பெரு நாவல் ‘மிளகு’ – And quite flows the Sharawathi

An excerpt from my forthcoming novel MILAGU

ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள்.

பெத்ரோ ஒரு சிரிப்போடு கேட்டார் –

அது அரசாங்க விஷயமாகவே இருக்கட்டும் என் கண்ணின் கண்ணே. உனக்கு என்னை பிடித்து வந்தாயா அரசாங்க கட்டாயத்தின் பேரில் என்னோடு ஒட்டிக் கொண்டு பழகினாயா என் இதயமே?

கஸாண்ட்ரா அவர் தோள்களில் மாலையாகத் தன் வளையணிந்த வனப்பான கரங்களை இட்டு வளைத்தாள். அவள் உதடு துடித்தது. கண்ணில் நீர் திரண்டது.

நான் அடுத்த பிறவி என்றிருந்தால் உம்மோடு உயிர் வாழ்வேன். இப்போது என் அன்பு சிநேகிதி மிங்குவின் குடும்பத்தோடு மிர்ஜானின் வசிக்கப் போகிறேன்.

அதிர்ஷ்டக்கார மூலிகை மனுஷன் என்று மட்டும் சொல்லி பெத்ரோ எழுவதற்கும் வெளியே போயிருந்த மரியாவும் குழந்தைகளும் திரும்ப வந்து சேரவும் சரியாக இருந்தது.

அந்த உறவாடல் உயிர் இருக்கும்வரை பெத்ரோவுக்கு  உடலில் ஒவ்வொரு திசுவிலும் நினைவாகத் தங்கி இருக்கப் போகிறது. கஸாண்ட்ராவோடு அவருக்கு ஏற்பட்ட இந்த சிநேகிதமும் எப்போதும் நினைவு வந்து வதைக்கப் போகிறது அவரை.

கி ஃக்யுண்டா ஃபெய்ரா (que quinta-feira)- என்ன அற்புதமான வியாழக்கிழமை என்று முணுமுணுத்தபடி படுக்கை அறையில் நுழைந்தார் பெத்ரோ. அயர்வு அசாத்தியமாக அழுத்த உறங்கிவிட்டார் அவர்.

அவர் எழுந்தபோது மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்று அவருடைய இடுப்பு வாரில் தொங்கிய கடியாரம் அறிவித்தது. பசியும் தாகமும் இல்லை அவருக்கு. மரியா கட்டாயப்படுத்தி ரொட்டித் துண்டுகளை அனலில் வாட்டி வெண்ணெய் தடவிக் கொடுத்தாள்.

அதில் பாதியை உண்ட பெத்ரோ, மிர்ஜான் போய் வரேன் என்று பொதுவாக சொல்லிக்கொண்டு கோச் வண்டியில் தாவி அமர்ந்தார். அவரே செலுத்த வேகமாக நகர்ந்தது கோச் வண்டி.

பழகிய பாதை என்பதாலோ என்னமோ அவர் திரும்புவதற்காக லகானை வலிக்கும் முன் குதிரைகளே தன்போக்கில் திரும்பி, மேடு பள்ளம் பார்த்து ஓடி மிர்ஜான் கோட்டை வளாகத்துக்குள் வரும்போது ஆச்சரியமாக அவர் கவனித்தது இது –

முற்றுகை இடப்படும் கோட்டை என்ற எந்த அடையாளமும் இன்றி கோட்டை ஆளரவமற்ற வெட்டவெளியில் நின்றிருந்தது. வெட்டவெளிக்குக் கிழக்கே ஒழுங்கின்றி எழுந்திருந்த கூடாரங்களில் ஆளரவம் காணப்பட்டது.

இன்றைக்கு படைநடத்தல் இல்லையோ? அல்லது ஞாயிறன்று யுத்த விடுமுறையோ? அதுவும் இல்லையென்றால், மாலை ஆறு மணிக்குப் போர் நின்று மறுநாள் தொடருமா? பெத்ரோவுக்குப் புரியவில்லை.

காதலிலும் யுத்தத்திலும் எதுவும் சரியானது தானே. தொடர்க என்றால் மேலே தொடரலாம். நிற்கலாம் என்றால் நிற்கலாம். யுத்தம் தற்காலிகமாக ஓய்ந்த யுத்த பூமி காண என்ன ஆச்சரியம்?

கோட்டையின் சுரங்கப் பாதையின் தோட்டத்து வழி நுழைவாசலில் பரபரப்பு தட்டுப்பட்டது. மிக அதிகமாகக் காயம் அடைந்த ஒரு வீரனை உருளை பொருத்திய பலகைப் படுக்கையில் வைத்து இரண்டு பேர் தள்ளிக்கொண்டு போக தலையில் அடிபட்ட ஒரு வீரனின் காயத்திலிருந்து  கொட்டிய வண்ணம் இருந்த குருதியைத் தடுக்க இயலாமல் ஒரு மருத்துவ உதவியாளன் அந்த வீரனைத் தொடையில் தாங்கி இறுதி மூச்சை விடுவதை இயலாமையோடும், தவிப்போடும், துக்கத்தோடும், பாசத்தோடும், பரிவோடும், அன்போடும், இரக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓம் நமசிவாய.

பெத்ரோ கடந்து போகும்போது பின்னால் அந்த உயிர் கைலாச யாத்திரைக்குப் புறப்பட்டதைத் தெரிவிக்கும் குரலாக மருத்துவ உதவியாளன் குரல் எழுந்து அழுகையில் கரைந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 19:56
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.