பெரு நாவல் ‘மிளகு’ – The battle goes on with no détente in sight

An excerpt from my forthcoming novel MiLAGU

முதல் நாள் யுத்தம் கோட்டை முற்றுகையாக ஆரம்பித்து நாள் முடிந்தபோது அரசு தரப்பில் ஏழு பேருக்கும் எதிரணியில் பதினேழு பேருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாக ஒற்றர் படை மகாராணிக்குத் தகவல் அறிவித்தது. உயிரிழப்பு இரு தரப்பிலும் இல்லை என்றும் இரு தரப்பிலும் அறிவிப்பு பதிவிட்டிருந்தது.

ராத்திரி கோட்டை அரசாங்க மாளிகை மண்டபத்தில் சென்னபைரதேவி தலைமையில் பிரதானிகளும் தளவாய், ஒற்றர் படைத் தலைவர் ஆகியோரும் கூடி அன்றைய யுத்த நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

படை அனுப்ப, கொஞ்சம் அதிக ஊழியக் காசுக்கு அனுப்பி வைக்க போர்த்துகல் அரசு ஒத்துக்கொண்ட சந்தோஷ சமாசாரத்தை அரச தலைமைப் பிரதிநிதி பெத்ரோ பிரபு அறிவித்துப் போன சந்தோஷ சமாசாரம் பகிரப்பட்டது.

அடுத்து வரும் நாட்களில் கைகொள்ள வேண்டிய ராஜதந்திரமாக போர்த்துகல் படைகள் தாமதமானாலும் ஜெருஸுப்பா ஊர்க்காவல், ஹொன்னாவர், பட்கல் ஊர்க்காவல் படையினர் ஊருக்கு ஐம்பது பேர் ஆயத்த நிலையில் வைக்கப் பட்டனர்.

வெற்றி முகமாக அரசுப் படை விளங்குவதை சென்னா அறிவித்தபோது நீண்ட கரகோஷம் நிலைத்தது.

போர்த்துகல் படைகள் வருவதை துரிதப்படுத்த அவர்களின் ஒரு பகுதியை கோவாவில் இருக்கும் போர்த்துகல் காவல்படையில் இருந்தும். டையூவில் இருந்தும், டாமனில் இருந்தும் உடனடியாக ஷராவதி நதியில் பயணம் செய்வித்து அனுப்பவும், அவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் தரப்படும் என்றும்   வேண்டும் கடிதத்தை உடனே பெத்ரோ பிரபு மூலம் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெத்ரோ இதற்கான உத்தரவை கோவா பிரதிநிதி ப்ரகான்ஸாவுக்கு அனுப்பி உடன்பட வைத்ததாகப் பகிரப்பட்டது.

பெத்ரோ பிரபுவும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பெற்றால் அது போர்த்துகல் என்ற  நேச அரசின் நடவடிக்கை என வரவேற்கத் தக்கதாகும் என்று கூட்டம் அபிப்பிராயம் தெரிவித்தது.

அப்பக்கா மகாராணி படை உதவி அனுப்ப இயலாததற்கு வருத்தம் தெரிவித்து லிகிதம் எழுதியது படிக்கப்பட்டது. இன்னொரு முறை தனிப்பட்ட அன்பும் தோழமையும் அடிப்படையாகக் கொண்டு கடிதம் எழுதுவதாக சென்னா வாக்களித்தபோது அப்பக்கா கேலடி, பில்கி அரசர்களுக்கு பயந்து படை அனுப்பவில்லை என்று புரிந்தது.

நேமிநாதனும், வகுளாபரணனும் நடத்திய ஆய்வுக் கூட்டம் பாதுகாப்பு கருதி ஹொன்னாவருக்கு வெளியே மாநில எல்லைக்கு அப்பால் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட கூடாரங்களால் அமைந்த போர் அலுவலகத்தில் ராத்திரி நேரத்தில் தீவட்டிகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஒளியில் நடைபெற்றது.

படையினருக்கு பயிற்சியும் அனுபவமும் இல்லாவிட்டாலும், உத்வேகமும் உற்சாகமும் இருப்பதால் வெற்றி முகம் தட்டுப்படுகிறது என்று நேமிநாதன் அறிவிக்க நீண்டு ஒலித்த கரகோஷத்தைத் தொடர்ந்து மிளகு அரசர் நேமிநாதர் வாழ்க, ஜெயவிஜயீபவ கோஷங்களை ரோகிணி ஓங்கிச் சொல்லி கூடியிருந்தவர்களை ஒருசேர முழங்க வைத்தாள்.

படையினருக்கு உணவு, முதல் நிலை மருத்துவ உதவி இவற்றை அவள் தான் ஒருங்கிணைத்து வருகிறாள். நிதியை வகுளாபரணனோடு சேர்ந்து நிர்வகித்து தளவாடங்கள் வாங்க, பழுதுபார்த்து உடனே திரும்பப் பெற என்று பல சிறுசிறு பணிகளை செய்வதில் நேமிநாதனுக்கு உதவியாக அவள் இருப்பாள் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் நாளும் கோட்டை முற்றுகை தொடர்ந்தது.

pic a medieval war scene

ack worldhistory.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2021 06:41
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.