பொத்தல் குடைக்குள் இருவராக நடந்து வந்த மழைநாள் திருமணம்

வாழ்ந்து போதீரே நாவல் = அரசூர் நாவல் வரிசை 4 = அடுத்த அத்தியாயத்தில் இருந்து

கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள்.

 

தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர்.

 

ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய வாழ்த்தும் தார்வாட் பகுதி மராத்தியில் வந்ததைத் திலீப் கவனித்தான்.

 

ரொம்ப தூரம் நடக்கணுமா?

 

அகல்யா கேட்டாள். மழை சீரான சத்தம் எழுப்பிப் பாதையை நீர்த் திரையிட்டு மறைத்து முன்னால் ஓடியது. அகல்யா குடைக்குள், திலீப்புக்கு இன்னும் அருகில் வந்தாள். அவ்வளவு அருகில் திலீப்பின் வாயில் மட்டிப்பால் ஊதுபத்தி வாசனை எழுந்து வருவதாக அவள் நினைத்தாள். அது தானா அல்லது அவன் பல் கூடத் துலக்க நேரம் கிட்டாமல், அவளை அவசரமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கோவிலுக்கு ஓடி வந்தானா? எதுவோ, அந்த வாடை அவளுக்கு வேண்டி இருந்தது. ஆம்பிளை வாடை. அவளுடையவன்.

 

லெதர் பேக் என்கிட்டே கொடு. ஜிப் சரி இல்லே. உள்ளே தண்ணி போயிடும்.

 

குடையை இன்னும் தாழப் பிடித்தபடி கனமான அந்தப் பைக்காகக் கை நீட்டினான் திலீப். குடைக்கு வெளியே சத்தம் எழுப்பி விழுந்த மழை, குடையின் சுற்றுவெளி மேலிருந்து சன்னமான  தாரையாக வழிந்தது.

 

தலை குளித்து ஒரு முழம் கனகாம்பரப் பூ சூடி இருந்த அகல்யாவின் உச்சந்தலையில் இருந்து சீயக்காய்த் தூள் நெடியும், நெற்றியில் கோவில் குங்குமம் எழுப்பும் இனம் தெரியாத பாதுகாப்பான மஞ்சள் வாசனையும், கரைந்து கண்ணைச் சுற்றித் தடமிட்டுப் பூசிய கண்மையில் டிங்சர் அயோடின் கலந்த மெல்லிய வாடையும் சேர்ந்து எழுந்து திலீப்பின் நாசியை நிறைந்தன.

 

ஈரமும் அண்மையுமாக அவள் உடல் நெடி திலீப்பை பெரிய சாதனை முடித்து விருது வாங்கி வரும் மகிழ்ச்சியை அடைய வைத்திருந்தது. அது மயக்கமடைய வைப்பது. முயங்கிக் களித்துக் கிடக்கக் கட்டியம் கூறுவது.

 

பேக் இருக்கட்டும். உங்க வேஷ்டியைக் கவனியுங்கோ. விழுந்து வைக்கப் போறது..

 

ஈரமான பூமாலையில் இருந்து பூக்கள் கலவையாக மழை நீருக்கு மணம் ஏற்றி நெடி தரப் புது வேட்டி முனை ஈரத்தில் புரளாமல் உயர்த்திப் பிடித்தபடி திலீப்  நிச்சயமற்று ஒரு வினாடி நின்றான்.

 

லெதர் பேக்கை தோளில் உள்ளொடுக்கி மாட்டியபடி ரெக்சின் பையை வலம் மாற்றினாள் அகல்யா. இரண்டு சுமைகளின் கனத்தால் பக்கவாட்டில் உடல் வளைய பிடிவாதமாக அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்த அவள் திரும்பிப் பார்த்தாள்.

 

வேஷ்டி தாறுமாறா அவுந்து வழியறது. விழுந்து வைக்கப் போறது. பிடியுங்கோன்னா கேட்க மாட்டேளா?

 

நீண்ட அவள் கை மழையில் நனைந்து அவன் இடுப்பில் துணியைப் பிடித்து நிறுத்தியது. அவன் குடையைத் தோளில் சரித்தபடி அந்தக் கையைத் தன் கக்கத்தில் செருகிக் கொண்டு வேஷ்டியைச் சரியாகக் கட்டிக் கொண்டான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2024 19:08
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.