பெரு நாவல் ‘மிளகு’ – Pepper Queen walks down the memory lane on the banks of river Sharawati, off Mirjan fort

An excerpt from my forthcoming novel MILAGU

போன மாதம் உள்ளாலில் இருந்து  சென்னபைராதேவியின் சிநேகிதி அப்பக்கா மகாராணி பத்தே பத்து நிமிடம் வந்து சந்தித்து விட்டுப் போனாள். வெங்கட லெட்சுமணனும் வகுளாபரணும் அப்பக்காவோடு வந்து அவளுக்கு மரியாதை செலுத்தி ஏதோ வினோதப் பிராணியைப் பார்க்க வந்ததுபோல் சென்னாவைப் பார்த்துத் திரும்பினார்கள்.

நீ நல்லா இருக்கியா, ஊர்லே மழை பெய்யுதா, நான் நல்லா இருக்கேன், காலையிலே இட்டலி சாப்பிட்டேன் என்று மிகப் பொதுவான வார்த்தைகளோடு அந்த உரையாடல் உப்புசப்பின்றி நடந்தேறியது. அப்பக்காவிடம் சொல்லணும் என்று நினைத்து வேண்டாம் என்று சென்னா ஒதுக்கிய ஒன்று உண்டு.

விழித்துக் கொண்டிரு அப்பக்காளே. நான் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்தேன். இங்கே போட்டு விட்டார்கள். உனக்கு அடுத்த வீடு அவசரமாகக் கட்டி விடுவார்கள். அல்லது என்னைத் தொலைத்துத் தலைமுழுகி விட்டு இந்த இடத்தில் உன்னைப் பிடித்துப் போட்டு விடுவார்கள். அணிலுக்குச் சோறு எடுத்து வைத்துக் கொண்டு நீயும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேணும்.

அப்பக்கா புறப்படும்போது  அவள் கண்ணில் துளிர்த்த கண்ணீர் நிஜம். சென்னாவின் கையைப் பிடித்துக்கொண்டு சென்னா சென்னா சென்னா என்றும் அபி அபி அபி என்றும் பெயரை மட்டும் அன்பு பொங்க உச்சரித்தபடி நின்றபோது வகுளாபரணன் தலை குனிந்து இருந்தான்.

ஒரு நல்ல அரசை, பெண் அதுவும் வயதான பெண் தொடர்ந்து ஐம்பத்துநான்கு வருடமாக ஆள்வது பொறுக்காமல் கலைத்து, தேவதைகள் இருந்த இடத்தில் குரங்குகள் குடியேற அவனும் கை கொடுத்திருக்கிறான். அவன் ஒரு நாள் இதைப் புரிந்துகொள்வான்.

வகுளாபரணன் புரிந்து கொண்டால் சென்னாவுக்கு என்ன, அவன் புரிந்து கொள்ளாவிட்டால் தான் என்ன?

ஜன்னல் வழியே பௌர்ணமிக்கு முந்தைய இரவுச் சந்திரன் அழகாக ஒளிர்ந்து குளிர் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பிறை கண்ட அன்னையா சென்னா?

கோகர்ணத்துக்கு வந்து வழிபட்டு மிர்ஜானுக்கு வந்த மராத்தியப் பேரூர் பண்டரிபுரத்து விட்டல பக்தரான மராட்டி பேஷ்வாவும் அவருடைய அழகான மனைவியும் குழந்தைகளும்  சென்னபைராதேவி பற்றி மிர்ஜான் கோட்டை கட்டிய தொழில் வினைஞர் கூறியது கேட்டு அவளைச் சந்தித்துப் போக வந்தது நேற்றுப்போல் நினைவு வருகிறது. முப்பது ஆண்டுக்கு முந்திய அந்தச் சந்திரனும் பூரணத்துக்கு இரண்டு நாள் முந்தைய சந்திரன் தான்.

