வெறுப்பை எப்போதும் நிராகரிக்கும் தமிழ்நாடு

நாம் எழுதுவது ஒருபோதும் தமிழ்நாட்டின் எல்லையைக் கடப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனாகவே இருக்கிறேன். 
ஆகவே நாம் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்ற  எனது கோரிக்கையைத் தமிழ் மக்களோடு நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்தவனாகவே இருக்கிறேன். 
ஆகவே பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என்று என் மக்களிடத்திலே கேட்பது அவசியமற்றது. தமிழர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மறுப்பதற்குப் பின்னால் உள்ள நியாயங்களை எடுத்து வைக்கவே ஆசைப்படுகிறேன்.
ஏன் தமிழ் மக்கள் எங்களை இப்படி நிராகரிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று சகோதரி தமிழிசை ஒருமுறை ஆதங்கப்பட்டார். அநேகமாக அது 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்திருந்த நேரம்.
அந்தத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாடு சில பேரிடர்களை சந்தித்திருந்தது. துயரத்தின் இருள் எம் மண்ணையும் மக்களையும் அப்போது கவ்விப் பிடித்திருந்தது.
எம் எளிய மக்கள் கையேந்திக் காத்திருந்தார்கள். பிரதமர் தங்களைப் பார்க்க வருவார். வாஞ்சையோடு தலை கோதி நாலு வார்த்தைப் பேசி ஆறுதல் தருவார். சிதைந்து கிடக்கும் தங்கள் வாழ்க்கையை சீர்செய்து தருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்.
அவரோ இரண்டே இரண்டு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வதற்குகூட நேரமற்றவராக உலகத் தலைவர்களோடு உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டும், சுயமிகளை எடுத்துக் கொண்டும் இருந்தார்.
இதற்கெல்லாம் தான் ஏன் வரவேண்டும் என்று நேரடியாக அவர் கேட்கவில்லை. ஆனால், தம் மனதில் அப்படியொரு எண்ணம் இருப்பதை எம் மக்களை உணரச் செய்தார்.
காணாமல்போன மீனவர்களைத் தேடுவதற்காக ஒன்றிய அரசிடம் ஹெலிகாப்டர் கேட்டோம். ஓ.பன்னீர் செல்வம் அவர்களது தம்பியைக் காப்பாற்றுவதற்காக ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பியிருந்த ஒன்றிய அரசு மீனவர்களைக் காப்பாற்றுவதற்கெல்லாம் ஹெலிகாப்டரை அனுப்ப இயலாது என்று எங்கள் முகத்தில் தனது இடது கையினால் ஓங்கி அறைந்தது.
அப்போது திருமிகு நிர்மலா சீத்தாராமன் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு ஆணவமானவை. அவரது உடல் மொழி எவ்வளவு இறுமாப்போடு இருந்தது. இவை போதும் இன்னும் ஒரு நூறு தேர்தல்களில் தமிழ்நாட்டில் பாஜக தோற்பதற்கு.
வாய்க்கு வந்ததை எல்லாம் எல்லாம் பேசிக்கொண்டிருந்தார் அன்றைய தமிழ்நாட்டின் பாஜக தலைவரான தமிழிசை. தமிழ் மண்ணின் விழுமியங்களையெல்லாம் கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பாஜகவிற்கு நல்லதொரு பாடத்தை நடத்திக் காட்டினார்கள். ஆனாலும் பாஜக படிப்பதாக இல்லை.
2019 கு பிறகும் தமிழ்நாடு பேரிடரைச் சந்தித்தது. இப்போது முன்னைக் காட்டிலும் கோரமானதொரு முகத்தை ஒன்றிய அரசு எம்மிடம் காட்டியது.
இதைப் பேரிடர் என்றே வகைப்படுத்த முடியாது என்று அழிச்சாட்டியம் செய்தது ஒன்றிய அரசு. 
மக்களை ஆற்றுப்படுத்த இப்போதும் பிரதமர் வரவில்லை.
ஆறுதலாக ஒரு வார்த்தைப் பேசவில்லை. அப்படியொரு ஈரமற்ற மனநிலையில் அவர் இருந்தார்.
உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்பதைக்கூட மன்னிக்கலாம். உங்களுக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது மாதிரி அவர்கள் நடந்து கொண்டதை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இன்னொரு பக்கம் திமுக அரசு தன் மக்களைத் தன் உயிரைக் கொடுத்து பாதுகாக்க முயற்சி செய்தது.
முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என்று அனைவரும் களத்தில் மக்களோடு நின்றார்கள். ”இருக்கிறோம், பயப்படாதீர்கள்” என்று நம்பிக்கை அளித்தார்கள். ஓரளவிற்கு தன்னாலான நிவாரணத்தை அளித்தார்கள்.
ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டால், “கேட்பது பிச்சை, இதுல தோரணையைப் பாரு” என்பது மாதிரி ஒன்றிய நிதி அமைச்சர் ஆணவமாகப் பேசியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் காயப்படுத்தியது.
அப்போது உதயநிதி “அது யாரோட அப்பன் வீட்டுக் காசு” என்று கேட்டதை தமிழ் மக்கள் தங்கள் சொந்தக் குரலாகப் பார்த்தார்கள்.
அதே ஒன்றிய நிதி அமைச்சர் தமிழக அரசு வழங்கிய நிவாரணத்தை “பிச்சை” என்று இங்கு வந்தே பேசிவிட்டு செல்கிறார்.
பேரிடரின் போதான பாஜகவின் அலட்சியமும், தமிழக அரசின் நிவாரணத் தொகையை “பிச்சை” என்று விளித்ததும் மட்டுமே போதும் நாம் பாஜகவை நிராகரிப்பதை நியாயம் என்று கொள்வதற்கு.
ஊழல் என்று பார்த்தாலும் பாஜகவே முதலில் வந்து நிற்கிறது. “தேர்தல் பத்திரம்” ஒன்று போதும் சமீபத்திய பாஜக ஊழலை அமபலப்படுத்த. 
அதானியைத் தொடுமளவிற்கு பங்குபத்திரத்தின் அளவு இருக்குமா என்று தெரியவில்லை. அதானி குறித்த அமெரிக்க விசாரனையின் முடிவு வரட்டும். அவரைப் பற்றி அப்போது பேசலாம். 
இப்போதைக்கு தேர்தல் பத்திரம் ஒன்றே இந்தத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. 
தேர்தல் பத்திரத்தை ஸ்டேட் பேங்க்கை வைத்து வெளியிட்டதே முறைகேடு என்கிறார்கள். 
ஊழலின்  தொடக்கப் புள்ளி இது.
யார் பத்திரத்தை வாங்குகிறார்கள் என்பது ரகசியம். எவ்வளவு தொகைக்கு வாங்குகிறார்கள் என்பது ரகசியம். அதை எந்தக் கட்சிக்கு வழங்குகிறார்கள் என்பது எதைவிடவும் ரகசியம். 
ஆனால் யார், எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரம் வாங்குகிறார்கள் என்பது ஒன்றிய நிதி அமைச்சகத்திற்குத் தெரியும். வாங்கியப் பத்திரத்தை எந்தக் கட்சிக்குக் கொடுக்கிறார்கள் என்பதும் ஒன்றிய நிதி அமைச்சகத்திற்குத் தெரியும்.
எனில், யாரேனும் ஒரு தொழிலதிபர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரத்தைக் கொடுத்தால் அது ஒன்றிய நிதி அமைச்சகத்திற்குத் தெரிந்துவிடும். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்வதெனில் அது பாஜகவின் மேலிடத்திற்குத் தெரிந்துவிடும்.
பிறகென்ன, அவரை அழைத்து “அன்பாகப் பேசி” தங்களுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாதா? அவர் இணங்க  மறுத்தால் இருக்கவே இருக்கிறது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, இன்னும் சில துறைகள்.
இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் முறைகேடாக சொத்து சேர்த்தவர்களை, லாபம் ஈட்டியவர்களது வீடுகளில் மேற்சொன்ன துறைகளை விட்டு சோதனை செய்வது. அவர்களோடு உரையாடுவது. அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்வது.
அந்த வழக்குகளை அப்படியே கிடப்பில் போடுவது. இது ஒரு வகை.
பெரிய தொழில் அதிபர்களோடு உரையாடுவது. அவர்களிடம் இருந்து கணிசமான தொகைக்கு தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வது. கைமாறாக அவர்களது அளப்பரிய ஒப்பந்தங்களை வழங்குவது என்பது இன்னொரு வகை.
அரசின் கொள்கைகள் சில தொழில் அதிபர்களுக்கு சுருட்டுவதற்கு இடைஞ்சலாக இருக்கும். அவர்களையும் அழைத்து உரையாடுவது. பத்திரங்களைப் பெற்றுக் கொள்வது. அவர்களுக்கு ஏதுவாக அரசின் கொள்கைகளை வளைப்பது அல்லது முற்றாக மாற்றுவது என்பது மற்றுமொரு வகை.
