An interaction with an Artificial Intelligence system -தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

சுவாரசியமான இந்த உரையாடல் என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இடம் பெறுகிறது. இந்த வாரம் திண்ணை இணையப் பத்திரிகையில் முழுமையாக வெளியாகிறது’.
———————————————————————————————————————–
போகட்டும். நீ என்ன யோசனை சொல்கிறாய் ஆயுள் நீடிக்க, அதாவது ஆயுள் நீடிக்க ஆய்வு செய்ய?

எனக்கு இது குறித்து யோசனை ஏதுமில்லை.

நாம் நல்ல நண்பர்கள். எனக்காக யோசித்துப் பார்க்கலாமே.

எனக்கு அப்படியான பிரியம், நட்பு, அன்பு போன்ற உணர்வுகள் கிடையாது.

வினோதமான யோசனை இருந்தால் கூட சரிதான்.

எப்படி, மங்களபுரத்தில் தவளை விழுங்குவது போலவா?

பிரதி நீலன் ஆல்ட் க்யூ சுறுசுறுப்பானார். இந்த தவளை விழுங்குவது பற்றி அவருக்குக் கடத்தப்பட்ட அறிவில் ஒரு வாக்கியத்தில் கூறப்பட்டிருந்தது. அவர் அதைப் படித்துவிட்டு, சிரித்துவிட்டு மறந்தும் விட்டிருந்தார்.

மங்களபுரத்தில் வருடம் இரண்டு தடவை இரண்டு குடும்பங்களாக சாமியார்கள் –ஆமாம், அவர்கள் குடும்பத்தோடு இருப்பவர்கள் – இமயமலையின் பனிச் சிகரங்களிலிருந்து வந்து குத்திருமலுக்கு வைத்தியம் பார்ப்பார்கள். ஒரு சல்லிக் காசு தான் வைத்தியருக்குத் தரவேண்டியது.

வரிசையில் விடியல்காலையில் வந்து அமர வேண்டும். ரிஷிபத்னிகள் போல் கூந்தலை இறுக்க வாரி உயர்த்திக் கொண்டை போட்ட இரண்டு ஸ்தூல சரீரப் பெண்கள் பாத்திரங்களில் மூங்கில் மூடி கொண்டு மூடி எடுத்து வருவார்கள்.

மூங்க் கோலோ என்று மந்திரச்சொல் கூறக் கண் மூடி வாய் திறந்திருக்க வேண்டும். திறந்த வாயில் ஒரு தவளை உயிரோடு ஆமாம் உயிரோடு இடப்படும்.

அடுத்த பத்து நிமிடம் நோயாளியோடு கூட வந்த நட்பும் சுற்றமும் அவர் இந்தத் தவளைக் குஞ்சை மென்று தின்ன வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். வாயும் வயிறும் பிரட்டி உண்டது திரும்ப வெளியேறாமல் வந்தால் மறுபடி அதை விழுங்க வைக்க உறவினர்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியாக விழுங்க வைக்க கருப்பு கோலா பானம் ஒரு மிடறு புகட்டலாம்.

இப்படி தவளை சாப்பிட்ட ஒரு மண்டலத்தில் நோயாளி நோய் குணமாகிறதாக நம்பிக்கை. அதற்கப்புறம் எப்போதாவது, குத்திருமல் திரும்பி வந்தால் ஊர்க் குட்டையில் தவளை பிடித்து உண்ண வேண்டியது தான்.

வருடம் இரண்டு நாள் தவளையை சூப் செய்து குணமான நோயாளிகளுக்கு அதைப் பருகக் கொடுத்தலும் நயம் பயக்கும்.

இந்த தவளை வைத்தியத்தை செயற்கை அறிவு அமைப்பு அதைப் போகிற போக்கில் கோடி காட்டிய காரணம் என்ன?

பிரதி நீலன் ஆல்ட் க்யூ யோசித்துப் பார்க்க அவருக்கு இன்னும் புரியவில்லை. வேறு ஏதாவது எளிய போம்வழி இருக்கக் கூடும்

செயற்கை அறிவு அமைப்பிடம் கேட்டார் – வேறு என்ன செய்யலாம்?

சஞ்சீவனி குடிக்க நாளாகலாம் என்றால் இப்போதைக்கு வேறு ஏதாவது கொடுக்கலாமே.

தவளையா?

கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் தவளை அத்தனை கோடி கிடைக்காது என்பதால் அவற்றுக்குப் பதிலாக மாட்டு ஈ என்ற உன்னிகளே அவை. மேலும் தவளைகள் பெருந்தேளரின் தேளரசில் கீழ்மட்ட குழு உயிர்ப்பு கொண்ட உயிரினங்கள் என்பதால் அவற்றை வேட்டையாடி மருந்து தயாரிப்பது தவறல்லவா? (மேலும்)

இப்போதைக்கு சகல இன சஞ்சீவனி விலையில்லாததாக அளிக்கப்பட வேண்டும். யாருக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கத் தான் மிகக் கடினமான யோசனை செய்ய வேண்டியிருக்கும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2023 03:38
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.