தலைக்கு மேல் மட்டும் மழை பெய்திட ஆப்பிரிக்க ஜோஜோ மாந்திரீகம்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

வைத்தாஸ் அடுத்த வாரம் இங்கே இருப்பான். தில்லியில் தூதரகம் புனரமைக்கிற, நட்புறவை மறு கட்டமைப்பு செய்கிற முக்கியமான பணி அவன் தான் செய்தாக வேண்டியிருக்கிறது. தேசியக் கடமை.

 

நந்தினி மக்களவை அதிபராக அடுத்த வாரம் பதவியேற்பாள். தேர்தல் அறிவிப்பதும், நட்பான வல்லரசு நாடு இங்கே தொடங்க இருக்கும் மோட்டார் கார் தொழிற்சாலைக்கு அஸ்திவாரம் இடுவதும் மக்கள் அதிபராக அவள் செய்ய வேண்டிய முதல் செயல்களில் அடக்கம்.

 

இல்லை, இன்னும் நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேறவில்லை. ஆயிரம் பேருக்கு ஒரு கார் என்ற நிலை தான் இன்னும். வல்லரசின் கார்த்  தொழிற்சாலையில் கனரக ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு நட்பு நாடுகளுக்கு மற்றவர்களோடு நட்பு வளர்க்க ஏற்றுமதி செய்யப்படும். நட்பு வளர்ப்பதில் நட்போடு கூடிய படையெடுப்பும் அன்போடு ஆக்கிரமித்தலும் அடங்கும்.

 

நந்தினி நாட்டு அதிபராக நட்பான வல்லரசு நாடுகளுக்கு இரண்டு வார நல்லெண்ணப் பயணம் இந்த மாத இறுதியில் போக வேண்டி வரும். அந்த நாடுகளுக்குப் போகும் போது அவளுடைய மாந்திரீகம் கலந்த ஆளுமை வெளிப்படுத்தப்படாது. இந்திய முறை நாட்டியத் தேர்ச்சியும், ஆங்கிலப் புலமையும், நிர்வாக அறிவின் முதிர்ச்சியும் வெளித் தெரியும் படி அவள் நடக்க வேண்டி வரும். வைத்தாஸ் அவளோடு அநேகமாகப் பயணத்தில் வருவான்.

 

மாந்திரீக ஆளுமை என்பது வீட்டு முன்னறை ஓவியத்தில் இருந்து இறங்கி மயில் ஆடி மரியாதை செய்த ஒன்று. அந்த மயில் இனியும் ஆடும் என்று நட்பு வல்லரசு நாடுகளில் சந்திப்பின் போது எதிர்பார்க்கப் படலாம். பறவையும் அதன் நடனமும் வளத்தோடு தொடர்புடையதாக உணர்ந்து கொள்ள வேண்டிய தொன்மம் சார்ந்த அழுத்தமான படிமங்கள் மட்டுமே என்றோ மற்றப்படி உசிதமாகவோ நந்தினி பேசலாம். அதன் பிறகு, அவர்கள் பறவைகள் இடம் பெறும் வேறு ஓவியங்களைக் காட்டி  அவற்றில் சிறைப்பட்ட பறவைகளை ஆடவும் அகவவுமாக அற்புதம் நிகழ்த்தச் சொல்லிக் கேட்க மாட்டார்கள் என்பது உறுதி.

 

உள்நாட்டில் நந்தினிக்கு இருக்கும் பிம்பம் முழுக்க மாந்திரீகம் மற்றும் காருண்யம் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டது. அவள் பிரார்த்தனை செய்தால் தானியங்கள் ஆகாயத்தில் இருந்து சொரியும். அவள் கடுமையாகப் பார்த்தால் எதிரிகள் அடுத்த ஒன்பது மணி நேரத்துக்குள் குழைந்து விழுந்து உடல் சுருங்கி இறப்பார்கள். அவள் அன்போடு கை குலுக்கினால் தீராத நோய்கள் குணமாகும் என்று விரியும் அந்த மாந்திரீகப் புனைவை நந்தினி இனி பெரும்பாலும் இறக்கி வைக்கலாம். இந்தச் சிறப்புகளை அவளிடமிருந்து பெற்று, சிறு சிறு அற்புதங்களை அவள் சார்பில் நிகழ்த்தத் தக்க விதத்தில் மரபுத் தொடர்ச்சி ஏற்படுத்தித் தரப்படும். அதைப் பற்றி உரையாடவே இந்தச் சந்திப்பு.

