புதுக் கல்வி – நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தியா, தெருவில் திரிந்து கொண்டிருந்தியா? பத்து பனிரெண்டு வயதுள்ள ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சத்தம் போட்டார்கள்.

காரணம் இல்லாமல் இல்லை. காலையில் ஸ்கூல் போனபோது உடுத்தி விட்ட சுத்தமான யூனிபார்ம் முழுக்க திட்டுத் திட்டாக சாக்கடை வண்டலோடு சாயந்திரம் வந்து நின்றால் சத்தம் போடாமல் என்ன செய்வார்கள்.

ஓடைக் குழாயில் அடைப்பு நீக்குவது எப்படி என்று சிறப்பு வகுப்பு இருந்தது. ஆசிரியர் எப்படி ஓடைக் குழாய்க்குள் புகுந்து நறுமணம் முகர்ந்தபடி உடல் துன்பமேதும் படாமல் வெளியே வருவது என்று வகுப்பு எடுத்தார்.

என்னங்க, இங்கே வந்து பாருங்க. பாதாளச் சாக்கடைக்குள்ளே அந்த துர்நாற்றத்தை பொறுத்துக்கிட்டு வாடை பிடிச்சு வர்ற வகுப்பாம். எவனோ சனியன் பிடிச்சவன் கிளாஸ் எடுத்தானாம். இவனும் போய் உடம்பெல்லாம் சாக்கடை சேறு பூசிக்கிட்டு வந்து நிக்கறான். (மேலும்)

பிள்ளை யூனிபாரத்தை நீங்களே துவைச்சுக் கொடுங்க. என்னால் முடியாது. இந்த வாடை குடலைப் பிடுங்கறது. பாவம் குழந்தை. (மேலும்)

இதை எல்லாம் டிரெயினிங் எடுத்துக்கல்லேன்னா என்ன ஆகிவிடப் போறது? அதுவும் பாதாளச் சாக்கடைக் குழாய்க்குள்ளே இந்தப் பக்கம் நுழைஞ்சு அந்தப் பக்கம் வெளியே வர்றதாம். உவ்வோ. என்ன படிப்போ, என்ன ஸ்கூல் சிலபஸ்ஸோ.

கோகர் மலைநாடு முழுக்க அந்த மாலையில் தேளரசர் அரசைத் திட்டித் தீர்த்தார்கள், முக்கியமாகப் பெண்கள். எல்லா இனத்துப் பெண்களும் தான்.

தேளின, கரப்பினப் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக அந்த வசைமாறியில் கலந்து கொண்டு நனைந்தார்கள். அவர்கள் திட்டுவது மனமொட்டாமல் இருந்தது பெரும்பாலும். அந்தப் பிள்ளைகள் பாதாளச் சாக்கடைக் குழாய்க்குள் புகுந்து புறப்படுவதை விரும்பிச் செய்வார்கள் என்பதால் அவர்களுக்கு யூனிபாரம் துவைப்பது மட்டும் பிரச்சனையாகச் சுட்டிக் காட்டப்பட்டது.

வார இறுதியில் குழலன் தலையும் உடலும் இசைந்து சேர்ந்திருக்க, எதாவது பள்ளியில் அவனுடைய நண்பர்களோடு கூட்டம் நடக்கும். குழலன் கூட்டத்தையே நான்கு பரிமாணங்களில் கூறு மாற்றிப் பொதுப் பார்வையிலிருந்து அகற்றி விடுவான். இல்லாவிட்டாலும் தேளரசுக்கு அவனோ அவன் பின்னால் நடக்கிற பத்து இருபது பேரோ பிரச்சனை இல்லை.

பல வருடமாக இது நடந்துகொண்டு தான் இருக்கிறது ஏறக்குறைய வாரம் ஒரு முறை. ஞாயிறு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற மாதிரி கூட்டம், கவிச்சி தின்கிற மாதிரி அதில் உப்பும் உரைப்பும் கார சாரமாக விவாதமும் நடக்கின்றது.

