முகபடாம் வாங்கி வந்த ஆனைக்காரன் – குறுநாவல் மனை

 

 

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 4

 

பிற்பகல். இன்றைக்கு இனிமேல் சித்ரன் வருவான் என்று தோன்றவில்லை.

 

பகவதி, உலர்ந்து கொண்டிருந்த சோற்றுப் பாத்திரத்தைப் பார்த்தாள். சித்ரனுக்குப் பிடித்த மிளகூட்டான். இதுவும் இன்று குப்பைக்குத் தான்.

 

ஒரு பெருமூச்சோடு பகவதியின் கை பாத்திரத்தை எடுக்க நீண்டபோது, பின்னாலிருந்து ஒரு வலுவான கரம் இணைந்தது.

 

‘எனக்கு இல்லையா?’

 

சித்ரன் குரல்.

 

சட்டென்று இறங்கிய மழை போல பகவதிக்கு உடல் சிலிர்த்தது.

 

‘ஒன்றும் இல்லை போங்கள். எதுவும் மிச்சம் இல்லை’

 

‘அப்படியா.. பார்க்கிறேனே’

 

கதவை மூடி விட்டு வந்தான் சித்ரன்.

 

’இதோ .இருக்கே.’

 

’எய்.. அதெல்லாம் சாப்பிடுவதற்கில்லை’

 

மார்பு விம்மித் தணிய உதடுகளை மனமே இல்ல்லாமல் விடுவித்துக் கொண்டாள் பகவதி. பொய்க் கோபம். இது கூட சந்தோஷமானதுதான்.

 

‘சரி வேண்டாம்.. பின்னே இவை?’

 

பச்சிலை மணக்கும் கரங்கள் உடலெங்கும் ஊறப் பகவதிக்குக் காலம் மறந்து போனது. திரும்பத் திரும்ப மழையில் நனைகிற சிலிர்ப்பு.  மேடச் சூட்டைத் தணித்து பூமியைக் குளிரச் குளிர ஆலிங்கனம் செய்கிற வலிய மழைக் கரங்கள்.

 

’இப்போதுதான் இதெல்லாம் நினைவு வந்ததா?’

 

கண்கிறங்கி இருக்க வாய் தன் பாட்டில் கேட்டது.

 

‘திருவேகப்புரையில்… திருமாந்தான்குன்னில்..கடம்பழிபுரத்தில்… திருநாவாயில்.. திருச்சிவப்பேரூரில்… எங்கே போனாலும் உன் நினைவுதான்.. அப்புறம் திருச்சூர் வடக்கும்நாத க்‌ஷேத்ரத்தில்…’

 

‘கோயிலில் பகவான் நினைவு இல்லையா வரவேண்டும்? பகவதிக்கு அங்கே என்ன?’

 

‘வடக்கும்நாத க்‌ஷேத்ரத்தில் புதிதாக ரெண்டு யானை வாங்கி இருக்கிறார்கள்’

 

காதருகில் இழையும் குரல். உரசி இழைந்து அக்னிக்கோடு போடும் உதடுகள்.

 

‘ரெட்டை யானைகள்,,, அழகான சித்திர வேலைப்பாடு செய்த முகபடாம் அணிந்து அருகருகே மெல்ல அசைந்து நிற்கிற இணை. நடுவே ஒரு நூல் நுழையவும் இடம் இல்லை. சருகு போல மெலிந்த பாகன் இப்படி இடம் கண்டு..’

 

பகவதி அந்த நடுவிரலை எடுத்துக் கடித்தாள்.

 

‘நானும் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வந்த வணிகனிடம் ஒரு முகபடாம் வாங்கினேன்’.

 

சித்ரன் கையில் எடுத்த சஞ்சியை உதற வேர்கள், பச்சிலைகள், ஒரு துணிச்சுருள்..

 

‘ஐயே.. இதென்ன.. ஆண் பிள்ளைகள் இதை எல்லாம் எடுத்து வந்து///’

 

அந்த சரிகைத் துணி, வைத்த கண்ணை எடுக்க முடியாத அழகு.. தமிழ்நாட்டில் பெண்கள் அணிகிறதுதான் எத்தனை வனப்பாக.. உடலை முழுக்க மூடுகிறாதாக..

 

‘பகவதி.. உடுத்திக் கொள்ளேன்.. பார்க்க வேண்டும்..’

 

‘சாப்பிட வேண்டாமா?’

 

பகவதியின் குரல் அவளுக்கே அந்நியமாக, சுவரம் தாழ்ந்து ஒலித்தது.

 

‘ஐந்து நாளாகச் சாப்பிடவில்லை… பசி.. ஆனைப் பசி..’

 

‘இருங்கள்.. சோறு வட்டித்துவிட்டு..’

 

‘அதற்குள் யானைக் கதை சொல்லி முடித்து விடுகிறேன்..’

 

‘ஓ…நீங்கள் ஒரு பொல்லாத யானைப் பாகன்..’

 

கைப்பிடியில் புதுத் துணி கசங்க, உடுத்தியிருந்தது நிலத்தில் சரிந்து சிரிக்க, காலம் விரைந்து, அங்கே மட்டும் உறைந்தது.

 

(

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2022 19:30
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.