 

கடவுளுக்கு மூத்த சகோதரியின் அற்புதங்கள் நிகழ்த்தும் புனித ஆளுமையைக் கைமாற்ற பத்து வயதுக்கு மேற்படாத சிறுமி அல்லது சிறுவன் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று முந்தாநாள் முடிவானது.

 

ஜோஜோ அல்லது வூடூ மந்திரவாதம் செய்யும் பரமபரைக் குடும்பங்களில் தேடி அது அமையாத் பட்சத்தில் வெளியில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. வூடூ முழுக்கத் தீமை வருத்தும் என்பதால் நன்மை வருத்தும் ஜோஜோ பிரிவு மாந்திரீகத்தைக் குலத்தொழிலாகச் செய்யும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

 

அதிகாரி பேசிக் கொண்டு போக, காப்பி பிளாஸ்கோடு உள்ளே வந்தாள் பணிப்பெண். கதவுக்கு வெளியே முன்னறையில் கருத்து மெலிந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தது நந்தினி கண்ணில் பட்டது. சிறுமி கையை உயர்த்த ரோஜாப்பூ இதழ்கள் தரையைப் பார்த்துக் கவிழ்ந்த அவளுடைய வெற்று உள்ளங்கைகளில் இருந்து  மெல்லத் தரையில் உதிர்ந்தன.

 

நந்தினியின் பார்வை போன இடத்தைத் தொடர்ந்து ராணுவ அதிகாரியும் பார்த்து விட்டு அவசரமாக நந்தினியை வணங்கினார்.

 

கையை அசைத்துப் பூ வரவழைத்துப் போகிற இடமெல்லாம் குப்பை போடக் கூடாது என்று எச்சரித்துத்தான் கூட்டி வந்தேன். மன்னிக்க வேண்டும் அம்மா. இதோ அவளை மேலும் எச்சரித்து விட்டு வருகிறேன்.

 

அவர் கிளம்ப, வேண்டாம் என்று நந்தினி கை காட்டி நிறுத்தினாள்.

 

அந்தப் பெண் தானா அற்புதங்களை என் சார்பில் நிகழ்த்தப் போவது?

 

அவர் மகிழ்ச்சியோடு தலையாட்டினார்.

 

அவள் பெயர் என்ன?

 

எமிலி ஆந்த்ரோசா. வடக்குப் பகுதியில் இருந்து வருகிறவள்.. நான்கு தலைமுறையாக ஜோஜோ நல்ல விஷயங்களுக்காகப் பிரயோகிப்பதைக் குலத் தொழிலாகக் கொண்ட குடும்பம். காதல் கைகூட, பிரிந்த கணவன் திரும்பி வரவும், இருப்பவன் போகாமல் இருக்கவும் உதவும் தாயத்து தயாரித்து விற்பனை, தொழில் அபிவிருத்திக்கான மாந்திரீகப் பிரயோகங்கள் நடத்துதல் இப்படியான செயல்களை இவள் அப்பா செய்து வருகிறார். இவருடைய பெரியப்பா இன்னும் பிரபலமானவர். அவர் தற்போது உயிரோடு இல்லை.

 

என்ன மாதிரியான அற்புதங்கள் செய்த மனிதர் அந்த இறந்த மந்திரவாதி? நந்தினி கேட்டாள்.

 

அதிகாரி கொஞ்சம் தயங்கினார். ஒரு பெண் அதிகாரி வந்து கொண்டிருக்கிறார் அம்மா. அவர் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2024 19:33
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.