு மழை, புயல், உக்ரமான வெய்யில் காரணமாக வரட்சி, அப்படி ஒன்று காரணமாக எல்லோருக்கும் விசேஷ அலவன்ஸ் அறிவித்து, வரத் தாமதம் என்றால் சர்க்கார் ஜீவனக்காரர்கள் காந்தத்தால் கவரப்பட்ட இரும்புத் துகள்களாக ஒற்றைக் கெட்டாக ஈஷிக் கொள்வார்கள்.  அதிலே செண்ட்ரல் என்ன, ஸ்டேட் என்ன?

 

சங்கரன் அறைக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே ஒற்றைக் குழல் விளக்கு எரியாமல், சூரியன் தொடாமல், இருட்டு முழுக்க அப்பியிருந்தது. படுத்து உறங்கப் பாந்தமான சூழல். காலையில் பத்து மணிக்கு உறங்க வெறுப்பு மேலெழுந்து வந்து உடம்பு மறுக்க, அங்கே வந்து விழுந்த மலையாள செய்தித்தாளையும் ஒரு நாற்காலியையும் எடுத்துக் கொண்டு அறைக்கு வெளியே வராந்தாவில் போட்டான்.

 

ஆள் ஒழிந்த அந்தக் கட்டடத்தில், சத்தத்தோடு எழுத்துக் கூட்டிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து காலை வணக்கம் சொல்லும் பெண் குரல் கேட்டது.

 

அவனுக்குத் தெரியும், கொச்சு தெரிசா தான்.

 

உட்கார்ந்த படிக்கே காலை வணக்கம் சொல்லிக் கையை நீட்டினான் சங்கரன். பற்றிக் குலுக்கிய கரத்தை விடாமல், வெளியே போகலியா என விசாரித்தான்.

 

இது என்ன கேள்வி? இவளோடு பேச இன்னும் என்ன எல்லாம் உண்டு?

 

கொச்சு தெரிசா தோளில் மாட்டிய தோல்பையும், கருப்புக் கண்ணாடியும் அவள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது. வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கே உரித்தான, சகல நேரமும் ஊர் சுற்றிப் பார்க்கும் பரபரப்பு இல்லை அவளிடம். போய் இருந்து பார்த்து வருவதை விட, போனேன் வந்தேன் என்று பத்து இடத்தைப் பார்வையிட்டு மனதில் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு போவது அந்தப் பரபரப்பின் வெளிப்பாடு. சங்கரன் அறிவான். எடி, வா, சேர்ந்தே சுற்றித் திரியலாம்.

 

கொச்சு தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2024 00:14
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.