தாசி நறும்வல்லியைச் சந்தித்து வந்த ஷாங்காய் நகரச் சீனப் பயணி

முதுபெரும்கிழவன் சொல்லி முடிக்கும்போது சீனர் மந்திலிருந்து கால் தாங்கித் தாங்கி வந்தார். குறிஞ்சி குடிலுக்கு வந்து கொண்டிருந்த சீனரின் மொழிபெயர்ப்பாளன் நடந்தபடிக்கே பின் தலையைச் சற்றே திறந்து எதையோ அழுத்திக் கபாலத்தை மறுபடி மூடிக்கொண்டான். ஒரு வினாடி இந்த நிகழ்வைப் பார்த்தவள் ராக்கி முதுகிழவி. வயதானதால் மனமும் கண்ணும் குறக்களி காட்டுவதாக இருக்குமோ என்று நினைத்ததைச் சொல்லியபடி போனாள் அவள்.

கீழே மலை ஏறத் தொடங்கி இருக்கும் இரண்டு பேர் தலையில் சுமந்திருப்பது சீனப் பிரப்பம் பெட்டி என்று மேலிருந்தே தெரிந்தது. அது சீனப் பயணியினது ஆக இருக்கக் கூடும். சீனன் தங்கிய விடுதி, அவன் மதுவருந்திய கள்ளுக்கடை, உண்டுபோன யாத்திரிகர் சத்திரம் எங்கும் சீனரின் பெட்டி கிடைக்காமல் போனாலும், நடுவயதுத் தாசி நறும்வல்லி வீட்டுப் படுக்கை அறையில் அவனது லங்கோடு கிட்டியது எனவும் தாசியின் உள்ளாடையை சீனன் அணிந்து போயிருக்கிறான் எனவும், அவளுடைய அந்தப் பட்டு உள்ளாடை ராசியானது என்பதால் சீனனின் இடுப்பிலிருந்து அதைக் களைந்து எடுத்து வந்து கொடுத்தால் நூறு பொற்காசு தாசி நறும்வல்லி பரிசு அளிப்பாள் என்பதை மலைமுது கிழவோனுக்கான செய்தியாகக் கொண்டு வந்தார்கள் வந்தவர்கள். பெரும் அலையாக நகைப்பு எழுந்தது உடனே.

சீனப் பயணி அதைக் கேட்டு ஒரு சுக்கும் புரியாமல் மொழிபெயர்ப்பாளனை உதவி கேட்பது போல் பார்க்க, அவன் தனக்குத்தானே முணுமுணுப்பதாக முடியாது போ என்று சொல்லி வாயை மூடிக்கொண்டான்.

சீனப் பயணிக்கு மொழிபெயர்ப்பாளன் வாய் அசைவு தெரிந்தது. என்றால் அவன் என்ன சொல்லியிருப்பான் என்று அறியாவிட்டால் அதனால் இடர் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டாகலாம். அவன் இந்த சீனனை சாக்கடைக்குள் அமிழ்த்துவோம் வாருங்கள் என்றோ அவனுடைய கையிடுக்கில் சந்தனம் பூசுவோம் வர விருப்பம் உள்ளவர்கள் வரிசையில் நின்று சந்தனம் எடுத்துக் கொள்ளலாம் என்றோ அறிவிக்கலாம்.

சீனருக்கு சந்தனமும் நரகலும் பார்க்கவும் முகரவும் ஒரே மாதிரித்தான் வாடை என்பதால் முன் சொன்ன இரண்டு விதமும் அவரை இம்சிக்க ஏற்படுத்தும் துன்பங்களாக இருக்க வேண்டும் என்று பட்டது.

சீனர் பின்னால் திரும்பிப் பார்த்துக் குனிந்து வணங்கி மொழிபெயர்ப்பாளனிடம் இதைச் சொல்ல அவன் கரகரவென்று வித்தியாசமான குரலில் இதை மொழிபெயர்க்க இயலாது மன்னிக்கவும் என்றான்.

சீன விருந்தாளி முகம் சுளித்து அசங்கிய வார்த்தைப் பிரவாகமாக என்று ஊகிக்கக் கூடிய விதத்தில் மொழிபெயர்ப்பாளன் காதில் ஏதோ சொல்லச் சிறியதாக வெடிச் சத்தம்.

மொழிபெயர்ப்பாளன் காதிலும் வாயிலிருந்தும் இளம் மஞ்சள் நிறத்தில் புகை வர அவன் உலோகத்தால் முடுக்கிக் கட்டி நிறுத்திய அமைப்பு சரிந்ததுபோல் கீழே சரிந்தான்.

”உலோகம் வைத்துச் செய்த யந்திரம் தான். மனுஷன் இல்லை”.

கிழவோன் சொல்லப் பெண்கள் எல்லோரும் அவனைச் சுற்றி வந்து ஊ ஊ ஊ என்று சத்தமிட்டு ஆடியபடி போனார்கள்.

நறும்வல்லி வந்த நாவல் தினை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2023 05:41
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.