மிதக்காமல், கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து போனவர்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவல்

 

 

ராஜா பரிவாக கிழவனைப் பார்த்துப் புன்சிரிக்க, அவன் கழுத்தைச் சுற்றி லேஞ்சி ஒன்றை சாவகாசமாகக் கட்டிக் கொண்டு நம்மூர் மேளம் வந்திருக்கு, பாத்தியா மாப்பிள்ளே என்று உற்சாகமாக ராஜாவை விசாரித்தான்.

 

அது சாவு மேளமாச்சே மாமா, உங்க சாவுக்கு அடிச்சு முழக்கினது தானே?

 

சாவா? எனக்கேது அதெல்லாம்?

 

கிழவன் வீம்பாகக் கேட்டு மிதக்க ஆரம்பித்து, இங்கே காலை வீசிப் போட்டு நடப்பதே சாலச் சிறந்தது என்றுபட, கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து முன்னால் போனான்.

 

அவனைப் பின் தொடர்ந்து ராஜா. அவருக்கும் பின்னால் நூல் பிடித்தது போல் அரண்மனை ஜோசியரும் அவருக்கும் சற்றுப் பின்னே, பனியன் சகோதரர்களும் நடந்து போனார்கள். ராணியைப் பெண் கேட்டு உறவும், குடிபடைகளும் சகிதம் எந்தக் காலத்திலேயோ இப்படி ஊர்வலமாகப் போனது ராஜாவுக்கு நினைவு வந்தது. அப்போதும் பின்னால் அரண்மனை ஜோசியர். ரொம்ப இளையவராக இருந்தார் ஜோசியர். களவாணிகளின் சிநேகம் அந்தக் காலத்தில் கிட்டியிருக்கவில்லை. வெகு பின்னால் தான் அதெல்லாம் ஆனது.

 

ராஜா ஒரு வினாடி நின்றார். கூட்டம் அலையடித்துக் கொண்டு ஒரு பரந்தவெளி. பக்கத்தில் மரத்தில் கூரை போட்டு மரத்தால் சுவரும் கதவும் வைத்து ஒரு கட்டிடம். சுற்றியிருந்த வெளியில் நின்று முட்டி மோதுகிற எல்லோரும் கையில் கிண்ணியோ, வெங்கலப் பானையோ, வெள்ளி அல்லது தாமிர கூஜாவோ பிடித்திருந்தார்கள். பெருஞ்சத்தமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததும் அங்கே நடந்தது.

 

இதென்ன இங்கே ஜனம் ஏகத்துக்குக் கூடி இருக்கு? அவனவன் ஏனத்தைத் தூக்கிக் கொண்டு என்னதுக்காக இப்படி இரைகிறான்?

 

ராஜா பனியன் காரர்களை விசாரித்தார்.

 

அதை ஏன் கேக்கறீங்க மாப்பிள்ளே. இது கோவில். பால் பாயசம் காச்சித் தருவாங்களாம். அதை வாங்கிக் குடிக்கத் தான் ஒரே முட்டா ஜனம். அவங்க சம்பிரதாயப்படி நடுப்பகலுக்குக் காய்ச்சி படைச்சுட்டு விக்கறது தான் செய்யணும். வெளியூர்க் கூட்டம் அலைமோதுதா, விடிஞ்சதுமே கோவில் அய்யருங்க அண்டா முழுக்க  பாயசம் காச்சி வச்சுடுவானுங்க. பிறகு ராத்திரி வரைக்கும் பாயசம் விக்கறதும் வாங்கறதும் தான் மும்முரமா நடக்கும். மூணு வேளையும் இதைக் குடிச்சுட்டு வெத்தலை பாக்கு மென்னுக்கிட்டு, அவனவன் நடந்து போகற பவிஷை பாக்கணுமே.

 

கிழவன் உற்சாகமாக அறிவித்தான். ராஜாவுக்குத் தெரியாத ஒரு தகவல் தனக்குத் தெரிந்த கர்வம் அவனுக்கு. அந்நிய மனுஷர்கள் அங்கே நடமாடாமல் இருந்திருந்தால், அவனுடைய வழக்கப்படி தரைக்கு முக்கால் அடி உயரத்தில் மிதந்தபடி வந்திருப்பான் அவன்.

 

விஷயம் தெரிந்தது மட்டுமில்லை, புதுசு புதுசாக இந்த வயசில் கற்றுக் கொண்டு வார்த்தையைச் சரியான இடத்தில் விடுகிறானே எழவெடுப்பான் என்று ராஜாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அது என்ன கண்றாவியோ பீடி, சீரெட்டு. இருக்கட்டும். நல்ல இருக்கட்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2024 19:44
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.