சொல்லென்று வந்து நிற்பது

சொற்கள் உணர்வுகளின் ஒலிவடிவங்கள். சில சொற்கள் முன் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுவது உண்டு. அப்படி ஒரு சொல் அறம்.
https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post.html
இந்தப்பதிவில் என் கதையை பற்றிய ஒரு விவாதம் உள்ளது. அதில் உள்ள அறம் என்னை தொந்தரவு செய்தது. அந்தப்பதிவின் இறுதியிலேயே சரியான இடத்திற்கு வந்துவிட்டேன். ஏன் ஆளுமைகளை புனைவாக்கும் கதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

ஏன் சட்டென்று அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். சுந்தரராமசாமி நினைவிற்கு வந்தார். சில நேரங்களில் அவர் தன் பேச்சின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுவார். மேற்கொண்டு எதுவும் பேசமாட்டார் என்று அவரைப்பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. அது மாதிரியான ஒரு விஷயம் தான் நான் செய்தது.
மிக அண்மையில் வாழ்ந்தவர்களோ சங்ககாலத்தில் வாழ்ந்தவர்களோ யாராயிருந்தாலும் அவரின் வாழ்க்கை எழுத்தாளரின் கச்சா பொருள். அந்த வாழ்வில் இருந்து நம் மனம் உணர்வது இருளாகவோ வெளிச்சமாகவோ இருக்கலாம். நாம் தரிசிப்பது நேர்மறையான உணர்வாகவோ,எதிர்மறையான உணர்வாகவோ இருக்கலாம். அதை தன்னிலையில் படர்க்கையில் என்று எப்படியும் எழுத்தாக்கலாம். இலைமறை காயாக சொல்வதோ, அம்பலத்தில் எடுத்து வைப்பதோ அந்த புனைவு கோருவதை எழுதுபவர்கள் செய்கிறோம். வரலாற்று நிகழ்வுகளோ, மனிதர்களோ காலகாலமாக புனைவாகிக் கொண்டிருக்கிறார்கள். புனைவு எழுதுவது என்பது புறம்பேசுதல் அல்ல.ஒரு எழுத்தாளர் எழுதும் போது  இதற்கெல்லாம் அப்பற்பட்டவர். 
அரசரிலிருந்து எளிய மனிதர்கள் வரை யாராயிருந்தாலும் எழுத்தாளரின் மனதில் விழும் போது எழுத்தின் கருவாகிறார்கள். அந்த படைப்பை விமர்சிக்கலாம். அதை படைப்பே இல்லை என்றும் சொல்லலாம். அதை ஒதுக்கலாம்.
ஆனால் எழுதவே கூடாது என்று இங்கு எதுவுமில்லை. எழுத்தளருக்கு எழுத்தே அறம்.
எழுத்தில் அறம் என்பது நடுநிலை தன்மை. இன்னும் மேலே சென்றால் இருளை சொல்லும் போது குறிப்புணர்த்தலாம். வெளிச்சம் அப்பட்டமானது. எழுத்தாளர் சூடாமணி தன் வாழ்வில் எழுத்தின் வழியே தரிசிக்கும் வெளிச்சத்தை நான்  கதையாக்கியது எந்த வகையிலும் அறமற்ற செயல் ஆகாது.
இனி வரலாற்று ஆளுமைகளை எழுத எனக்கு எந்த தயக்கங்களும் இல்லை.







 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2024 18:32
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.