அம்பறாத்தூணி [கவிஞர் இசை கவிதைகள்]

 [மார்ச் 2024 கவிதைகள் இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை]

இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு. 

அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம். 


          கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது    தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர்கள் பறவையின் கண்ணைத் தான் குறி வைக்கிறார்கள். 

அதளபாதாளம்

உறுமிக்கொண்டிருக்கிறது.

சொல்லைப் பிடித்துத்

தொங்கிக்கொண்டிருக்கிறேன்.


பழுக்கக் காய்ச்சிய

சொல்லை எடுத்து

நெஞ்சில்

ஒரு இழு இழுத்தேன்


கூவி வருகிறதொரு சொல்

அதனெதிரே

ஆடாது அசையாது

உறுதி காத்து நிற்பேன்

பிறகு

துண்டு துண்டாவேன்.


கடைசிச் சருகும்

காற்றில் பறந்த பிறகு

சொல்லை சொல்லில் கலந்து குடி.


நஞ்சு திரண்டுவிட்டது

சொல்லே

நீலகண்டன்.


பச்சைநாவி அம்பு என்ற ஒருவகை உண்டு. விஷம் தடவப்பட்டது. அது எந்த வகை அம்பு என்றாலும் அதன் இலக்கு உயிர். சொல்லே நீலகண்டன் என்ற வரியை வாசித்ததும் புத்தகத்தை மூடி வைக்கவே தோன்றும். மறுபடி ஈர்க்கும் வசீகரம் அதே சொல்லிற்கு உண்டு.

விஷமி

புழங்கும் சொல்தான்

என்றாலும் பொருள் தேடிப்பார்த்தேன்

விஷமம் பிடித்த அகராதியொன்று

‘பிரிவு என்பது

இமைப்பொழுதும் நீங்காதிருத்தல்’ என்றது.


இந்தக் கவிதையில் உள்ள சொல்லை வட்சந்தம் [ எதிரில் உள்ள வில்லின் நாணை அறுப்பது] என்று சொல்லலாம். ஒருவனை நிராயுதபாணியாக்கும் ஒன்று இக்கவிதையில் உள்ளது. இசையின் கவிதையை இப்படியும் பார்க்க முடிகிறது. நிராயுதபாணியின் சொல். காலகாலமாக கவிஞன் களத்தில் நிற்கிறான். காலம் அவனுக்கு அளிக்கும் களம். அல்லது அவனே உருவாக்கிக் கொள்ளும் களம். 

ஆனால் கவிஞன் ஒருபோதும் பிறனை நோக்கி ஆயுதம் எடுப்பவன் அல்லன். அதனாலேயே அர்ஜூனன்களின் அம்பில் தெரியும் இன்னொரு முகம் கர்ணனுடையதும் கூட. அவன் எடுத்ததெல்லாம் இருமுக அம்பு.

ஆனால் கர்ணன் விடுத்த எல்லா பாணங்களும் தன்னை நோக்கியவையே. அவன் தொடுத்த கணைகளும், விடுத்த கணைகளும், தொடுக்காது விட்ட கணைகளும் என்று அனைத்து கணைகளும் அவனில் பாய்ந்த கணைகளே. கவிஞர்கள் காலகாலமாக களத்தில் நிற்பது கர்ணனின் இடத்தில் என்று சொல்லலாம். கவிஞன் தன்னை நோக்கியே காலம் தரும் பிரம்மாஸ்திரங்களை தொடுத்துக்கொள்பவன். 

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவறவிடுகிறார்.

தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குக்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலில் ஏற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கிடையே

மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை”

பிதாவே ! தயவு பண்ணி எம்மைக் கைவிடும்

இருபத்தோறாம் நூற்றாண்டில் கவிஞர்கள் நிற்கும் களம் இது. இதில் இசையின் கவிதைகள் அன்பிலிருந்து, நம்பிக்கையில் இருந்து விலக்கம் கொள்ளப் கொள்ளப் பார்க்கிறது. சொந்த நகங்களை பற்களை பார்த்து பேசுகிறது. தன்னை சில நேரங்களில் சிறுஔியைக் கூட தாங்காது கண்களை மூடிக் கொள்ளப் பார்க்கிறது. தொட்டாச்சுருங்கி சிறு தொடுகையையும் மறுதலிப்பது போல.  என்றாலும் கூட அம்பும், அம்பு நிழலும் போல கவிதையும் அதன் ஔியும். கவிஞனின் அம்பு எய்யப்படாத அம்பும் கூட. அது தன் நுனியை தாழ்த்தி மானுடன் தலையின் வைப்பது.

கவிதையின் ஆசி

ஒரு பூ

இயற்கையில் நழுவி

உன் தலைமீது விழுகையில்

நிச்சயம் அது ஒரு ஆசி

நீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்

ஒரு பூ

இயற்கையில் நழுவி

உன் தலைமீது விழுகையில்

நிச்சயம் அது ஒரு ஆசி

நீ அந்தப்பூவின் பெயரைச் சொல்.

என்று மத்தகம் தாழ்த்தி தும்பிக்கை தலையில் வைக்கும் கவிதைகளாக இசையின் கவிதைகள் உள்ளன. அவை தன் மத்தக சொற்களை தணித்துக்கொண்டன. கசப்பால் பிளர உயர்ந்த தும்பிக்கையை மானுடத்தின் பொருட்டு தாழ்த்தி கொண்ட கவிதைகள் இவை. காலத்தின் தும்பிக்கையில் உள்ள அந்தப்பூவின் பெயர் கவிஞன் என்றும் சொல்லலாம். காலகாலமாக கவிஞர்கள்  அம்பாறாத்துணிகளே. உயர்த்திய வில்லை விட சில சந்தர்ப்பங்களில் தாழ்த்திய வில் அருள் கொண்டது. அதற்காக கவிஞர் இசைக்கு அன்பு. 


[ கவிஞர் இசையின்  2008_2023 கவிதைகள் என்ற தொகுப்பில் உள்ள சில கவிதைகளை முன் வைத்து எழுதியது]







 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2024 17:13
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.