சாவு தீர்க்க மருந்தொன்றிருக்குது

தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 31-இல் இருந்து

பெருந்தேளரும் தேளவை மருத்துவ, தொழில்நுட்ப அறிஞர்களும் ஏமப் பெருந்துயில் மண்டபம் ஏக, முதுதேளர் கணிசமாகப் பேசிக் களைத்ததால் அயர்வு வந்ததாக உரைத்து உடன் நித்திரை போனார்.

இது மறு உயிர்ப்பு இல்லை என்றும் பத்து இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும் தற்காலிக விழிப்பு என்றும் கூறப்படுகிறது. நீலர் இன்னும் சில நாட்கள் உறங்கியும், முதுபெருந்தேளர் சில நூற்றாண்டுகள் உறங்கியும் விழிக்க, அவர்தம் வலிமையும் அறிவும் முழு வீச்சில் தேளரசு பயனுறக் கிட்டும் என்று அறிவிக்கப்படுகிறது.

பிரமாதமாக வந்திருக்கு என்று கால் தட்டினார் பெருந்தேளர்.

கர்ப்பூரம் மேடை நடிகர் கைதட்டு கேட்டுக் குனிந்து சலாம் வைக்கிற பாவனையில் இடுப்பு வளைத்து பெருந்தேளருக்கு மிக மிகையான அபிநயத்தோடு வணக்கம் சொன்னான்.

பின்னே என்ன, அவனவன் சஞ்சீவனியை வரவேற்கக் கட்டணம் கட்டாயமாகக் கட்டினதிலிருந்து தொடங்கி, சின்னச் சின்னதாக ஒரு ஏழெட்டு தடவையாவது காசு கட்டி விட்டுக் காத்திருக்கிறான். அவர்கள் பொறுமை இழந்து போகிறது அரண்மனைக்கு வெளியே கழிவுநீர்ச் சாக்கடை ஓரமெல்லாம் நின்று பேசுகிறதில் தட்டுப்படுகிறது. ஹே ராஜன், இதை இப்படியே விட்டால் உம் பதவிக்கு ஆபத்து வந்துவிடும். நான் அதற்காக நீலன் எழுந்து உடனே மறுபடி உறங்கினதாகச் சரடு திரித்தேன். அதை இன்னும் அதிகார பூர்வமாக்க, திரித்த மற்றொரு சரடில், உம் மறைந்த தகப்பனார் முதுபெருந்தேளரையும் தாற்காலிகமாக உறக்கம் எழ வைத்தேன். எப்படி நம்ம வேலை?

அப்போது இதெல்லாம் நடக்கவில்லையா என்று அப்பாவியாகக் கேட்டார் பெருந்தேளர்.

இந்த அறிக்கையில் ஒரு கையெழுத்து போடும். வெளியிட்டு விடலாம் தாமதமில்லாமல். நீலன் மறுபடி எழுந்து உடனே மறுபடி துயின்றது உண்மையாக இருக்கலாம்.

போகட்டும். அவர் திரும்ப உறங்கப் போனதுதான் கணக்காகும்.

முடியே போச்சு என்று தலைகுலுக்கி நடந்தான் கர்ப்பூரம். சமயாசமயங்களில் கற்பனை செய்து சொன்னதும் நிஜமாகும் போல.

அரசு அறிக்கையை எழுதி வாசித்த கர்ப்பூரம் இறுதியில் சிரித்துப் பெருந்தேளரைத் தோளில் தட்டி, பெருந்தேளர் மட்டுமில்லே பெருந்தோளரும் தான் நீர் என்று பாராட்டியது பெருந்தேள்பெண்டுக்கு அறவே பிடிக்கவில்லை.

தேள்மொழியில் கக் கக் கக் என்று கணவரிடம் அவள் சொன்னது – இந்த இழிபிறவி உம்மைத் தோளில் தட்டினால் மெய் மறந்து இருக்கிறீர். தலையில் தட்டினால் பெருமையடைகிறீர். பிருஷ்டத்தில் தட்டினால் பெருமிதம் கொள்கிறீர். நான் இல்லாவிட்டால் வேறு எப்படி எல்லாம் சல்லாபம் செய்வீர்களோ! போகட்டும், ஜாக்கிரதையாக இருங்கள். அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்து தலையாட்டுங்கள். உம் சிரமோ கரமோ குறியோ அவன் கையில் பிடிபட விடாதீர்.

