மேல்மாடி பஞ்சாபி பெண்கள் குங்குமம் வாங்கிப் போக அமைதியாகக் கிடந்தது வீடு

அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே-யிலிருந்து

நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கறேன். அப்புறம் மயிலைப் பாரு. அது உனக்காகக் காத்திருக்கும்.

திரும்ப அவன் ஜெயம்மாவை வணங்க, அவள் திருப்தியாக அரட்டையைத் தொடர்வதற்காகத் திரும்ப உள்ளே போனாள். பெண்களுக்கே ஆன பேச்சு என்று சங்கரன் ஊகிக்க, அவனை விலக்கி வைத்திருந்தார்கள்.

மீரட் கத்தரிக்கோல் என்று வசந்தி உச்சக் குரலில் சிரித்தபடி சொல்ல, ஜெயம்மா ஏற்று வாங்கி இன்னும் கொஞ்சம் சுருதி சேர்த்தாள் அவுட்டுச் சிரிப்புக்கு. இந்தியா முழுக்க மீரட்டுனா வேறே ஞாபகமே வராது என்றாள் ஜெயம்மா அடுத்த சிரிப்புக்கு ஆயத்தம் செய்தபடி. அது என்ன என்று சங்கரனுக்குத் தெரியும் என்றாலும் அவன் சிரிக்க முடியாது.

பைராகி திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து பாயசமும், மோரும் ஒரு சொம்பு தண்ணீரும் வாங்கிக் குடித்துக் கொஞ்சம் வெற்றிலை கேட்டு வாங்கினான். ஐந்தே நிமிஷத்தில் சிரம பரிகாரம் முடிந்து அவன் கிளம்பும் முன்னால், வசந்திக்கும் அவள் குழந்தைக்கும் சகல விதமான சுகமும் அதிர்ஷ்டமும் வர பிரார்த்தனை சொன்னான். அவன் போனதும் தோட்டத்தில் மயில் ஆட ஆரம்பித்தது.

ஆடி முடியும் வரை அதைப் பார்த்தபடி இருந்தார்கள். பிடார் ஜெயம்மா எல்லோரிடமும் பிரியத்தோடு சொல்லிக் கொண்டு இன்னும் கொஞ்சம் ஊர்க் கதை பேசி, இன்னும் ஒரு டோஸ் புது டீகாக்ஷன் காப்பி சாப்பிட்டு ரெண்டு தரப்பிலும் பிரிய மனசே இல்லாமல் புறப்பட்ட போது பிற்பகல் மூணு மணியாகி விட்டிருந்தது.

அதற்குள், சங்கரனும் வசந்தியும் வேணாம் வேணாம் என்று மறுக்க, அசத்துகளே, சித்த சும்மா இருக்கணும் என்று அவர்களைக் கடிந்து கொண்டு ஜெயம்மா குழந்தை கழுத்தில் ரெண்டு பவுனுக்கு ஒரு புது சங்கிலி போட்டிருந்தாள். சிங்கப்பூர் போயிருந்த போது வாங்கியது என்று பளபளவென்று ராஜாக்களின் வஸ்திரம் போல மின்னித் திளங்கிக் கொண்டு ஜரிகையில் புட்டா புட்டாவாகப் போட்டு ஒரு புடவை வேறே கொடுத்தாள்.

சங்கரனுக்கு ஏது வாங்கித் தருவது என்று புரியாததால், கன்னாட் ப்ளேஸில் மதராஸ் பேங்குக்குப் போய் கிப்ட் செக் இருநூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தாள்

பிரம்மஹத்திகள், டாய்லெட் போற வழியிலே கூரையிலே சொருகி வச்ச பழைய பேப்பர்லே நாலு பூப் போட்டா கிப்ட் செக்காம். சரி அந்தக் கந்தல் காகிதத்துலே எழுதற போது பார்த்து எழுத வேணாமோ? இன்னும் பத்து வருஷம் கழிச்சு இருக்கற தேதியைப் போட்டுக் கொடுத்துடுத்துகள். வாங்கிப் பார்த்துட்டு சண்டைக்குப் போனா, அதனாலே என்னன்னு முழ நீளத்துக்குக் கீழேயே கோழிக் கிறுக்கலாக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுத்து அந்த ஏஜண்ட் பிரம்மஹத்தி. நீ முதல்லே நாளைக்கு அந்த கிப்ட் செக்கை என்கேஷ் பண்ணு.

வசந்தியின் அப்பா ஜெயம்மாவின் தாராள குணத்தாலும் தன் மகளிடம் அவள் காட்டும் வாத்சல்யத்தாலும் பரவசமடைந்து சங்கரனிடம் சொன்னார் –

மாப்ளே, இந்த காஷ்மீர் லேஞ்சியை நீங்க பதில் மரியாதையாக் கொடுத்தா நிறைஞ்சு இருக்கும்.

