குரல்

 பாடகி பவதாரிணி குரலை என்னுடைய நடுநிலைப்பள்ளி இறுதி வயதில் கேட்டேன். நன்றாக நினைவில் உள்ளதற்கு காரணம் காதலுக்கு மரியாதை என்ற பிரபலமான திரைப்படத்தில் 'இது சங்கீதத்திருநாளோ..' என்ற பாடல் அது. எப்போதும் போல எங்கேயோ கேட்கும் ஒலிப்பெருக்கியில் கேட்டேன். 'ராகம் ரெக்கார்டிங்ஸ் ' ஒலிபெருக்கியில் ஆனந்தன் என்ற அண்ணாவின் திருமணப்பந்தலில் பெண்அழைப்பு நிகழ்விற்காக ஒலித்துக் கொண்டிருந்தது. 

டீயூசன் செல்வதற்காக வீ்ட்டிலிருந்து கிளம்பி இடையில் ஆனந்தன் அண்ணா வீட்டு முடக்கில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அம்மாள் , "பச்சபிள்ள ஒன்னு வாசல்ல நிக்கிது," என்று என் கையை பிடித்து இழுத்து வாசல் திண்ணையில் கிடந்த பாயில் அமர வைத்து சோறும் குழம்பும் அப்பளமும் வைத்தார். உள்ளூர்க்காரர் இல்லை. வீட்டிற்கு வந்த விருந்தாளியாக இருப்பார். பெரியர்வர்களை மறுக்கும் பழக்கம் இல்லாததால் சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு அப்பளத்தை கையில் எடுத்து கடித்துக்கொண்டே டீயூசனுக்கு சென்று நின்ற பின் தான் நேரமாகிவிட்டது என்ற பயம் வந்தது. [அதற்குள் அப்பளம் தீர்ந்திருந்தது].


அய்யா [சொந்த அப்பாக்கிட்ட ட்டீயூசன் போறது கெடுஊழ்] கையில் மூங்கில் பிரம்புடன் வந்து நின்றார். கையை நீட்டியதும் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு அடி. பின்பு தான் விசாரணை. குற்றம் பலமாக இருந்தால் இன்னும் அடி விழும். 

'பாட்டு கேக்கறதுக்கு நின்னேன் சார் ..சோறு போட்டுட்டாங்க' என்று சொன்னதும் அய்யா புன்னகைத்தபடி 'இனிமே லேட்டா வந்தீன்னா..ஐம்பது தோப்புகரணம் போடனும்' என்று உள்ளே அனுப்பினார்.

அந்தப்பாட்டை மறுபடி எப்போ கேட்போம் என்று இருத்ததற்கு காரணம் குரல் தான். பவதாரிணி குரலின் அடிப்படையும், பலமும் அதன் குழந்தைத்தன்மை. இளையராஜா பெண்ணாக பிறந்திருந்தால் அவர் குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நேற்று தோன்றியது. ஒரு வேளை அவர் தன்னுடைய உபாசனையில் தனக்கான பெண்குரலை அவருடைய தேவியிடம் கேட்டிருக்கவும் கூடும். அந்தக் குழந்தைத் தன்மை கேட்பவரின் கவனத்தை தன்னிடம் மட்டுமே பிடித்து வைத்துக்கொள்ளக் கூடியது.

வரிசையாக என் அடுத்தடுத்த வயதுகளில் பவதாரிணி தொடர்ந்து சினிமாப் பாடல்களும்,பக்தி பாடல்களும் பாடிக்கொண்டிருந்தார். கல்லூரி நாட்களில் 'மலர்களே மலர்களே மலர வேண்டாம்' என்றப் பாடலை அடிக்கடி விரும்பி கேட்பேன். அப்போது ஒரு குட்டி retro sony walkman என்னிடம் இருந்தது. சின்னய்யாவிடம் அடம் பிடித்து வாங்கியது. அவர் தன்னுடைய விருப்பமாக சேர்த்து வைத்த பாடல் கேசட்டுகள் இன்னும் இரண்டு பெட்டிகளில் உள்ளன. பாடல் கேட்பதில் அவருக்கும் எனக்கும் ஒத்துக்கொள்ளாது. அவர் அறை அதிர பாடல் கேட்பவர். 

ஒரு கேசட்டிற்கு பனிரெண்டு பாடல்கள். சின்னய்யாவிற்கு எட்டு பாடல்கள் எனக்கும் தங்கைக்கும் நான்கு பாடல்கள். 'என்ன பாட்டோ' என்று சலித்துக்கொண்டாலும் நான்கு பாடல்களுக்கான உரிமை தருவார். 

சில சமயங்களில் 'ஒரு முழு கேசட்டும் உங்களுக்குதான் ...எழுதுங்க பாப்பம்' என்பார். எங்கள் மெலடி பாடல்கள் தேர்வின் மீது அவருக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. நான் பெரும்பாலும் பவதாரிணி பாடல்களை எழுதுவேன். அவரும் அந்த சமயத்தில் நிறைய பாடினார். 

நேற்று எதேச்சையாக தொலைக்காட்சியில் தன் இறந்த மகளைப் பார்க்க இளையராஜா மருத்துவமனைக்குள் நடந்து செல்லும் காட்சியைப் பார்த்தேன். எப்படி தவிர்த்தாலும் வீட்டில் நம்மால் செய்தி தொலைக்காட்சிகளை தவிர்க்க முடிவதில்லை. அவர் நடந்து செல்வது மனதை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. நம்முடைய நோக்கிலிருந்து விலகி தந்தை ஒருவருடைய பார்வையில் இருந்து தொந்தரவு செய்வது.

இளையராஜா இசையால் நம்முடன் இணைந்தவர் என்பதால் அவரில் இருந்து மனதை மாற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது.

நேற்று இரவு என்னுடைய ப்ளே லிஸ்ட்டில் இருந்த பவதாரிணியின் இந்தப்பாடலை கேட்டேன். இளையராஜா இசை அமைத்து பாடலாசிரியர் விசாலி கண்ணதாசன் எழுதியது. மெல்லிய சோகத்தில் இருந்து இனியதாக மாறும் ஒன்று பாடலின் வரிகளில்,இசையில்,பாடகர்களின் குரலில் உள்ளது. 

https://youtu.be/WzqD5OC6xkM?si=0KxRpVWX-Ru3eihG

வள்ளுவர் சொல்வது போல,

நோயும்...நோய்க்கு மருந்தும் ஒன்று என்ற விஷயம் கலைஞர்களிடம் நடக்கிறது. பவதாரிணியில் இருந்து பவதாரிணியால் வெளியே வந்தேன். குழந்தைகள் மீட்பர்கள். குழந்தைக் குரலும் அவ்வாறானது தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2024 21:39
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.