முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது.

சின்னக் குளிரோடு விடியும் இன்னொரு பொழுது. திலீப் நேரம் பார்த்தான். ராத்திரியும் இல்லாத, அதிகாலையும் வந்து சேராத மூன்று மணி. பம்பாயை நோக்கி குட்ஸ் வண்டிகளில் லோனாவாலாவில் இருந்து எருமைகளும் பசுக்களும் பயணம் செய்யத் தொடங்கும் நேரம் இது. தாதர் யார்டு பக்கம் நிற்கும் விசாலமான ரயில் பெட்டிகளுக்குள் கட்டி வைத்தபடி அவற்றைக் கறந்து பால்காரர்கள் சைக்கிளில் தாதர் தெருக்களில் வலம் வருவதும், எலக்ட்ரிக் ரயிலில் கூட்டம் ஆரம்பிப்பதும் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்கும்.

இந்த ஊர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அம்பலம் அம்பலம் என்று முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தொடர்கிற தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது. அப்போது தாதர் பால் வியாபாரிகள் காலி பால் பாத்திரங்களோடும், கறந்த மாடுகளோடும் லோனாவாலா திரும்பத் தொடங்கியிருப்பார்கள்.

திலீப் கடைத் தெருவில் இந்நேரம் திறந்திருக்கக் கூடிய வேலு நாயர் சாயா பீடிகைக்கு நடந்து கொண்டிருந்தான். விடிகாலை தரக் கேடில்லாத சாயாவும், நல்ல பசி எடுத்து வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்காத பொழுதில் வேக வைத்த முட்டையும் வேலு நாயர் தயவால் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆபீசிலேயே தங்கி அங்கேயே ரெண்டு மேஜைகளை இழுத்து நீட்டிப் போட்டு உறங்கிப் பழகிப் போயிருக்கிறது.

ஆபீஸிலேயே குளிக்கவும் செய்யலாம் தான். ஆனால் அந்தத் தண்ணீர் தலைமுடியை ஒரே நாளில் சிக்குப் பிடிக்கச் செய்து விடுகிறது. சோப்பும் திட்டுத் திட்டாக உடம்பிலேயே தங்கி ஊரல் எடுக்கும். இந்தக் கஷ்டத்துக்காகத் தான் அம்பலக் குளத்தில் விடிகாலை பொழுதில் குளிக்கப் போவது.

அதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு. கிழங்கு கிழங்கான இளம் பெண்கள் குளிக்கப் போகும் நேரம் அது. அது என்னமோ இந்தப் பிரதேசத்துப் பெண்களுக்கு ஸ்தனபாரமாகவும் பின்பாரமாகவும் உதட்டிலும் கூடுதலாகச் சதை வைத்து அனுப்பி விடுகிறான் பிரம்மன். திலீபுக்கு அம்பலக் குளத்துக் கரையில் அதெல்லாம் உடுப்பு மறைக்காமல் கணிசமாகப் பார்க்கக் கிடைக்கிறது இப்படியான காலை நேரங்களில் தான். எத்தனை முகங்கள். எத்தனை ஸ்தனங்கள், பிருஷ்டங்கள். முகத்தைப் பார்த்து அடையாளம் காண்பதை விட மற்றதை வைத்துக் காண்பது திலீபுக்கு சுலபமாகப் போயிருக்கிறது. அந்தப் பருத்த உதடுகளும் வெகுவாக இஷ்டம்தான்.

இங்கே அவன் விதவிதமான முலைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அகல்யா குளித்து பருத்திப் புடவை உடுத்தி சின்ன டப்பாவில் அவல் உப்புமா அடைத்து எடுத்துக் கொண்டு வேலை பார்க்கும் இடத்துக்கு ரயில் பிடிக்க ஓடிக் கொண்டிருப்பாள். அவளை ஒரு நாளாவது இங்கே கூட்டி வ்ந்து எல்லாம் காட்டித் தர வேண்டும்.

எதுக்கு? நீ வெக்கமே துளிக்கூட இல்லாம சொளசொளன்னு எச்சலை வடிய விட்டுண்டு பார்க்கற போது நானும் ஏன் நோக்கணும்? எத்தனை பாத்து மனசு திருப்தி வரும் உனக்கு? ஒரு ஆயிரம்? பத்தாயிரம்? லட்சம்? கோடி முலை?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2024 19:55
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.