பெரு நாவல் ‘மிளகு – To feed a child gooey rice with milk and sugar

An excerpt from my forthcoming novel MILAGU

அரிசி வைத்த செப்புக்குடத்தில் இருந்து அரை ஆழாக்கு அரிசி எடுத்து சோறு பொங்க அடுப்பில் ஏற்றினார் வைத்தியர்.

நான் சொன்னா நீங்க எங்கே கேக்கப் போறீங்க என்று அலுத்தபடி வெற்றிலை இடிக்கத் தொடங்கினாள் அந்த முதிய மருத்துவச்சி.

வைத்தியர் அவளுக்கு மிங்கு மேலும் குழந்தை மேலும் வைத்திருக்கும் அலாதி பிரியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க நெகிழ்ந்து போனார் அவர். ஒரு வேளை மட்டும் நாலு கவளம் சோறும்  புளிக்குழம்பும் உண்டபடி மற்ற நேரம் வெற்றிலை பாக்கு மட்டும் தாம்பூலமாக சுவைக்கிற கிழவி அவள்.

சோறு பொங்கி முடிக்கும் வரை அதிலேயே கவனமாக இருக்க வேணும் என்று முடிவு செய்து கொண்டது நல்லதாகப் போயிற்று. இரக்கம், சினம், சந்தோஷம், துக்கம், அருவறுப்பு என்று பாளம் பாளமாக மனதில் கவிந்துகொண்டிருந்த உணர்ச்சிகளை அகற்றி நிறுத்தி மனதை அடுப்பிலேற்றிய சிறு பானையில் வைக்க எளிதாக இருந்தது. பொங்கி முடித்து ஆற வைத்து காய்ச்சிய பாலையும், சர்க்கரையையும் இட்டுப் பிசைந்து குழந்தையிடம் எடுத்துப் போனார் அவர்.

கோணேஷன் முகத்தைத் திருப்பிக்கொண்டு மருத்துவச்சியைப் பார்த்து அடுத்த அழுகையை ஆரம்பித்தான்.

இந்த அப்பா என்னத்தையோ கொண்டு வந்து கரண்டியால் வாயில் அடைத்து தின்னு தின்னு என்று நச்சரிக்கிறார், வந்து காப்பாத்து அப்பத்தாளே என்று அந்த அழுகைக்குப் பொருள் கொண்டார் வைத்தியர்.

பால்சோறுடா ஒரு கவளம் சாப்பிட்டா ஆயுசுக்கும் விடமாட்டே என்று நைச்சியமாகச் சொல்லும்போதே அவருடைய வார்த்தையின் நிஜம் அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது.

ஆயூசுபூரா பால்சாதம் யார் சாப்பிடுவார்கள்? கோணேஷனிடம் மாற்றிச் சொல்ல நினைத்தபோது அவனே சின்னக் கரண்டியில் அள்ளி வைத்தியர் வைத்திருந்த பால்சோற்றை வாய்கொள்ளாமல் அடைத்துக்கொண்டான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த வெள்ளிப் பாத்திரத்தில் கொண்டு வந்த பால்சோறு முழுவதையும் மிச்சம் மீதி வைக்காமல் அவன் ஆகாரம் பண்ணுவதை வைத்தியர் புளகாங்கிதமடைந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

வைத்தியர் அரிந்தம் பண்டொரு காலத்தில் தன் பிள்ளை வைத்தியர் பைத்யநாத் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட வைத்தியர் பைத்யநாத் தன் மகன் ஒரு வயது கோணேஷன் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். தந்தை சொல் கேட்டுப்  புரிந்து கொண்டு நடக்க மிகச் சிறுவயதிலேயே அவன் முற்பட்டதை பைத்யா மெச்சினார்.

அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்காமல் அடுத்த பிறந்தநாளிலிருந்து கோணேஷன் சோறு பொங்கி பால் ஊற்றிக் கலந்து சர்க்கரை தூவி உண்பான் என்ற நிம்மதியே அலாதியானது. மிங்கு இல்லாத உலகம் அப்படித்தான் பழக்கப்படும்     போல.

அதற்காக மூணு வேளையும் பால்சாதம் சாப்பிட்டுக்கொண்டு ஒரு சிறுவன் இருக்கமுடியுமா?

வேறு என்ன பழக்கப்படுத்தலாம்? இட்டலிகள், தோசைகள் இத்யாதி. இவற்றை பாகம் பண்ண முன்கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகள், வேகவைத்து இட்டலிகளைச் சாப்பிடத் தருவதும், சூடான தோசைக்கல்லில் வார்த்து எடுத்து தோசைகளை உண்ணக் கொடுப்பதும் வைத்தியருக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒருநாள் போல் வருடம் முழுக்க பலகாரம் செய்வது மடுத்துப் போகாதா? வீட்டில் மிங்கு இல்லாத துன்பம் இதெல்லாம் கூடவே வருவது.

அவளை எப்படி விட்டுவிட்டு மீதி ஜீவிதத்தை நடத்தப் போகிறேன் என்று வைத்தியருக்கு சுய இரக்கம் மறுபடி ஏற்பட இன்னொரு குழந்தையாக கண்ணீர் விட்டு அழுதார்.

வைத்தியருக்கு மறுபடி மிளகு மகாராணி பேரில் கோபம் அடக்க முடியாமல் ஏற்பட்டது. அம்மா. இனியொரு முறையும் மிளகுப் பைசாசத்தை அந்த பெண் சூனியக்காரியை அம்மா என்று அழைக்க மாட்டார் வைத்தியர்.

ஒரு வைத்தியனாக மகாராணியின் உடல்நலம் பற்றிய அதிக அக்கறை அவருக்குத்தான் இருந்தது. ஒரு ரோகியாக ராணியம்மா வைத்தியர் சொன்னதைக் கேட்டு நடக்காவிட்டாலும்.

பனிக்குழைவு, புளியன்னம், தித்திப்புப் பலகாரங்கள் என்று  கண்டதையும் தின்று   ருசி இன்பத்தில் திளைக்கும் சீக்கு பிடித்த மகாராணி.  நாட்டின் முதல் பிரஜையான மகாராணிக்கே நாவை அடக்க முடியாமல்   தின்று ரோகம் பிடிப்பது அவளுக்கு நல்லதா இல்லை நாட்டுக்கா?

இதிலே லிஸ்பன் போகணும், வாராணசி போகணும், தில்லி போகணும் என்று ஊர் சுற்றுகிற ஆசை வேறே. மருந்துப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லொங்குலொங்கென்று ஓடி ராணி போகிற இடத்தில் அவளுக்கு முன்னால் அவள் நேரப்பிரகாரம் சாப்பிட வேண்டிய குளிகை, பானம் பண்ண வேண்டிய கஷாயம், நாக்கில் இட்டு சுவைத்து உண்ணவேண்டிய லேகியம், காலில் புரட்டிக்கொள்ள வேண்டிய தைலம் என்று பார்த்துப் பார்த்து எடுத்துப் போய் சிஷ்ருசை செய்ததற்கு மிளகுக்கிழவி கொடுத்த பரிசு, வைத்தியனின் ஆருயிர் மனைவி மிங்குவை உயிர் போக வைத்து ஏதுமே நடக்காத மாதிரி பஸதி திறக்க ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பது.

Pic medieval children

Ack medievalchronicles.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2021 07:05
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.