ஏமப் பெருந்துயில் மண்டப வருகையாளர்களும் செயல்பாடும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

ஏமப் பெருந்துயில் மையத்தைச் சுற்றிச் சிறு புகைப்பட கேமிராக்கள் கொண்டு துயர் களைதலை இருபத்துநாலு மணி நேரமும் கண்டு குறிப்பெழுத ஊழியருண்டு. இவற்றில் மிகச் சிறப்பானவை அதிக ஊதிய உயர்வைப் பெற்றுத் தர வல்லவை.

அஞ்சலி செலுத்த வராமல் போனாலோ, வந்து, கடனே என்று அஞ்சலி செலுத்திப் போனாலோ, கண்காணிப்பு ஊழியர்கள் அரசுக்கு உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் எதுவும் நடக்கலாம். அடுத்த ஆண்டு அஞ்சலி செலுத்த வராமல் போவதும் அவற்றில் ஒரு நடப்பு.

இன்றைய அஞ்சலி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சியில் தினம் ஒரு மணி நேரம் அன்றைக்கு நிகழ்ந்த அஞ்சலிகளில் நேர்த்தியானவை ஒளிபரப்பாகும்.

போன வாரம் கையில் கத்தி எடுத்து ஹரகிரி என்னும் ஜப்பானிய முறையில் தன்னுயிர் போக்க முற்பட்டு உடனே தடுக்கப்பட்ட அறுபத்தெட்டு வயது முதியவரின் அரச விசுவாசம் காட்டப்பட்டு நாடு முழுவதும் பாராட்டப்பட்டுள்ளது.

சிரத்தில் ஷவரம் செய்து மயிரை ஒரு தேள் படுத்திருப்பதுபோல் வழித்தெடுத்து அஞ்சலி செலுத்த வந்த ஒரு முப்பது வயதுக்காரன் எல்லோராலும் கைதட்டலோடும் பொன் காசுகளை அன்பளித்தும் கொண்டாடப் பட்டான். இன்னொருத்தன் இரண்டு தேள்கள் கலவி செய்வதாக தலைமயிர் மழித்து வந்ததற்கு என்ன பரிசு கிடைத்தது என்று இன்னும் தெரியவில்லை.

முகச் சவர பிளேட்களை வரிசையாக விழுங்கி அரசே நானும் உம்மோடு உமக்கு மறு உலகில் பணி செய்ய வருகிறேன் என்று கூவி உயிர் களைய முற்பட்ட நடுவயது குடிமகனின் விசுவாசம் சமூக வலைத் தளங்களில் அவரை ப்ளேட் அங்கிள் என்று செல்லமாகக் கூப்பிடப்படும் அளவு பிரபலமானது. அந்த ப்ளேட் கம்பெனி நிகழ்ச்சி வழங்குகிறவராக blade uncle-க்கு நிதியளிக்க அடுத்து முன்வந்தது.

கலவி செய்யும் தேள்களாக மயிரைச் சிரைத்து வந்தவனுக்கு பத்து மானிட ஆண்களுக்கு சர்வாங்க சவரம் செய்துவிடத் தண்டனை வழங்கப்பட்டது.

அடுத்த ஏமப் பெருந்துயில் அறை தண்டனை வழங்கப்பட்டு தற்காலிகமாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தப்படுகிறவர்களுக்கானது. போன வாரம் தொலைக்காட்சிச் செய்தியாளினி பெருந்தேளரசு என்று அறிக்கையில் இருந்ததை பெருந்தோலரசு என்று தவறாக உச்சரிக்க, அவளை மூன்று நாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி அவள் உறங்கும்போது இரு செவியருகிலும் பலமான தாளங்களைத் தொடர்ந்து முழக்கினர்.

தொலைக்காட்சி செய்தியாளினி கிட்டத்தட்ட சவ்வு கிழிந்த காதுகளைப் பொத்திக்கொண்டே மூன்று நாள் சென்று எழுந்தார். ஒரு வாரம் அடுத்து அவள் முழு குணம் அடைய ஆனது. இனி அவள் கனவிலும் தேளரசரைத் தவறாகப் பலுக்க மாட்டாள், எனில், உச்சரிக்க மாட்டாள். தண்டோரா முரசுச் சத்தம் இல்லாமல் உறங்க அவளால் இனி முடியாமல் போனதும் குறிப்பிடப்பட வேண்டியது.

அடுத்த மூன்று ஏமப் பெருந்துயில் அறைகளில் மகா மகா சக்கரவர்த்திகளின் பார்வையில் பட்டு, அவர் கண்டதும் காமுற்ற ஆண்களும் பெண்களும், அவரின் ஆண், பெண் ஆசை நாயக நாயகியர்களும் ஆழ் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் அங்கே துயில்வது, அரசருக்கு அவர்களோடு இணை விழைவு ஏற்படும்போது அதை நிறைவேற்றித்தரவாகும்.

இந்த சேவை, சக்கரவர்த்திகள் இந்த அழகன் அல்லது அழகியோடு இன்று இரவு கூட வேண்டும் என்று உத்தரவு அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆசை நாயகி அல்லது நாயகன் அரச உறவை எதிர்பார்த்து இருக்கும் படியாக விரைவுப் பணியாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2023 19:28
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.