போகாத ஊருக்கு வழி காட்டும் காகித வரைபடங்களும் குண்டுராயல் உடுப்பி ஓட்டலும்

வாழ்ந்து போதீரே 0 அரசூர் நான்காம் நாவல் வரிசையில் – அடுத்த சிறு பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு  வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத ஜவ்வந்திப் பூக்களின் குளிர்ந்த நறுமணமும், ஒற்றைக் கெட்டாகப் பிடித்து உயர்த்திக் குளிர்ந்த தண்ணீர் தெளித்துத் தாழ வைக்கும் கொடிக்கால் வெற்றிலையின் கல்யாண வைபவ மணமும், பூக்கூடைகளில் இருந்து எடுக்கப்படக் காத்திருக்கும் கரும்பச்சை மரிக்கொழுந்து வாசனையும், குதிரை வண்டிகளில் விரித்த துணிக்குக் கீழே சன்னமாகப் பரத்திய காய்ந்த புல்லின் கூர்மையான வாடையும், குதிரைச் சாணம் தெறித்துச் சிதறி உலர்ந்த தெருக்களின் புதுத் தார் வாடையும், புழுதி அடங்கக் குளிரக் குளிர நீர் தெளித்துத் தூசி அடங்கும் வீட்டு வாசல் மண்ணின் நெகிழ வைக்கும் கந்தமுமாகக் காலை நேர மதுரை கொச்சு தெரிசாவையும் முசாபரையும் வரவேற்றது.

 

காலையில் முதல் பஸ் ஐந்து மணிக்கு தொண்டியில் இருந்து, புதிதாகப் பிடித்த மீன் நிறைத்த கூடைகளோடு புறப்படுகிறது. அரசூர் வழியாக மதுரை போகிற, பயணிகளின் நெருக்கமும் கூச்சலும் இல்லாத அந்த பஸ்ஸில்  தியாகராஜ சாஸ்திரிகள் கொச்சு தெரிசாவையும் முசாபரையும் பிரியத்தோடு ஏற்றி வழியனுப்பி வைத்தார்.

 

ராத்திரி முசாபரி பங்களாவில் அவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டுத் தங்க இடம் கிடைத்தது. அதற்கு முன்னால் குண்டுராயர் ஓட்டலில் ராத்திரிக்குச் சாப்பாடாக இட்லி தின்னக் கூட்டிப் போனது தியாகராஜன் தான்.

 

கல்லுக் கல்லா இருந்தாலும் உடம்புக்குக் கெடுதல் எதுவும் வராது. இதை முப்பது வருஷம் தினம் சாப்பிட்டுத்தான் கல்லு மாதிரி இருந்தார் எங்க புரபசர் மருதையன்.

 

தியாகராஜன் குண்டுராயர் ஓட்டலில் கொச்சு தெரிசாவோடும் முசாபரோடும் இருந்து இட்லி தின்னாவிட்டாலும், அடுத்த மேஜைக்கு முன் வென்னீர் குடித்தபடி உட்கார்ந்து கொச்சு தெரிசா அவருக்குக் கைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்த குடும்ப மரப் படங்களை சுவாரசியமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

 

அவருக்கு எடுத்த எடுப்பில் இந்தச் செவ்வகங்களையும் இணைப்புக் கோடுகளையும் ஒவ்வொரு செவ்வகத்துக்குள்ளும் எழுதிய பெயர்களையும் ஒருசேரப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருந்தது. வரைபடத்தை வைத்து இதுவரை போயிருக்காத ஊருக்கு வழி கண்டு பிடித்துப் போகிறது போல இந்தப் படங்கள் முன்னோர்களிடம் கொண்டு போய் விடுமோ என்று  கூட ஒரு முறை நினைத்தார். அதெல்லாம் திவசம் பண்ணி வைக்கிற தன் போன்ற புரோகிதர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட உத்தியோக வெளி இல்லையோ. இந்த இங்கிலீஷ் காரி அங்கே என்ன செய்கிறாள் என்று சஞ்சலம் உண்டானது அப்போது. இட்லி வரக் காத்திருக்கும் போது கொச்சு தெரிசா அவருக்கு அந்தக் காகித வரைபட மரங்களை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். அம்பலப்புழை குடும்பம் என்று ஆரம்பித்துக் கிட்டாவய்யன் வழியாகத் கொச்சு தெரிசாவில் வம்சம் இப்போது நிற்பதை அவள் எடுத்துக் காட்ட, தியாகராஜனுக்கு அதெல்லாம் மிகச் சுளுவாகப் புரிந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2024 20:03
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.