குழலன், அரசுக்குப் பொழுது போகாவிட்டால் கைதாக்கப் படுவான். தினுசுதினுசாக அவனை எங்கெங்கோ அடைத்து வைத்து ஒரு மாதத்தில் விடுதலை செய்வார்கள்.

அவன் வாராந்திரக் கூட்டம் நடத்தி நாளைக்கே பெருந்தேளரின் அரசை நீக்கப் போகிறான் என்று சொன்னால் அவனே நம்பப் போவதில்லை.

ஆரம்பத்தில் குழலனுக்குத் தலை தனியாகவும் உடல் தனியாகும் இருப்பதற்கு அரசாங்க நடவடிக்கையைக் காரணம் காட்டி உடனே அவற்றை ஒத்திசைவு கொண்டு ஓரொற்றை உருவமாக்கப் போராட்டம் செய்து ஆதரவு கொண்டாடப்பட்டது.

இருப்பது தெரியாமல் ஒரு ஐந்து பேர் வாய்க்குள் முணுமுணுப்பாக, ’நேராக்கு நேராக்கு குழலன் உடலை நேராக்கு’ என்று தலா நூறு தடவை முழங்கி எதிர்ப்புக் கூட்டம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

சொல்லப் போனால் குழலன் தலை தனியாக, உடல் தேளுடலாக இருந்தபோது பயப்படாமல் மூன்று பேர் கூட்டத்துக்கு வந்து கோஷம் முழங்கினார்கள். அதற்கு அடுத்த நாள் குழலன் கைது. குகைகளில் அடைப்பு.

அதற்கும் அடுத்த வாரம் விடுவித்தபோது தலையோடு உடம்பும் மனுஷத் தலை, மனுஷத்தனமாக நிலைத்திருக்க, மூன்று நபர் போராட்டமே இதற்குக் காரணமாகக் காட்டப்பட்டது.

தேளின, கரப்பு ஆசிரியர்கள் பாதாளச் சாக்கடைக்குள் கடந்து போய் வெளி வரப் பயிற்சி ஏற்படுத்தி அதில் மாணவர்கள் பங்கு பெறுவது கட்டாயமென தீர்மானிக்கப் பட்டது கடும் கண்டனத்துக்குரியதாக நடவடிக்கையாக குழலனால் அறிவிக்கப்பட்டது.

இதோடு அரசுக்கு அவ்வப்போது தர வேண்டிய சஞ்சீவினி தொடர்பான கட்டணங்களைக் குறித்தும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

குழலன் ’போதும் கர்ப்பூர விளையாட்டு – வேண்டாம் கர்ப்பூர வினையாட்டு’ என்று முழங்கிக் கூட்டத்தைத் தொடங்கினான். இன்றைக்கு நம்பவே முடியவில்லை, ஐநூறு பேர் பங்கெடுத்த பெருங் கூட்டமாக இருந்தது.

பள்ளி கால்பந்து மைதானத்தில் கூறு மாற்றிக்கொண்டு பங்கெடுத்த ஐநூறு பேரும் பள்ளி மாணவர்களின் பெற்றோர். குழலன் அவர்களுக்கு அறிவித்தான் –

மாணவிகளின் பெற்றோர் பங்கெடுக்க வேண்டாம். இந்த அரசு நடவடிக்கை மாணவர்கள் மட்டும் கழிவுநீர் நடுவே நடந்தும் நீந்தியும் போய் கழிவுநீர்க் கால்வாயிலும், குழாயிலும் அடைப்பு நீக்க, அந்த பெருமணம், என்றால் துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் தொடங்கி வெவ்வேறு நிலை நிகழ்வுகள் சம்பந்தப்பட்டது. (மேலும்)

மாணவிகளும் சாக்கடைப் பணி செய்ய வேண்டும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒரு நிலை உருவானால் மாணவிகளுக்காகவும் நாம் போராடுவோம்

என்று சொல்லிக் கூட்டத்தைக் குறைக்க முயன்றான் குழலன். அது என்னமோ நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டுதான் இருந்தது.