இப்படியாக பாஜக அடித்த கொள்ளை பல்லாயிரம் கோடி.
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரினால் அரசு மறுத்தது.உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஸ்டேட் பேங்க் கொஞ்சம், விவரங்களை வழங்க தேர்தல் ஆணாஇயம் அதனை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டது.  
இது போதாது, முழுமையான விவரங்களாஇயும் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டன.
”முழு விவரங்களையும் வெளியிட்டால் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று கத்திக் கொண்டிருக்கிற கட்சிகள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.
இப்படிச் சொல்வதற்கு அவர் வெட்கப்பட்டிருக்க வேண்டும்
தேர்தல் பத்திரத்தின் மூலமாக ஒரு பைசாகூட வாங்காத கட்சிகளே இல்லையா என்ன. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு பைசாகூட பெறவில்லை என்கிறது.
ஊழலிலும் எல்லோரையும் முந்தி முன்னே நிற்கிறது பாஜக என்கிற வகையில் பாஜகவி நிராகரிப்பதற்காக தமிழ் மக்கள் கொஞ்சமும் விசனப்படத் தேவை இல்லை.
ஆன்லைன் ரம்மி சின்னஞ்சிறு இளைஞர்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருந்த சூழலில் அதைத் தடை செய்து மாநில அரசாங்கம் சட்டம் இயற்றுகிறது. ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.
மாநில அரசு ஆன்லைன் சூதினால் பாதிக்கப்பட்ட மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தால் ரவி ஆன்லைன் ரம்மி உரிமையாளர்களை அழைத்து உரையாடிக் கொண்டிருந்தார்.
ஒன்றிய அரசு அவரை நெறிப்படுத்த முயற்சிக்காமல் அவரது செயல்பாடுகளை மகிழ்ந்து ரசித்துக் கொண்டிருந்த்து.
அத்தகைய சூதாட்ட நிறுவனம் ஒன்றின் அதிபர்தான் அதிகத் தொகைக்கான தேர்தல் பத்திரத்தை வழங்கியவர்களில் ஒருவராக இருக்கிறார்.
பாஜகவி நிராகரிப்பதற்காக தமிழ் மக்கள் ஏன் வருத்தப்படப் போகிறார்கள்?
ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தத் தமிழர்களின் இந்தியக் குடியுரிமைக் கனவில் மண் அள்ளிப்போடும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்களை
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் அந்தச் சட்டத்தினைக் கொண்டு வந்தவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.  
சனாதனம் என்பது மேல் கீழ்க் கட்டமைப்பு. அதை அழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசுகிறார்.
உடனே இந்துக்களைக் கொல்லச் சொல்கிறார் உதயநிதி என்று ஒன்றிய நிதி அமைச்சரே கொஞ்சமும் நாகரீகமற்றுப் பேசுவதை தமிழ் மக்கள்  ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள்.
மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில்,
தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் போக்கினை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்பதில்லை. ஆகவே இந்த்த் தேர்தலிலும் அவர்களை நிராகரிப்பதற்காக தமிழ் மக்கள் விசனப்படப் போவதில்லை.
கொரோனோ காலத்து அவர்களது செயல்பாடு அருவெருப்பானது.
தமிழகத்திற்கு உரிய ஊசி மருந்தைத் தரவில்லை. நாங்களே தயாரித்துக் கொள்கிறோம் என்றாலும் அனுமதித் தரவில்லை. ஊசி மருந்து தயாரித்த நிறுவனத்திடமும் தேர்தல் பத்திரம் வாங்கியிருக்கிறது பாஜக.
போக, திமுக அரசு,
1) குடுமப் பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறது
2) அரசு, மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த இருபால் குழந்தைகளுக்கும் மேற்படிப்பு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறது
3) பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம்
4) தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி
உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொடுக்கிற ஒரு அமைப்பு இருக்கும் போது பாஜகவை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே தமிழக மக்களுக்கு இல்லை
பாஜகவிற்கு எங்கள் வாக்கு இல்லை. அதில் எந்தவிதமான வருத்தமும் எங்களுக்கு இல்லை.
- காக்கைச் சிறகினிலே , ஏப்ரல் 2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 03:36
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.