ழான் லுயிக் ஷெவிய்யார்
Jean – Luc Chevillard அல்லது ழான் லுயிக் ஷெவிய்யார் என்கிற இம்மனிதரை புதுச்சேரியில் இந்து ஆங்கில இதழ் நிருபரும் நண்பருமான நடராஜன் இல்லத்தில் 90களில் சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் புத்தக வெளியீடு விழா ஒன்றில் பேராசிரியர் கி. நாச்சிமுத்தோடு பார்வையாளர் இருக்கையில் பார்த்த நினைவு. தொடர்பு இல்லை. அண்மையில் கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் நாச்சிமுத்து இம்மனிதரை நினைவு கூர்ந்து பேசினார். எனக்கும் இம்மனிதர் ஆற்றியுள்ள பணிக்கு நன்றி தெரிவிக்கும் வைகையில் சில வரிகள் எழுதத் தோன்றியது கூடிய விரைவில் எழுதுகிறேன். இதொரு சிறிய அறிமுகம்.
புதுச்சேரியில் பிரான்சு அரசாங்கத்தால் Ecole française d’Extrême -Orient என்கிற ஆய்வு நிறுவனம் இயங்குகிறது. தமிழில் “தூரக்கிழக்கு நாடுகளைக்குறித்த பிரெஞ்சு ஆய்வகம்” எனப்பொருள் கொள்ளலாம். இந்த ஆய்வகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சு அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு சீனா, ஜப்பான், இந்தியாவென 19 கிழக்கு ஆசிய நாடுகளின் மொழி, பண்பாடு குறித்த புரிதலை ஆய்வுகள் ஊடாக மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் பிரெஞ்சுக் காலனியாகவிருந்த புதுச்சேரிக்கு அப்படியொரு வாய்ப்பு.
பிரான்சு நாட்டில் உயர்கல்வி முடித்து, அங்குள்ள தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் அறிஞராக ஷெவிய்யார் புதுச்சேரிக்கு 90 களில் வந்தார். அன்றிலிருந்து தமிழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார், தமிழ் என் சுவாசம் என்கிறார். தமிழ் இலக்கண மரபு, தமிழ் அகராதி மரபு, ஐரோபியர் பார்வையில் தமிழ், தமிழ் எழுத்தின் வரி வடிவம் முதலானவை இவர் ஆய்வு செய்த துறைகள். இது தவிர மொழியியல் ஆய்வறிவு வரலாறு (Histoire Epistémoloie Langage) என்கிற இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். இவருடையை உழைப்பின் பலனாக பல நூல்கள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. சங்கால கவிதைகளில் கூடுதல் ஈடுபாடு. சேனாவரையரின் தொல்காப்பிய உரை நூலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். 2022ஆம் ஆண்டு செம்மொழி விருது இவரைத் தேடிவந்து தமக்கு பெருமைசேர்த்துக்கொண்டிருக்கிறது.
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
என்ற பாரதியின் கூற்றின் சாட்சியமாக நின்று தமிழை, தமிழின் பெருமையை இப்பிரெஞ்சு மொழி அறிஞர் தமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு உரைக்கிறார். நன்றி ஐயா!
Nagarathinam Krishna's Blog
- Nagarathinam Krishna's profile
- 3 followers