சங்கரன் அவர் கையில் பிடித்திருந்த நீள வாட்டில் மடித்த துணியைச் சிரத்தையின்றிப் பார்த்தான். அதில் பத்து நிமிஷம் முன் அவனுடைய மைத்துனன் மூக்குத் துடைத்த ஞாபகம்.

பதில் மரியாதையாக அப்புறம் ரூபாய் முன்னூற்றொண்ணு பழுக்காத் தட்டில் வெற்றிலை பாக்கு புஷ்பத்தோடு வைத்து ஜெயம்மாவிடம் வசந்தி தர, அவள் ஒரு ரூபாய்க் காசையும் புஷ்பத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டாள்.

அவர் எப்போவாது வெத்திலை போடுவார். பல்லு சரியில்லேன்னு டெண்டிஸ்ட் அதுக்கும் தடை போட்டிருக்கார். எனக்கானா இதெல்லாமே அலர்ஜி. நீயே உங்கப்பாவுக்கு நான் கொடுத்ததா கொடுத்திடு வசந்தி.

ஜெயம்மா சொல்ல, சங்கரன் இடைவெட்டினான் – எதுக்கு, அவர் திரும்ப தன் கடையிலே கொண்டு போய் விக்கறதுக்கா?

நீ இன்னொரு சோழ பிரம்மஹத்தி.

ஜெயம்மா அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக நின்றாள். அடுத்து ஏதாவது பேச யாராவது விஷயத்தை எடுத்தால் அவள் திரும்ப உள்ளே வந்து அதையும் பேசி முடித்துத் தான் போவாள் என்று தோன்றியது.

வசந்தி பழைய இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் சுற்றி எடுத்து வந்த இலையில் நாலு லட்டும், தேங்காய்ப் பருப்புத் தேங்காயில் பாதியும் இருப்பதாகச் சொன்னாள். வீட்டுக்குப் போனதும் ஓவல்டின் டப்பாவில் எடுத்து வைக்க மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள் அவள்.

ஓவல்டின் சப்ளை இல்லே இப்போ என்றார் வசந்தியின் அப்பா. கூடவே கரோல்பாக் தமிழ்க் கடைக் காரராகப் பொறுப்போடு யோசித்துச் சொன்னார் –

அதுக்கு பதிலா, மெட்ராஸில் இருந்து ஆல்விட்டோன்னு ஒரு புது பானம் வந்திருக்கு. நன்னா இருக்குன்னு எல்லோரும் சொல்றா.

அது வாயிலே ஒட்டிக்கறதே. ரெண்டு வாய் குடிச்சா உதடு கப்புனு ஒட்டி பேச்சே எழும்ப மாட்டேங்கறது என்றாள் புதுசாகப் பேசக் கிடைத்த ஜெயம்மா.

அடுத்த பத்து நிமிஷம் வேறே பேச்சே எழாமல், அவள் காரில் ஏறிக் கைகாட்டிக் கொண்டு புறப்பட்டுப் போக மழை பெய்து ஓய்ந்த அமைதி அங்கே. சங்கரன் ஒரு பத்து நிமிஷம் தூக்கம் போடலாம் என்று மெழுகு சீலைத் தலகாணியைத் தேட, வசந்தி உள்ளே இருந்து சத்தம் போட்டாள் –

இப்போ தூங்கினா ரெண்டுங் கெட்டானா ராத்திரி ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பீங்க. அப்புறம் ராத்திரி முழுக்க

அவள் பாதியிலே விட்டதும் அதற்கு மேலும் அர்த்தமாக, தான் பிரசவம் கழிந்துப் பத்தே நாள் ஆன மனைவியை சரீர ரீதியாகச் சுகம் கொடுக்க கஷ்டப்படுத்துகிறவன் இல்லை என்பதை எப்படியாவது அவளுக்குச் சொல்லத் துடித்தான். மேல் மாடி பஞ்சாபிப் பெண்கள் போனால் அதைச் சொல்லலாம்.

சாயந்திரம் வரைக்கும் பொழுது உருப்படியாகப் போக பகவதியின் டயரியைப் படிக்கலாம் என்று முடிவு செய்து உள்ளே இருந்து அந்தப் பழைய ஹோ அண்ட் கோ வெளியிட்ட கருப்பு தோல் போர்த்திய டயரியை எடுத்து வந்தான். வசந்தியின் உறவுக் காரர்களும் மேல் மாடி பஞ்சாபிப் பெண்களும் குங்குமம் வாங்கிக் கொண்டு போக, அமைதியாகக் கிடந்த வீடு.

கதவை அடைத்து விட்டு வந்து படிக்க உட்கார்ந்தான் சின்னச் சங்கரன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2024 18:56
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.