சென்னபைராதேவி ஜன்னல் பக்கம் போனாள். மேகம் ஒரு பொதியாகச் சந்திரனை மறைக்கத் திரண்டு கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது.

பூரண சந்திரனுக்கு முந்திய அர்த்த பூரண நிலா சென்னா வாழ்க்கையில் எத்தனை தடவை வந்து போயிருக்கிறது. ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி நின்று நிலவை வெறித்தாள் சென்னா.

அப்பா இறக்கும்போது அவளுக்குப் பதினைந்து வயதுதான். அவருக்கு வாரிசு என்று வேறு மகனோ மகளோ இல்லாததால் சென்னாவுக்கு ஆட்சியைக் கைமாற்றிக் கொடுத்தது மேல்நிர்வாகம் செய்திருக்கும் விஜயநகரப் பேரரசு. அப்போது செயலாக இருந்த பேரரசு அது.

அப்பா இருந்தவரை கெருஸொப்பாவில் அரச மாளிகையில் தான் எலிகளோடும், பூனைகளோடும், கரப்பான் பூச்சிகளோடும் வசித்து வரவேண்டி இருந்தது.

மிளகு சாம்ராஜ்ஜியம் குறுகலான வீடும் வாசலில் குப்பையுமாக இருந்ததை மிளகு வாங்க வந்த போர்த்துகீசியரும். ஒலாந்தினரும், என்றால், டச்சுக்காரர்களும் வாசலிலேயே நின்று வியாபாரம் பேச வேண்டிப் போனது.

சென்னாவுக்கு அந்த வீடு மட்டுமில்லை, கெருஸொப்பாவே பிடிக்கவில்லை. அப்பா காலமாகும் முன் ஹொன்னாவருக்கு ஒரு தடவை போயிருந்தபோது சென்னாவையும் கூட்டிப் போனார்.

இரவு நேரத்தில் சந்திர ஒளியில் ஹொன்னாவரை ஒட்டி   ஆற்றங்கரையில் நடக்கும்போது வேறு உலகம் மாதிரித் தெரிந்தது வெளி.

இந்த வெளியில் கூடாரம் அமைத்து நிலவுகாய வேண்டும் மகிழ்ச்சியைச் சொல்லும் நிலவு சோகம் கூறும் சந்திரன் கூட வந்த குளிர்காற்று என்று கவிதை மனதில் நெய்தபடி உறங்க வேண்டும்.

அப்பா சொன்னார். அவர் ஒரு காலத்தில் பெரிய கொங்கணிக் கவிஞராக இருந்தவர். அம்மா இறந்தபிறகு கவிதை அவரிடமிருந்து விடைபெற்றுப் போனது.

அப்பா ஷெராவதியின் கிளைநதி அகநாசினிக் கரை உங்கள் கவிதைகளை மீட்டெடுத்து விட்டது போலிருக்கிறதே என்று சென்னா அப்பாவைக் கேட்டபடி உட்கார்ந்திருந்த இடத்தில் சத்தம் குறைவாகச் சலசலத்து ஓடும் நதி அந்த நிலப்பரப்பை முழுக்க ஒட்டி நடந்து போனது.

அப்பா சொன்னார் சென்னா நீ ஏன் கவிதை எழுத முயற்சி செய்யக்கூடாது?

எனக்கு கணக்கு வருமளவுக்கு கவிதை வரமாட்டேன் என்கிறது அப்பா.

அப்பா சிரித்தார். கணக்கும் வேண்டியதுதான் வாழ்க்கைக்கு. கவிதை வேண்டும் ஆத்மாவுக்கு. எனக்கு ஒரு ஆசை. நான் இறப்பதற்குள் நம் ஆட்சியமைப்பை இந்த அகநாசினிக் கரைக்கு மாற்றிப் பார்க்க வேண்டும்.

அவர் சொல்லிய அந்த ராத்திரிக்கு மூன்று மாதம் சென்று இறந்து பட்டார் ஒரு நிலவு ஒளிர்ந்த ராத்திரியில்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2022 18:33
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.