துறைமுகம் என்னுரை

 நாளை என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பான துறைமுகம் வெளியாகிறது. வழக்கம் போல சென்னை இக்சா மையத்தில்...

சமர்ப்பணம்

அம்மாவுக்கு….


நன்றி

சொல்வனம்

தமிழினி

ஆவநாழி

ஓலைச்சுவடி

வாசகசாலை

மற்றும் இந்தத்தொகுப்பிற்கு பிழை நோக்கியவர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.



பெருங்கடலில் அவரவருக்கான கரைகள்


இந்தத்தொகுப்பில் இரண்டு கதைகளைத் தவிர மற்ற கதைகள் இந்த ஆண்டில் எழுதப்பட்டவை. எழுத்தில் ஒரு சிறிய  திசை திரும்பல் உள்ளதை கதைகளைத் தொகுக்கும் போது உணரமுடிகிறது. புத்தகங்கள் வாசிக்கும் போது வரலாற்றில் உள்ள மனிதர்களின் வாழ்வின் சில தருணங்கள் மனதிற்குள் கிடந்து தொந்தரவு செய்ததால் பாலாமணி பங்களா,அந்த கிச்சிலி மரத்தடியில், சுவடிகள்,துறைமுகம்,இலையுதிர் காலத்து மழை போன்ற கதைகளை எழுதினேன். 

ஒரு நாவலுக்கான முன்னுரை சிறுகதை எழுதுவதற்கான தூண்டுதலாக இருக்கும் என்பது வியப்பு தான். போரும் அமைதியும் நாவலில் ஹீயூ வால்போல் எழுதியிருக்கும் முன்னுரை என்னை மிகவும் கவர்ந்தது. போரும் அமைதியும் நாவல் எப்படி அவரின் பதின்வயதில் அவரை ஆட்கொள்கிறது பின்னர் வாழ்நாளின்  இக்கட்டான போர்க்கால காலக்கட்டத்தில் அவர் மனதுடன் துணையிருக்கிறது என்று எழுதியிருப்பார். ஒரு அதிகாலையில் அவரின் மனநிலையை கதையாக எழுதிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அதே போலவே ட்ராமா குயின் பாலாமணி அம்மாள்,கணித மேதை ராமானுஜம்,புனிதர் ஜான் மற்றும் நாடகஆசிரியர் சங்கரதாச சுவாமிகள் ஆகியோர் தங்களின் இயல்பால், தங்களின் தேடுதல்களினால்,தங்களின் செயல்பாடுகளால் என் மனதை பரவசம் கொள்ள செய்தார்கள். இவர்களை பற்றி வாசித்தப்பின் பலநாட்களுக்கு எழுத வேண்டும் என்ற உந்துதல் உள்ளே இருந்து இந்தக்கதைகளை எழுத வைத்தது.

பள்ளியில் கணக்குப்பாடம் எனக்கு சவாலானது. படிக்கும் காலத்தில் கணக்கு பாடத்தால் வகுப்பறைகளில் அவமானங்களை சந்தித்திருக்கிறேன். வேலைக்கான தேர்விலும் கணக்குப்பாடத்தால் மட்டுமே எனக்கு கட் ஆஃப் சரிந்தது. ஆனால் கணித மேதை ராமனுஜரை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் வாசித்த ராமானுஜரின் வாழ்க்கை வரலாறே எனக்கு கணிதத்தின் மீதிருந்த வெறுப்பை நீக்கி ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியது. கணிதத்தின் மீதான ஏக்கம் அவரால் வந்ததுதான். ஆனால் கணிதம் வரவில்லை. அவரை கதையில் எழுதும் போது அத்தனை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். 

ஒருநாள் இரவு தெருவில் கூத்து நடந்தது. அந்த கூத்தில் ராணவனராக நடித்தவரின் நடிப்பு மனதை விட்டு அகலவில்லை.  அது மூங்கில்காடு கதைக்கான உந்துதலாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே கதையாக எழுத முடிந்தது. மறுபாதி கதைகள் கிராமத்துக் கதைகள்.