கர்ணநாதம் என்ற செவி கேட்காத நோய் வந்ததுபோல் பெருந்தேளர் அமர்ந்திருந்தார். நடப்பது ஒன்றும் பிடிக்கவில்லை என்று சொல்லி பெருந்தேள்பெண்டு வெளியேறினாள்.

இதற்குத்தானே காத்திருந்தேன் என்று பெருந்தேள்பெண்டு நீங்கிய வாசல் பார்த்திருந்த கர்ப்பூரத்தை அன்போடு அணைத்து அரியாசனத்தில் ஏறி நின்று உச்சி முகர்ந்தார் பெருந்தேளரசர்.

நீலன் அவசரக் குடுக்கையாக எழுந்தது நமக்குப் பிரச்சனை. அதைவிடப் பிரச்சனை முதுபெருந்தேளர் எழுந்து நடந்தது என்றான் கர்ப்பூரம்.

பெருந்தேளர் பேசலானார் –

கவலையே பட வேண்டாம். அவர் எழுந்தார் என்றால் அவர் உறங்கினார் என்றும் அவர் பேசினார் என்றால் அவர் உயிர் நீத்தார் என்றும் நான் சொல்வது தான் ஆவணப்படுத்தப்படும். (மேலும்)

நீர் என்ன சொல்கிறீர்? கிழம் விழித்தெழுந்து பையன்களோடு விளையாடி ரொட்டி தின்றதை எப்படி மாற்றி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் அரசு அறிக்கையில் ஏறக்குறைய நமக்கு வேண்டியபடி சொல்லியிருக்கிறீர்கள். (மேலும்)

நமக்கு கிழட்டு சைத்தான் பிரச்சனை இல்லை. நீலன் வைத்தியன் தான். நாட்டில் எல்லோரும் சஞ்சீவனி ஜபத்தில் இருக்கிறார்கள். நீர் கிளப்பி விட்ட எதிர்பார்ப்பு எல்லாம். (மேலும்)

சீக்கிரம் நீலன் எழுந்து மருந்து காய்ச்சாவிட்டால் என்னைக் காய்ச்சிடுவான் அவனவன். தலைக்காரன் குழலன் வேறே எங்கே எங்கே என்று இருக்கிறான் குற்றம் கண்டு பிடிக்க. நீலன் பேசினதும், கிழத்தேளன் சவமாக இருந்து சாவகாசமாக பேசினதும் எல்லாம் அவனுக்கு அனாவசியம். நீலன் எப்போது எழுந்து மருந்து காய்ச்சுவான் என்று காத்திருக்கிறான் (மேலும்)

அவன் குற்றம் சொல்ல ஆரம்பிக்க. என் வீட்டுக்காரி பெரும்பாடுப்பெண்டு இன்னொரு தொந்தரவு, குதத்தில் குண்டூசி குத்திய, குகுகு வலிப் பொம்பளை. சொல்லும் என்ன செய்யலாம்? (மேலும்)

பெருந்தேளன் குறையெல்லாம் கொட்டித் தீர்த்து கர்ப்பூரம் தரப்போகும் தீர்வுக்காக அவன் முகம் பார்த்துக் காத்திருந்தான்.

பேசாமல் மண்டபத்தில் இன்னொரு பேழைக்குள் படுத்துக் கொள்ளும். எல்லா தொந்தரவும் இல்லாமல் போகும்.

கர்ப்பூரமய்யன் பெரிதாக நகைக்க, பெருந்தேளர் பகடி புரியாமல், அதுவும் நல்ல யோசனை தான். கொசுத் தொல்லை கூட பேழைக்குள் இருக்காது. புதுத் தீனி, புதுத் துணி, கூடத்தூங்க புது ஜோடி, இங்கே யார் காரியம் பார்ப்பார்கள் என்பதுதான் பிரச்சனை என்றார் அவர் வேகமாகப் பேசி மூச்சு வாங்க.

