பெரு நாவல் ‘மிளகு’ – This is how Keladi Venkatappa usurped Gerusoppa throne

An extract from my forthcoming novel –

வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம்.

கெலடி மாநிலப் படைத் தலைமைத் தளபதிகளும், சேனாதிபதிகளும் மிடுக்காக நடந்து வர, நடுவே கம்பீரமாக நரை மீசையை நீவிக்கொண்டு கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் வந்து கொண்டிருந்தார்.

அத்தனை பேரும் உள்ளே நுழைந்தபின் வாசல் கதவுகள் உள்ளிருந்து தாளிடப்பட்டன. கெலடிப் படைகள் கோட்டைக்குள் அரச மாளிகை வாசலில் அணிவகுந்து நின்றதை உள்ளே இருந்து பார்க்க முடிந்தது. அவர்கள் சத்தத்தையும் கேட்க முடிந்தது.

மிளகுராணிக்கு வணக்கம் என்று சொல்லி வெங்கடப்ப நாயக்கர் சென்னாபைரதேவிக்கு முன் குனிந்து வணங்கினார்.

மிளகு ராணி வாழ்க என்ற குரல்  நீல வண்ணத்தில் தலைப்பாகை அணிந்திருந்த சைன்ய உடை உடுத்தியிருந்த இளைஞரிடமிருந்து வந்தது.

வகுளாபரணன்.

சென்னபைராதேவி அமர்ந்தபடி கெலடி அரசருக்கு வணக்கம் சொன்னாள். நாயக்கர் சென்னா அருகே இன்னொரு நாற்காலியை தரதரவென்று இழுத்துப் போட்டு அமர்ந்து கால் மேல் கால் போட்டு தோரணையோடு சுற்றிலும் நோக்கினார்.

வகுளாபரணனைத் தன் அருகே,  சென்னபைராதேவி ஆசனத்துக்குக் கிட்டத்தட்ட சமமாக உட்காரச் சொன்னார். வகுளன் விதிர்விதிர்த்து எழுந்து நிற்கவும் வணங்கவும் எடுத்த முயற்சிகளை  சென்னபைராதேவி ஓர் இகழ்ச்சிச் சிரிப்போடு புறக்கணித்து தலையைத் திருப்பிக்கொண்டாள்.

நான் பேசும்போது யார் குறுக்கிட்டாலும் கைது செய்து சிறையில் அடைக்கும்படி விஜயநகர உத்தரவை முதலில் சொல்கிறேன்.

மிரட்டும் தணிந்த குரலில் அறிவித்து விட்டு வெங்கடப்ப நாயக்கர் பேசத் தொடங்கினார்.

இந்த அரசவை, அதாவது மாஜி அரசவையில் நான் சில அறிவிப்புகளை செய்ய வேண்டியுள்ளது. கெருஸொப்பா மாநிலத்தின் தொடர்ந்த பொருளாதார, சமூக, கலாச்சார முன்னேற்றத்தை உத்தேசித்து விஜயநகரப்  பேரரசின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட முடிவுகளை உத்தர கன்னடப் பிரதேசத்தின் அக்கறையுள்ள பூமிவாசியும் கெலடி மாநில அரசனுமான நான் அறிவிக்கிறேன்.

மிளகுராணி  சென்னபைராதேவி இப்போது முதல் கெருஸொப்பாவின் அரசி பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். ஐம்பத்துநான்கு வருடம் ஒரே அரசர் நடத்தும் அரசாட்சி என்பது உலகிலேயே எந்த தேசத்திலும் நடக்காத ஒரு அதிசயம். அதுவும் ஒரு பெண் ஐம்பத்து நான்கு வருடம் சாதனையாக ஆட்சி செய்து, உலகமே திரும்பிப் பார்த்து மிளகுராணி என்று கொண்டாடப்படுவது நம் எல்லோருக்கும்  பெருமை தருவதாகும்.

என்றாலும் முதுமையும் நீண்ட அரசாட்சியின் களைப்பும் அவரை வெகுவாகப் பாதித்திருக்கின்றதைப் பார்க்க முடிகிறது. கடந்த ஒரே ஆண்டில் கெருஸொப்பாவின் நிதி நிலை சீரழிந்து எது முக்கியம் எது இல்லை என்று தீர்மானிக்காமல் கண்டமேனிக்கு பொருளாதாரம் நாசமடைந்திருக்கிறது.

மகாராணியின் வளர்ப்புப் புத்திரர் நேமிநாதர் இதைச் சுட்டிக் காட்டி ராணியால் வெளியேற்றப்பட்டார். அவரும் எங்களோடு இந்த தினம் இங்கே வந்து அரசராக முடிசூட்டப் பட்டிருக்க வேண்டும்.

கூடாநட்பு அதுவும் ஒரு பெண்ணோடு வைத்து அரச நிதியைத் தங்கப் பாளமாக மாற்றி வெளியே கொண்டு போவதில் உத்வேகத்தோடு செயல்பட்டு, தட்டிக் கேட்ட எங்களை மூர்க்கமாகத் தாக்க முனைந்து, உயிரும் இழந்தது துரதிருஷ்டமானது.

அது நிற்க. சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும்.

சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2022 05:22
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.