ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி வால் பதுக்கிய நாயானவன்
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசை 4 – சிறிய பகுதி
————————————————————————————–
மூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை.
திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்தினான்.
ஜா நை சக்தா. பாஸ் திகாவ் நை தோ, ஹடாவ்
போடா நாயே பாஸ் இடுப்பிலே தொங்குது. அவுத்துக் காட்டறேன்.. நாத்த பிருஷ்டத்தை ஓரமா நகர்த்துடா பொணமே என்று அந்த நேபாளிக்குப் புரியாத தமிழில் சொல்ல ஆரம்பித்து, அவசரமாக நிறுத்திக் கொண்டான் திலீப்.
இங்கே தமிழில் பேசுவது அனர்த்தம். இந்தத் தடியனின் அரைகுறை இந்தி கூட வரவேற்கப்படுவதில்லை. மராத்தி, அது மட்டுமே செல்லுபடியாகிற நிலம் இது. நாளை மாநிலம் முழுக்க அப்படியே ஆகலாம்.
அதை விடப் பயங்கரம், இந்த வாசல் காக்கும் சேவகன், அகல்யா மாதிரி, திலீப் மாதிரி சரளமான வடக்கத்தியான் வேடம் கட்டிய உள்ளூர் பிரகிருதியாக இருக்கக் கூடும். அவனுக்கும் தமிழ் புரியுமாக இருக்கலாம்.
புரிந்தாலும் திருடனுக்குத் தேள் கொட்டிய அவஸ்தை தான் அவனுக்குக் கிடைக்கும். வசவையும் சாபத்தையும் வெளியே சொல்ல மாட்டான். உனக்கு எப்படி மதராஸி பாஷை தெரியும் என்று கொக்கிப் பிடி போட்டுக் கொட்டையை நெரிப்பார்கள். அவனுக்கு வேண்டிய உபசாரம் தான் அது.
ஆனால், ஏன் காவல்காரனின் விரோதத்தைச் சம்பாதித்து, கட்சி எலக்ஷன் டிக்கெட்டை யாசிக்க உள்ளே கடந்து போக வேண்டும்?
திரை விலகி உள்ளே இருந்து அதிகாரத் தோரணையோடு பேசிக் கொண்டு யாரோ வந்தார்கள். திலீப் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு பார்த்தான்.
கணபதி மோதக்.
மூணு மாசத்தில் மாற்றமாக, அவன் கட்சி ஆபீசில் கொஞ்சம் போல் முக்கியஸ்தனாக ஆகி இருந்ததாக அவன் பார்வையில் தெரிய வந்தது.
அட, மோதகமே, மதராசி ஹோட்டலை முற்றுகையிட்டு சாம்பார் வடை கவர்ந்து போய்ப் பெண்டாட்டிக்குச் சமர்ப்பிக்கத் தூக்குப் பாத்திரத்தோடு நீ வந்தது எந்த ஜன்மத்தில்? இன்னும் அந்த மாதிரிக் கைங்கர்யம் செய்கிறாயா?
என்ன பண்றே?
மோதக் ஆச்சரியப்பட்டு நின்றான். கூட நிற்கிறவர்கள் அவன் மேல் வைத்த ம்ரியாதையைக் குறைக்கிற நக்னமான கேள்வி.
திலீப் மோரே. மூன்று மாதம் முன்னால் திலீப் அண்ணா. இப்போது அவனுக்கு இங்கே செல்வாக்கு இல்லை. எதற்கு வந்து நிற்கிறான் என்று ஏளனமாகப் பார்த்தான்.
என்ன திலீப், ஆள் அடையாளமே காணோம். மெட்றாஸ்லே கட்சி பிராஞ்ச் ஆரம்பிச்சுட்டியா?
மோதக் அதிகாரியாக நின்று கேட்க திலீப் தலைக்குக் கோபம் ஏறியது.
சாம்பார் குடிக்கப் பாத்திரத்தோடு அலைந்த பயல், அண்ணா, அண்ணா என்று ஏங்கி, மூஞ்சூறு போல கெட்ட வாடையோடு நின்று முறையிடுகிறவன் இப்போது பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறான். செருப்பாலே அடி தேவடியாப் பையனை. இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.
மனதுக்குள் தூபம் கொளுத்திக் கல்லறை வளாகத்துக்கு பூவேலைப்பாடு அமைந்த சால்வை கொண்டு போகும் பெரியவர்கள் தலை நிமிர்ந்து திலீப்பைப் பார்த்துச் சொன்னார்கள் – திலீப்பே, கண்பத் மோதக் எப்போதும் உன் உற்ற தோழனாக இருப்பான்.
திலீப்புக்கு அதொண்ணும் தெ ரியாது. கோபம் தான் எழுந்து வந்தது இப்போது.
என்னடா மோதக்கே, உன் பெண்டாட்டி சாம்பார் செய்யக் கத்துக்கிட்டாளா இல்லே நீயே ஆக்கி வச்சுப் போடறியா? தூக்குப் பாத்திரம் அதே தானே இல்லே இன்னும் பெரிசா வாங்கி வச்சுக்கிட்டியா? சாம்பார் குடிச்சுக் குடிச்சு சாலா மதராஸி ஆயிடுவே. பின்னாலே பிடுங்கிக்கும். ஜாக்கிரதை.
ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி, புட்டத்தில் வால் பதுக்கிய நாயானான் மோதக். அவனுக்கே நாலு பேர் பின்னால் சுற்ற இருந்தால் திலீப்புக்கு எத்தனை பேர் இருப்பார்கள் மூன்று மாதம் வெளியில் போயிருந்து விட்டு வந்தால் என்ன, திலீப் அடையாளம் இல்லாத வெற்று ஆளாகப் போய் விடுவானா என்ன?
அடடே திலீப் அண்ணா சும்மா தலைவர் குரல்லே பேசிப் பார்த்தேன்.
அவன் ஜரூராகப் பின்வாங்கிப் பணிய அதை அங்கீகரித்தபடி உள்ளே நடந்தான் திலீப். செக்யூரிட்டி சேவகன் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

