யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3

ஆறாவது கதவு(புதன், 12 நவம்பர், 2008)

என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப் புகழ்பெற்ற மர்செய் துறைமுகப்பட்டினம். 1930லிருந்து -1960 வரை அமெரிக்காவின் நிழல் உலகத்தை ஆட்டிப்படைத்ததில் மர்செய் விருமாண்டிகளுக்குப் பெரும்பங்குண்டு. சிரியா, துருக்கி, இந்தோ- சீனவிலிருந்து மார்·ஃபினை இறக்குமதிசெய்து அதை ஹெரோயினாக புடம்போட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து தாதாக்களுக்கெல்லாம் இலக்கணம் கற்பித்த போல்கர்போன்(Paul Carbon) விட்ட அம்பில் அமெரிக்கா தூக்கமின்றி தவித்ததும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரான்சு தீவிர நடவடிக்கையெடுத்து தாதாக்களை களையெடுத்ததும் வரலாறு. எழுபதுகளில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட பிரெஞ்சு கனெக்ஷன் திரைப்படத்தை எப்போதாவது பார்க்கநேர்ந்தவர்களுக்கு (மர்செய்) ஸ்தல மகிமை புரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை என்பது மாதிரி, ஸ்தல பெருமையைக் காப்பாற்ற அப்போதைக்கப்போது ஏதாவது நடக்கத்தான் செய்கிறது.
இந்தியச் செய்தித்தாள்கள் இப்போதெல்லாம் தங்கள் நிருபர்களைச் செய்தி சேகரிக்கவென்று எங்கும் அனுப்பவேண்டாம் என்று நினைக்கிறேன்: சாலைவிபத்து, பா.மா.கா எதிர்ப்பு, வைகோ அறிக்கை, தே.தி.மு.க. கேள்வி, அ.தி.மு.க. ர்பாட்டம், மார்க்ஸிஸ்டுகள் போராட்டம், முதல்வர் கையெழுத்தென்று தலைப்புகளில் அவ்வப்போது சில சொற்களையும், தேதிகளையும் மாற்றிக்கொண்டால் போதும் நாளிதழ் ரெடி.

இதற்கு முந்தைய வியாழக்கிழமை அதாவது 24-04-08 அன்று தமிழ் தினசரியொன்றில் மேற்கண்ட வழக்கமான புலம்பல்களுக்கிடையே தசாதாவரம் கேசட் வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகை என்றொரு சுவாரஸ்யமான செய்தி. நிருபர்களிடம் அமிதாபச்சனா யார்? சென்னை தண்ணீரா? வேண்டாம், என்று அவர் திருவாய் மலர்ந்ததாகத் தகவல். அடுத்த மாதம் ஹாங்காங்கில் கொஞ்சம் மாற்றிக் கேட்டா¡ல், கமலஹாஸனா யார்? தமிழ் சினிமாண்ணு ஒன்றிருக்கா? என்று அவர் மறுபடியும் ஆச்சரியப்படக்கூடும். தேவையா? திரைப்படப் பாடல் வெள்¢யீட்டிலெல்லாம் ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அதிசயம் உலகில் வேறெங்காவது நடப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் சத்தியமாக நடக்காது. ஆனால் பிரான்சில் மர்செய் புறநகரில் கடந்த 24-04-08 நடந்ததாகப் படித்த சம்பவம் அதைவிடக் கொஞ்சம் சுவாரஸ்யமானது:


