பெரு நாவல் ‘மிளகு’ – on Rauvolfia tetraphylla (Devil Pepper)

An excerpt from my forthcoming novel MILAGU

ஒரு நிலத்தில் அல்லது வீட்டு முகப்பில் காலை ஆறு மணிக்கு ஒரு சிறு துணுக்கு, வேர் இருந்தால் சரிதான், இல்லையென்றாலும் சரிதான், அங்கே போட்டுவிட்டுப் போனால் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டு முகப்பை அடைத்துக்கொண்டு பேய் மிளகு வளர்ந்து உள்ளே போக ஆரம்பித்திருக்குமாம்.

மனுஷர்களை காலைக் கட்டி இறுக்குவது மூலம் கொல்லக் கூடிய பேய் மிளகை குழந்தைகள் தொட்டால் விரலை இறுக்கி இற்று விழ வைத்து விடும்.

அவ்வளவு பயங்கரமான இந்தப் பேய் மிளகுக்கொடியை விருதுபட்டி சனியனை விலைகொடுத்து வாங்கிவந்த மாதிரி தேசமே அங்கே இங்கே என்று எங்கும் பரவ விட்டுக்கொண்டு கிடக்கிறது. ஒரு விதத்தில் பேய் மிளகு நல்ல விஷயம் தான். வீட்டை எல்லாம் இடித்து வைத்து விட்டு நகர் நீங்கும்போது இடிபாடுகள் மேல் பேய் மிளகை இட்டுப் போனால், நாளைக்கு ஜெயித்து வரும் படை உள்ளே நுழைய யோசிக்கும் என்பதை தொண்டு   கிழவிகள்  கூடச்   சொல்வார்கள்.

பேய் மிளகு ஆட்கொல்லியாக மாறினாலும் அது காவல் இருக்கப் போகும் சிதிலமான கட்டிடங்களில் தரைக்குக் கீழே கூடுதல் பாதுகாப்போடு புதையல் இருக்கும். முழு விவரம் தெரிந்தவர் வெல்லுவர். என்னைப் போல.

யார் வெற்றி பெறுவர்? சென்னாவுக்கு போர்த்துகல் ஆதரவு கிடைக்கலாம். அப்பக்காவின் உள்ளால் அரசு ஆதரவு தரலாம். நேமிக்கு கூட பில்ஜி படையும். கெலாடி அரசுப் படையும் நிற்கும். கெலாடி படையிடம் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் உண்டு.

ஜெருஸோப்பாவின் மிளகு வளத்தைப் பார்த்து நேமி வென்றாலும் தோற்றாலும் பில்ஜியும் கெலாடியும் இங்கே அரசுரிமையைப் பறித்துக் கொள்ள முனையலாம். ஜெயித்தாலும் தோற்கும் வினோத நிலைமை அது.

ஆக மாற்றுத் திட்டத்தை யுத்தம் வந்து அன்றைய தினமே நடப்பாக்க பெரிய சாரட்டை தயார் நிலையில் வைத்து மாலை மங்கிய பிறகு தங்கத்தை வண்டிக்கு ஒரு பகுதியாக ஏற்றி உடுப்பி, தமிழ் பூமி போய்விட வேண்டும். போன பௌர்ணமிக்கு பெரிய சாரட் செய்து வாங்கியது இதை உத்தேசித்துத்தான்.

எப்படியும் யுத்தம் வர படைகள் நடந்து வந்து முற்றுகை இட ஏற்பாடு செய்து இரண்டு நாளாவது ஆகலாம். அதற்குள் சாரட், சாரதிகள், எடுத்துப் போக தங்கம் என்று தயார் செய்து விடலாம். புதைத்து வைக்கவும் கொத்தரை அழைத்து தயாராக இருக்கச் சொல்லலாம்.

ஹொன்னாவரிலும், ஜெருஸோப்பாவிலும் கடை சிப்பந்திகளுக்கு ஓர் ஆண்டு சம்பளமும் கொஞ்சம் வெள்ளியும் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இரண்டு நாளில் அதை எப்போது தரலாம் என்று முடிவு செய்துவிடலாம்.

மஞ்சுநாதனை என்ன பண்ணுவது? என் குழந்தை தான். ஆனால் என் பிரம்மாண்டமான திட்டத்தை நிறைவேற்றுவதில் இடையூறாவானோ.  அவனை இங்கே கொஞ்சம் உணவும், பணமுமாக  உறங்க வைத்து தப்பி விடலாம் என்று கார்டெல் யோசனை சொன்னது. மனது கேட்க மாட்டேன் என்கிறது. கிறுக்கன் பரமன் இருந்தால் அவனிடம் குழந்தையை ஒப்படைத்து விடலாம். பரமனை இனிமேல் கொலை செய்து என்ன சாதிக்கப் போகிறேன்?

மஞ்சுநாத்தை என்னோடு கூட்டிப் போனால் என்ன சிக்கல்? எப்படியும் கூடிய சீக்கிரம் சொத்தை மாற்றி எடுத்த தங்கத்தோடு லிஸ்பன் போக வேண்டியது தான். மால்பெ துறைமுகத்தில் இருந்து புறப்படுவது சரியாக இருக்கும். அங்கிருந்து கோவா பஞ்சிம். அங்கிருந்து லிஸ்பன் போகும் பயணிக்கப்பல். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்து, கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு. கடல் நாரைகளின் வினோத சத்தம் பழகிப் போய் போலி செய்து லிஸ்பன் போனதும் எதாவது செய்து மஞ்சுவுக்குக் குடியுரிமை வாங்க வேண்டும்.

பதினைந்து வருடம் கழித்து அவன் லிஸ்பன்னில் சிறந்த வர்த்தகனாக இருக்கும்போது அதற்காக நான் செய்யத் தயாராக இருக்கிற கீழ்மைச் செயலை யாரும் அவனிடம் சொல்லவோ நினைவுபடுத்தவோ போவதில்லை. நான் சீக்கு பிடித்து கிடந்தாலும், இருப்பேன்.

ஆமாம், இவ்வளவு நாள் உறுதுணையாக இருந்து யுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டு நாடு நீங்கிப் போனால் என்ன நினைப்பான் நேமி? என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அதைச் சொல்ல அவன் உயிரோடு இருப்பானா?

பரமன் என்ன செய்வான்? கடையும் இல்லை. சமணக்கோவில் பிரசாதமும் யுத்தகாலத்தில் கிடைக்காது. எப்படியாவது சமாளித்து விடுவான். இத்தனை வருஷம் இருந்தவனுக்கு வாழ்க்கை ஒரு நேர்செய்யப்பட்ட நாட்டிய நிகழ்ச்சிதானே.  அவனுக்கும் ஓராண்டு சம்பளமும் கொஞ்சம் பொன்னும் கொடுத்து தீர்க்கலாமா? காசுக்கு வாங்கிய கணவனாகட்டும் கிழவன். அல்லது அவன் நாக்பூருக்கும் தில்லிக்கும் அப்புறம் எங்கே ஆமாம், பம்பாய்க்கும் திரும்ப போய்விட்டிருப்பான். ஜயவிஜயிபவ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2021 19:08
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.