 மனித இயல்புகள், நிகழ்வுக்கான சாத்தியங்கள், அவர்களுக்குள் இருக்க சாத்தியமான இன்னொரு அவர்கள்,அவர்களுக்குள் இருக்கும் தீவிரங்களே இந்தக்கதைகளை எழுத வைத்தன.

இங்கு அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்..

பெண்குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை விட தாய்க்கே சவால் அதிகம். அம்மாவுக்கு பதினெட்டு வயதில் நான் பிறந்தேன். நான் உடல் அளவிலும், கிறுக்குத்தனங்களிலும் சவாலான பிள்ளை. 

நான் வாசிக்கத்தொடங்கியதில் இருந்து மூன்று முறை வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நெருக்கடியான வீட்டில் எனக்கு வாசிக்க, எழுத ஒரு இடம் ஒதுக்குவதில் அம்மா அதிக கவனம் எடுத்துக்கொள்வார்.  கொஞ்சம் பெரிய பழமையான நடுத்தர குடும்பத்தில் அனைத்தும் பொதுவானவை. குடும்பத்தலைவருக்கே கூட சலுகைகள் இருக்காது. ஆனால் புத்தகம் வாங்குவதற்கான பணம் பதினெட்டு வயதில் இருந்து என் கைகளில் இருந்து கொண்டே இருக்கிறது. அய்யாவுக்கு பிறகு அம்மா இதில் கவனமாக இருப்பார். 

திட்டிக்கொண்டே இருந்தாலும் நான் புத்தகத்தை கைகளில் எடுக்கவில்லை என்றால்  உடம்பு சரியில்லையோ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார். எதாவது மனசஞ்சலத்தில் இரண்டுநாள் புத்தகம் எடுக்காமல் இருந்தால் கடுப்பாகி ‘..நீ படிக்க வேண்டியது தானே..அகத்தால அழிஞ்சானாம் ராவணனன்..பிடிவாதத்தால வாழ்ந்தாளாம் சீதை…பொம்பளைப்பிள்ளைக்கு பிடிவாதம் வேணும்,’ என்று சொல்வார். அம்மா பேச்சில் பழமொழிகள் சரளமாக வரும்.

அவர் எட்டாம் வகுப்பு வரை படித்த எளிய  கிராமத்து பெண். ஆனால் சாதாரண அம்மா இல்லை. தன் எல்லைக்கு மீறி என்னை போன்ற ஒரு கிறுக்குத்தனம் மிக்க பிள்ளையை புரிந்து கொள்பவர். எப்போதும் அடுக்கி வைக்கும் இயல்புள்ள அம்மாவுக்கு கலைத்துப்போடும் இயல்புள்ள பெண் நான். ஆனால் என்னை அடுக்க வைப்பது எப்படி என்று அவருக்குத் தெரியும்.

நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் அம்மா. நான் என் சூழலில் பார்க்கும் மற்ற அம்மாக்கள்,பெரியம்மாக்கள், சித்திகள் போல அம்மாவும் இருந்திருந்தால் என்னால் எழுதத்தொடங்கியிருக்க முடியாது.

பதின் வயதிலிருந்து பெண் பிள்ளைகளுக்கு அம்மாவுடன் சின்னதாக எப்போதும் முட்டிக்கொள்ளும் தன்மை இருக்கும். திருமணமாகி அம்மாவை பிரிந்து சென்றதும் அப்பாக்கள் குழம்பி மண்டையில் தட்டிக்கொள்ளும் வகையில் அம்மாவுடன் பேரன்பாகி விடுவார்கள். ஆனால் எங்களுக்குள் அந்த பிரிவில்லை. அனுதினமும் Tom and Jerry நட்புதான் என்றாலும் அன்பு மாறாமல் இருந்து என்னை புரிந்து கொள்ள எப்போதும் முயற்சி செய்யும் அம்மாவுக்கு இந்த சிறுகதைத் தொகுப்பு சமர்ப்பணம்..

இந்த நேரத்தில் எழுத்து மூத்தவர்களை வணங்குகிறேன். அவர்கள் மீது கொண்டுள்ள அன்பே என்னை வழிநடத்துகிறது.

                                   அன்புடன்,

                                   கமலதேவி

                   பா.மேட்டூர் [20/12/2023]





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2024 16:13
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.