இரவு எட்டுமணி. விட்டகுறை தொட்டகுறைண்ணு குளிர்காலம் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாதம், எழுநூறு மீட்டர் நீளமுள்ள கூட்ஸ் இரயிலில் வழக்கம்போல தனியொரு ஆளாக எஞ்சின் டிரைவர், கைகளை அதன்போக்கிலே அலையவிட்டபடி அமர்ந்திருந்தார். பாதையில் பிரச்சினையில்லை என்பதன் அடையாளமாக சமிக்ஞை விளக்குகள் பச்சை வண்ணத்தில் கண் சிமிட்டுகின்றன. புறப்படுவதற்கு முன்னால் அலுவலகத்திற்குச் சென்று தேவையான தகவல்களை ( விதிமுறைகளில் உள்ள புதிய மாற்றம், கடைசி நிமிடத்தில் பாதையில் ஏதேனும் மாற்றமிருந்தால் அதைப்பற்றிய தகவல்கள், ஓட்டவிருக்கும் இரயில் எஞ்சின் குறித்த தகவல்கள், டேஷ்போர்டு பற்றிய கையேடு) ஒரு முறை புரட்டிவிட்டு, கையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டிருந்தார். இன்னும் முப்பது கி.மீ தூரம் ஓடினால் வேலை முடிந்தது, வழக்கம்போல அலுவலகத்தில் கையிலிருப்பதை ஒப்படைத்துத்துவிட்டு, ஸ்டேஷனின் காத்திருக்கும் சமீபத்திய காதலியை ஆரத்தழுவி அவசரமாய் ஒர் இருபது சதவீத காதலை வெளிப்படுத்திவிட்டு மற்றதை உறங்காமலிருந்தால் பின்னிரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம். இரண்டு வாரமா எதிர்பாத்துக்கொண்டிருக்கேன், என்னை மறந்திடாதய்யாண்ணு, சின்னவீடு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியிருத்த சந்தோஷம் மனசிலும் உடம்பிலும் எக்குத்தப்பா என்னென்னவோ பண்ணுது. வண்டியின் வேகம் நிதானத்திற்கு வந்திருந்தது. தூரத்தில் நிலவொளியில் தண்டவாளத்தில் நிழலாய் ஏதோ கிடக்கிறது, மனப்பிராந்தியோ என்று ஒதுக்கினார், ஆனால் நெருங்க நெருங்க பொதியாய்க் கிடந்த நிழலுக்கு, வடிவம் கிடைத்திருந்தது. மரக்கட்டைகளும், உலோகங்களும், தண்டவாளத்தின் குறுக்கே கிடக்கின்றன. மூளை விடுத்த எச்சரிக்கையை, கைகள் புரிந்துகொண்டு எஞ்சினை நிறுத்த ஒரு சில வினாடிகள் பிடித்தன. எஞ்சினை விட்டு இறங்கிய ஓட்டுனர் அதே அவசரத்துடன் எஞ்சினுக்குள் ஏறி கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் தண்டவாளத்துக்கருகே காத்திருந்த கொள்ளையர் கும்பல். ஷோலே காலத்து கொள்ளையர்பாணி. தகவலைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(?) காத்திருந்தார். வந்த கும்பல் மளமளவென்று காரியத்தில் இறங்கியது. முதலாவது கண்டெய்னரின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; இரண்டாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; மூன்றாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள், ஒன்றுமில்லை; நான்காவது; ஐந்தாவது…ம்; இதென்னடா சோதனைண்ணு இஷ்டப்பட்டத் தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆறாவது கண்ட்டெய்னரின் பூட்டை உடைத்து கதவைத் திறந்ததில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி இருக்கவேண்டிய எலெக்ற்றானிக் பொருட்கள் இல்லையாம், இரவு நேரத்தில் கடவுள்மார்களின் நித்திரையைக் கலைத்ததின் பலனோ என்னவோ, இங்கே பரியை நரியாக்கிய கதையாக எலெக்ற்ரானிக் பொருட்களுக்குப் பதிலாக அத்தனையும் தலையணை உறைகள்-ஏமாற்றம். தகவல் கிடைத்து போலீஸ¤ம் வந்துவிட, காரில் ஏறி கொள்ளையர் கூட்டம் பறந்திருக்கிறது. நம்ம கூட்ஸ் டிரைவர் ஒரு மணி நேரம் கழித்து வண்டியை எடுத்துபோய் நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி, மற்ற அலுவல்கலையும் முடித்துவிட்டு காதலியைத் தேடி அலுத்துபோனது குறித்து வேண்டுமானால் ஒரு கதையாக்கலாம். னால் கொள்ளையர்கள் எதிர்பார்த்த கூட்ஸ்வண்டி அடுத்த அரைமணி நேரத்தில் எலெக்ற்றானிக் பொருள்களுடன் அவர்கள் காத்திருந்த பாதையிலேயே போயிருக்கிறது.