யாருக்கு எழவு காரியம் பார்க்க என்று பெருந்தேளரின் கையைப் பற்றி விசாரித்தான் கர்ப்பூரம். இந்தப் பகடியும் பெருந்தேளரைக் கடந்து போனது.

ஆக எல்லாவற்றுக்கும் குணம் தெரிய அவ்வப்போது பத்து நிமிடம் கிழவரையும் வைத்தியரையும் எழுப்பணும்.

அதெல்லாம் பிரச்சனை அய்யனே என்றார் பெருந்தேளரசர்.

எழுப்புன்னா குடுகுடுன்னு போய் பேழையைத் திறந்து உலக்கி எழுப்புவீர் போல இருக்கே. எழுந்தாங்க, பேசினாங்க, மறுபடி உறங்கப் போனாங்க இப்படிச் சொல்லணும். இன்னிக்கு வெளியிட்டிருக்கோமே அது மாதிரி.

கர்ப்பூரம் தேளரைப் பார்த்துக் கண்ணடித்தான்.

பெருந்தேளர் மனநிறைவோடு காலை உணவு செய்யப் போனார். கர்ப்பூரம் கூடவே நடந்தான்.

நீரும் உண்ணும். அருமையான ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள் வந்திருக்கின்றன.

ஒரு உலோகத் தட்டில் பாதாம் பருப்பு, ஆப்ரிகாட், முந்திரிப்பருப்பு, பிஸ்தாஸியோ பருப்புகளை அராபிய பேரீச்சம்பழங்களோடு வழங்கினார் தேளரசர்.

நான் சாப்பிட்டாகி விட்டது. நன்றி என்றான் அவசரமாக கர்ப்பூரம். எந்த சாக்கடையிலே பொறுக்கி தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வந்துட்டானோ பிரம்மஹத்தி என்று மனதில் பெருந்தேளரை கடிந்து கொண்டு சொன்னான்.

நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?

பொதுஜனம் யாரோ பாதி உண்டு எறிந்த அழுகிக் கொண்டிருக்கும் கறியை வாயில் அடைத்துக் கொண்டு கர்ப்பூரனைக் கேட்டார் தேளரசர்.

இப்போது மண்டபம் அருகே ஒரு வீடு எடுத்திருக்கிறேன். பேய் ஓடும் வீடு என்று சொன்னார்கள். கூடவே ஓட நான் தயார் என்றேன். தானே வீடு பெருக்கி மெழுகி மேஜை நாற்காலியில் தூசி துண்டால் தட்டி நீக்கப் படுகிறது. என் உடுதுணி எல்லாம் தினம் குளிக்கும் முன் விழுத்துப் போட்டது உடனே துவைக்கப்படுகிறது. ஒரு காசு யாருக்கும் தரவில்லை என்று புன்சிரிப்போடு சொல்லிப் போனான் கர்ப்பூரம்.

வீடு திரும்பும் வழியில் வரிசையாக பள்ளிச் சிறுவர்கள் ஏமப் பெருந்துயில் மண்டபத்துக்குள் பாடியபடியே நுழைந்து கொண்டிருந்ததைப் பார்த்தான் அவன்.

இன்னும் கொஞ்சம் உறங்கலாமே

தாத்தா உறங்கிடு உன்

கையை எடுத்து தரையில் வைத்து

தாத்தா உறங்கிடு

என்று பாட ஓய்வு பெற்ற கூட்டம் பாட்டுக்கு அபிநயம் பிடித்தபடி துயில் மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி ஆடி வந்து கொண்டிருந்தார்கள்.

விலையில்லா பெரியோர் வழிபாடு என்று அவசரமாக எழுதிய அட்டையைப் பிடித்திருந்த சிறுவனிடன் வணக்கம் சொன்னான் கர்ப்பூரம்.

தேளரசனும் ஆச்சு மசுரானும் ஆச்சு படிக்க விடமாட்டேங்கிறானுங்க என்று பெரிய குரலில் பதில் சொன்னான். கவனமாகப் பார்க்க அது சிறுவனில்லை. குள்ளமான ஆசிரியன்.

தேளரசு செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று கர்ப்பூரம் சொல்ல, அதுவும் ஒரு சுவை என்றானாசிரியன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2023 20:52
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.