குழலன் சொன்னான் – இந்தக் கூட்டம் பாதாளச் சாக்கடை நிர்வாகம் மற்றும் செயல்பாடு என்ற உன்னதமான காரியங்களை இகழவோ, அதனில் ஈடுபடுவதை நகையாடவோ இல்லை. (மேலும்)

பெரும்பாலும் யந்திரங்கள் செய்யும் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு அகற்றும் பணி போன்றவற்றை மனிதர்கள் போன்ற உயிரினங்கள், அதுவும் பிஞ்சுகள் மேற்கொள்ள வேண்டுமாம். இதுவே தவறான கண்ணோட்டம். இதை நிறைவேற்ற, நூறு வருட முன்பு இருந்த, மனுஷர்கள் கையால் கழிவு நீக்கும் பழங்கால அ-தொழில்நுட்பத்தை மறுபடி கொண்டு வருகிறார்களாம். இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது என்றுதான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். (மேலும்)

மாணவர்களுக்குப் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்குவதைக் கற்பிக்க எடுத்த நடவடிக்கையை ஜாக்கிரதையாக அணுகவேண்டும். பாதாளச் சாக்கடை குழாய்கள் உள்ளே புகுந்து வர யந்திரங்களப் பயன்படுத்துவதை விட இப்படிக் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டால் செலவு மிகக் குறைவாகலாம். ஆனால் சிறுவர்கள் என்பதால் விஷவாயுவை சுவாசித்து உயிர் நீக்க துரதிருஷ்டமாக நிறைய வாய்ப்பு உண்டு. (மேலும்)

இதைச் சொன்னால், சஞ்சீவனி மருந்து புகட்ட ஆரம்பித்த பிறகு சாவே இருக்காது என்று அறிவு பூர்வமில்லாத பதில் சொல்கிறார்கள். (மேலும்)

நூறு பள்ளிகள். கிட்டத்தட்ட பத்தாயிரம் மாணவர்கள். தேவைப்படும்போது பள்ளிக்கு வந்து பாதி வகுப்பில் கூட்டிப் போய் உடனே பழுது தீர்த்த பெருமையை யார்யாரோ சூட்டிக் கொள்ளலாம்.

(மேலும்)

பாதியில் நின்ற பாடத்தை அடுத்து நடத்துவது எப்போது? வாரக் கடைசியில் சிறப்பு வகுப்பாம், ஞாயிறன்று பள்ளிக்கு வரச்சொல்லி ஓர் அழகான வார இறுதியையே குழந்தைகள் வெறுக்க வைப்பதில் யாருக்கு ஒரு குரூர மகிழ்ச்சி? மேன்மை வாய்ந்த பெருந்தேளரசருக்கா? (மேலும்)

அவருடைய இடது கரமான, வேறு எந்தக் காலத்தில் இருந்தோ, வேறு எந்த கிரகத்தில், நட்சத்திர மண்டலத்தில், பிரபஞ்சத்தில் இருந்தோ இங்கே வந்திருக்கிறானே மகாராட்சசன் அவனை கூறு நீக்கம் செய்தாலே முக்கால்வாசி பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும். (மேலும்)

நீலன் வைத்தியர் என்ற அப்பாவி மானுடனை இவன் சொல்கேட்டு பெருந்துயில் மண்டபத்தில் துயில வைத்திருக்கிறார்கள். வைத்தியர் எப்போது எழுந்து எப்போது சஞ்சீவினி மருந்து காய்ச்சி எப்போது எல்லோருக்கும் புகட்டுவது? (மேலும்)