உலகமெங்கும் விலையேற்றம் இன்றைக்கு விபரீத பரப்பில் கால் வைத்திருக்கிறது. நடுத்தரவரக்கம் ஏழைகளாகவும், ஏழைகள் தரித்திரர்களாகவும் உருமாற்றம் பெறுவதற்கு உலகமயமாக்கம் தன்னாலான கைங்கர்யதைச் செய்துவருகிறது. மேற்கண்ட மர்செய் கொள்ளை முயற்சியைப் படித்தபோது உலகமயமாக்கலை நினைத்துக்கொண்டேன், அதுகூட அப்படித்தான். இப்படி எதையோ எதிர்பார்த்து கொள்ளை அடிக்கவந்தவர்கள் ஏதேதோ கதவுகளைத் திறந்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கிறார்கள், சரி ஆறாவது கதவு? கடைசியில் சொல்கிறேன். முதன் முதலில் உலகமயமாக்கல் என்ற சொல்லை உருவாக்கியவர்களின் மனதில் வேறு கனவுகள் இருந்தபோதிலும் உலகில் ஒரு மூ¨லையில் இருக்கிற மனிதனின் அறிவும், செயல்பாடுகளும், மறுகோடியில் இருக்கிற மனிதனின் தேவைகளுக்குப் பரஸ்பரம் உதவிக்கொள்ளக்கூடுமென்று உத்தரவாதம் அளித்தனர். அதன் இயங்கு துறைகளென்று அரசியல், பொருளாதாரம், கலை பண்பாடென்று சித்தரிக்கப்பட்டது. உண்மையில் உலகமயமாக்கல் மூலம் தாங்கள் சிம்மாசனத்தில் அமரலாம் என்று மனப்பால்குடித்த மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் கன்னத்தில் கைவத்துக்கொண்டு சோர்ந்திருக்கின்றனர். இதில் இலாபம் பெற்றது சீனா. உலகமயமாக்கல் மூலம் உலகச்சந்தையை வளைத்துபோடலாம் என்று கனவுகண்ட மேற்கத்திய மற்றும் அமெரிக்க பணமுதலைகள், கம்யூனிஸ போர்வையில் சீனாவென்ற ஒற்றை முதலாளித்துவம் விஸ்வரூபமெடுக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே சீனாவின் உற்பத்திக்கூலி அதாவது அதிற் பங்கேற்கும் மனித சக்திக்கான ஊதியம் உலக அளவில் மிகக்குறைவானது. இந்தியாவில் ஏரியில் தூர் வாரவேண்டும் என்றால் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடத்தும் மக்களைப் பார்க்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை வெளியேற்றவேண்டிய கட்டாயத்தில் உருவாகும் சீன நாட்டின் Three Gorges அணைக்கு எதிராக ஒரு காக்கை குருவி கூட அங்கே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பேருதான் கம்யூனிஸ சுதந்திரம். சீனாவில் அரசாங்கம் தீர்மானித்ததுதான் ஊதியம், கொடுப்பதுதான் கூலி, தவிர எல்லா கம்யூனிஸ்டு நாடுகளையும் போலவே வளர்ந்து வரும் நாட்டின் சுபிட்சங்களை அனுபவிக்கிறவர்கள் ஏழை சீனர்கள் அல்லர், கட்சித் தலைமையின் உறவினர்கள். சீன அரசாங்கத்திடம் பொதுவுடமை பேரால் குவிந்திருந்த தேசியச் சொத்துக்களை, முதலாளித்துவ கட்டமைப்புக்கு எழுதிகொடுத்தபோது சீன அரசே ஒரு இராட்சத முதலாளியாக அவதாரமெடுத்தது. தவிர பசுத்தோல் போர்த்திய புலியின் இப்புதிய அவதாரம், இதுவரை அரசின் பொறுப்பில் வைத்திருந்த மக்களுக்கான நலத்திட்டங்களைச் சுலபமாக அலட்சியப்படுத்த முடித்தது, தவிர மக்களின் வாழ்வாதாரத்திற்குச் செலவிட்ட தொகையும் மிச்சமானதால் பெரும் மூலதனங்களைக் குவித்துக்கொண்டு, புது பெருச்சாளி பழைய பெருச்சாளியை மிரட்டுகிறது. இன்றைக்கு உலக அளவில் அந்நிய முதலீட்டில் முதலாவது நாடாக சீனா இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

G7 நாடுகள் மூலதனங்களை ஆற்றில் போடலாமா? கடலில் கொட்டலாமா? என அலைந்துகொண்டிருக்க, நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், மேற்கத்திய மற்றும் அமெரிக்க தொழிற்சாலைகளின் தலைவிதிகளையும் தீர்மானிப்பவையாக இன்றைக்கு சிய நாடுகள், அதிலும் புற்றீசல்போல உலகச்சந்தையை மொய்க்கும் டூப்ளிகேட் சீனப்பொருட்களோடு விலையில் போட்டியிட இயலாமல் மேற்கத்திய தொழில்கள் முடங்கிவருகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. விலைவாசி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 30லிருந்து 40 சதவீதம் கூடியிருக்கிறது. உணவுப்பொருட்களை யாசகமாகப் பெற தொண்டு நிறுனங்களில் வாசலில் காத்துக்கிடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது.


சரி.. அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ கொள்ளையர் திறந்த றாவது கதவைப்பற்றி சொல்லலையே. அது வேறொன்றுமில்லை, குறைந்த ஊதியத்தில் இந்தியா மற்றும் சீனா உடபட உலக நாடுகளில் கிடைக்கும் மனித சக்திகளால் ஓரளவு இலாபம் பார்ப்பது.ஆனாலும்…ம். உலகமயமாக்கல் சொப்பனத்திற் கண்ட அரிசி சோற்றுக்காகாதென்றுதான் நினைக்கிறேன். ——————————————————————————————————————————
நன்றி: யுகமாயினி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2023 19:54
No comments have been added yet.


Nagarathinam Krishna's Blog

Nagarathinam Krishna
Nagarathinam Krishna isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Nagarathinam Krishna's blog with rss.