சஞ்சீவனிக்கு இந்தக் கட்டணம், அந்தக் கட்டணம் என்று இதுவரை எட்டு தடவை ஏதேதோ வசூல் பண்ணி மாதம் நூறு மில்லியன் பணம் கஜானாவுக்குப் போகிறது. சஞ்சீவனி இன்னும் வரவில்லை அதற்குள் அதற்கான ஆயத்த நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். கட்டாமல் முடியாது என்று வங்கிக் கணக்கை சர்க்கார் கருவூலத்தோடு பிணைத்து வைத்திருக்கிறார்கள். (மேலும்)

மாதச் சம்பளம் வந்ததும் குடும்பத்துக்கு உணவு, உடை, உடல்நலம் பேணுதல், அடிப்படை இதர செலவுகள் செய்ய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்குள் கவர்மெண்டுக்கு காசு எடுத்து, வந்த சம்பளத்தில் பாதிக்கு மேல் போய்விடுகிறது. (மேலும்)

இதற்கெல்லாம் முக்கிய காரணம் வேறு கால வாசி, வேறு பிரபஞ்ச வாசி. குழலன் நிறுத்தினான் –கர்ப்பூரம் என்ற பெயரோடு எங்கிருந்தோ எப்படியோ வந்து சேர்ந்தவன். (மேலும்)

பெருந்தேளர் அவன் நிர்ணயித்தபடி அரசு நடத்திப் போகிறார். ஏற்கனவே இருக்கப்பட்ட பிரச்சனைகள் போதாதென்று இந்த சாக்கடைப் பயிற்சி. சந்திரமண்டலம் சூரியமண்டலத்து இயல் கண்டு கற்போம் அந்தியில் சந்தி பெருக்க சாத்திரம் பார்ப்போம் என்று ஒரு பழைய கவிஞர் பாடி இருக்கிறார். (மேலும்)

ஆக நாம் இந்த சாக்கடைப் பயிற்சியைத் தேவையான யந்திரங்கள் வந்தபிறகு அவற்றை இயற்றிக் கற்க வழி செய்வோம்.

குழலன் பேசிக்கொண்டிருக்கும்போது மைதான ஓரமாக உரக்க யாரோ பேசும் சத்தம் கேட்டது.

பள்ளிச் சிறார் வீடு வீடாக செய்யும் தொழில் உத்தியோகம் பற்றிய சர்வே எடுக்கப் போகிற போது அவர்களிடம் காண்டோம் பாக்கெட்டுகளை அவர்கள் என்ன என்று அறியாமல் எடுத்துப் போய் விநியோகிக்க வைக்கிறார்கள். இதையும் பேச வேண்டும் என்று நீலச்சட்டை போட்ட யாரோ இரைகிறார்கள்.

மானுடச் சிறுவர்களைப் பற்றி மட்டும் கரிசனம் காட்டினால் போதாது. இந்த பிரச்சனை வேறு இனச் சிறாருக்கும் இது இல்லாவிட்டால் வேறு மாதிரி பிரச்சனை இருக்கும் என்று மெலிந்து உயர்ந்து நல்ல வெண்மை நிறத்தில் காணப்பட்ட சுவானர், என்றால் நாயினத்தார் ஒருவர் சொன்னார். எங்கள் இனத்தார் மேல் காரணமே இன்றிக் கல்லெடுத்து விட்டெறிவதைத் தடுக்க வழியில்லையா? விருந்தாளிகள் மேல் கூட வேகவைத்த சிறு உருளைக் கிழங்குகளை இடுப்புக்கு மேலே எறியலாம் என்று அனுமதி உண்டு. நாயினம் கல்லை எறிகிறவர்கள் பற்றி சதா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

சொல்கிறேன் என்று கோபிக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் எங்கேயும் இணைவிழைவதை நிறுத்தினால் மற்றவர்களும் கல்லெடுக்க மாட்டார்களே என்று கேட்டவர் சொல்ல, சிரிக்கலாமா என்று ஒரு நொடி தயக்கம்.

நாய் வம்சப் பிரமுகர் முதலில் குரைத்துச் சிரித்து ஆரம்பித்து வைக்க கூட்டமே பல மாதிரி சிரிப்பைப் பதிவு செய்தது. குழலன் சிரிப்பு ஓயக் காத்திருந்தான்.

பாதாளச் சாக்கடை வகுப்புகளுக்குப் போக மாட்டேன் என்று மாணவர் மறுக்க அவர்களுக்கு அதிகாரம் தேவை. அதற்காக இப்போதே போராட்டம் துவங்கி விட்டோம். உங்கள் பிள்ளைகளை அப்படியான வகுப்புகளுக்குப் போகமாட்டோம் என்று பயமின்றிச் சொல்லச் சொல்லுங்கள். தேளரும் கரப்பரும் என்ன செய்வார் பார்ப்போம் என்று சொல்லும்போது அந்த இரு இனப் பெற்றோர் வெளிநடப்பு செய்தனர். நாய் இனப் பிரமுகர் அவர்கள் மேல் கல்லெடுத்து எறிந்தார்கள்.

பிற்கு அவர்களை நோக்கிப் போக ‘வேண்டாம் அது ஒவ்வாதது’ என்று தடுத்திருக்காவிட்டால் தேள், கரப்பு இனத்தார் மேல் ஞமலிதன் சிறுநீர் மழை கொட்டியிருக்கும். குழலன் சிரிக்க, நாய் வம்சத்தவர் தவிர மற்றவர்களும் அவனோடு நகைத்தார்கள்.

அரசு அலுவலகங்களில் என் நண்பர்கள் மூலம் கேட்ட செய்தி அல்லது வதந்தி இப்படி உள்ளது – நீலன் மருத்துவர் எழுந்து படுத்து எழுந்து படுத்து ஐந்து முறை துயில் தடுத்து விட்டார். அடுத்த துயிலுணர்தல் நிரந்தரமான விழிப்பாக இருக்கும். (மேலும்)

அப்போது அவர் சஞ்சீவனி மருந்து காய்ச்சுவாரோ, கிளறுவாரோ, குளிகையாக உருட்டுவாரோ அல்லது லேகியமாகப் பிடித்து உண்பாரோ அதற்கெல்லாம் முன்னால் உருவாக்கிய மருந்தை பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறார். நானூறுபிள்ளைகள் ஐந்திலிருந்து பனிரெண்டு வயது வரையானவர்கள் தேவைப்படும். (மேலும்)

நீலனுக்கு சஞ்சீவினி பரிசோதிக்க நூறு குழந்தைகள் ஐந்து வயதில் கூட்டிப் போக பெற்றோர் அனுமதி உடனே தர வேண்டி வரும். பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறவும் தோல்வி காணவும் வாய்ப்பு உண்டு. (மேலும்)

வெற்றியோ தோல்வியோ அச்சிறுவனின் உயிருக்கு அபாயம் வரும். அதிலிருந்து தப்பிக்கச் செய்யவோ, மருந்து பரீட்சிக்கச் சிறு நிதி கேட்டாலோ நாட்டுப் பற்று இல்லாத குடும்பமாகக் கருதப்பட்டு ரேஷன் போன்ற மலிவு விலை பொருள் கிட்டாது என்றான் குழலன். சுற்றி இருந்த கூட்டம் ஓவென்று அழத் தொடங்கியது

அழுது அரற்ற வேண்டாம். நான் இருக்கும்போது அப்படி எல்லாம் நடக்க விட்டு விடுவேனா?

குழலன் எதிர்பார்த்த நிமிடம் அது. வாழ்க குரல்கள் நிறைந்தது.
————————————————————————————–[]\\
99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல்

நாள் நேரம் 24 செப்டம்பர் 2023 பிற்பகல் 03 மணி முதல் இரவு 08 மணி வரை

இடம் கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2023 05:10
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.