பெரு நாவல் ‘மிளகு’ – In which Chenna Devi’s maid Mingu is stabbed while she saves the Queen

An excerpt from my forthcoming novel MILAGU

போஜனசாலையில் அவர்கள் குழுமியிருந்தார்கள்.

முன்னூறு பேர் இருந்து ஆகாரம் பண்ணும் அந்தப் பெரிய மண்டபத்தில் இவர்கள் முப்பது பேர் மட்டும் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே இரண்டடி இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக   இவர்கள் யாரோ வரக் காத்திருந்தார்கள்.

கோட்டை மடைப்பள்ளி ஊழியர்கள் இருவர் பெரிய குவளைகளில் மாம்பழச் சாறை  ஒவ்வொரு விருந்தாளி முன்னும் வைத்துப் போக, இரண்டு பக்க வரிசையிலும் கோடியில் இருந்த குவளைகளுக்கு முன் யாரும் இல்லை.

போஜனசாலை கதவுகள் திறக்க காசிரை என்ற கஸாண்ட்ரா ஒரு பக்கமும், மிங்கு என்ற செண்பகலட்சுமி இன்னொரு பக்கமும் தாங்கி நடத்தி வர சென்னபைரதேவி மிளகு ராணி மெல்ல அடியெடுத்து வைத்து இருகை கூப்பி வணங்கியபடி மண்டபத்துக்குள் பிரவேசித்தாள்.

அங்கே இருந்த முப்பது பேரும் ஒருசேர எழுந்து மகாராணியை வணங்கினார்கள். அத்தனையும் பெண்கள். பதினான்கு வயதில் இருந்து அறுபது வரையான பெண்கள். மிளகு மகாராணி சென்னபைரதேவியின் அழைப்பின் பேரில் இன்று மிர்ஜான் கோட்டையில் மகாராணியோடு சேர்ந்திருந்து காலை உணவு உண்டுபோக அழைக்கப்பட்டவர்கள். ஜெருஸோப்பா, ஹொன்னாவர், கோகர்ணம் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்கள்.

“அரசியலில் பங்கு பெறத்தான் நம் பெண்களுக்கு அனுமதி இல்லை. புரிந்து கொள்ளவாவது செய்யட்டுமே? அவர்களுக்கு தற்போதைய அரசியல் நிகழ்வுகள் பற்றிச் சரியான பார்வையைக் கொடுத்தால் அவர்கள் வீடு போய் அவர்களின் கணவன், தந்தை, மாமன், சகோதரன் என்று சகலரிடமும் நன்மை விதைத்து வருவார்கள்.” சென்னபைரதேவி சொன்னபோது  பிரதானிகள் அனைரும் வியப்போடு பார்த்தார்கள். உடனே  நடக்கட்டுமென்றாள் ராணி.

இத்தனை பேரை மிர்ஜான் கோட்டைக்குள் அனுமதித்தால் அரசியாரின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தாதா அது என்று அடுத்த கேள்வி. என் பாதுகாப்பு தானே, நான் கவனித்துக் கொள்கிறேன் என்றாள் பிடிவாதமாக.

மகாராணியவர்களின் யோசனைப்படி ஜனத்தொகை பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து, அழைப்பு அனுப்பி, வரப் போக வாகனம் ஏற்பாடு செய்து, விருந்தை ஏற்பாடு செய்து அனைத்தையும் ஒருங்கிணைத்தவர்கள் தோழிகளான மிங்குவும், காசிரை என்ற கஸாண்ட்ராவும்.

காசிரை மகாராணியை வணங்கி, ”அம்மா, நீங்க தீன்மேசை, நாற்காலி போட்டு  இருக்கலாமே. உடல்நலம் அனுமதிக்குமா சம்மணம் கொட்டி உட்கார்ந்திருப்பதை” என்று கேட்டாள்.

”நானே சமணத்தி தான். சமணத்தைத் தனியாகக் கொட்டணுமா? என்ன காசிரை?”. மகாராணி காசிரையை நோக்கிப் புன்சிரித்துச் சொன்னாள்.

அவளையும்  மிங்குவையும் மகாராணியையும் தவிர மற்றவர்களுக்கு காசிரை எப்படி அரண்மனை விருந்தில் இப்படி அரசியாரின் சிறப்பு கவனிப்போடும் சகஜமான பிரியத்தோடும் புழங்கி வருகிறாள் என்று தெரியவில்லைதான். தெரிந்து என்ன ஆகவேண்டியிருக்கிறது யாருக்கும்?

ராணி அவர்களிடம் சொன்னாள் –

”தரையில் அமர்ந்து வெகுநாள் ஆகிவிட்டது. தரையில் படுத்து உறங்கியும் வருடங்கள் பலவுமானது. கோட்டை மண்ணிலும், ஆற்றங்கரை மணலிலும், கல் பாளத்திலும், நிற்கவும், கிடக்கவும், நடக்கவும் நம்மை பூமி ஈர்க்கும். பூமித்தாயம்மாள் அன்னையின் வாஞ்சையோடு இழுத்துப் பிடித்து அணைத்துக் கொள்ளும் விசையாக புவி ஈர்ப்பு விசையை  எப்போதும் நம்மேல் பிரயோகிப்பாள். நாம்தான் அதைப் புரிந்து கொள்வதில்லை”.

மிங்கு மேல் மகாராணியின் பார்வை விழுந்தது.

”அடி மிங்கூ, நீ இன்னும் உட்காரவில்லை என்றால் என் தலையணையையும், உட்காரும் மனைப் பலகையையும் ஓடிப் போய் எடுத்து வாடி. ஓடு பெண்ணே”.

மிங்கூ மெய்யாலுமே ஓட, அத்தனை பெண்களும் சிரித்துக் கரம்கொட்டினார்கள். அவள் திரும்பி வரும்போது அந்த இடம் வழக்கமான பெண்கள் கூட்டமாக,  ஒரே நேரத்தில் பல பேச்சுகள் சேர்ந்து ஒலிக்க, சிரிப்பு தொடர்ந்து முழங்க ஜீவனோடு இயங்க ஆரம்பித்தது.

ராணியம்மாள் உட்கார மனையைப் போட்டுச் சுவரோடு தலையணையை சார்த்தி வைத்த மிங்குவிடம் ஜோசியர் பெண்டாட்டி விசாலம் கேட்டாள் – ”ராணியம்மா கிட்டே பேசணும்னு ரொம்ப ஆசை மிங்கு. பேசலாமா?”

”அதுக்குத்தானே கூப்பிட்டனுப்பி இருக்கு?” என்றாள் மிங்கு  ராணியம்மாளையும் விசாலத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி.

”மகாராணியம்மா, உங்களை எப்படி தகுந்த மரியாதையோடு அழைக்கணும்னு தெரியலே. தெரிஞ்சுக்க யாரும் என்னை கல்யாணம் ஆகி இந்த இருபது வருஷத்துலே வெளியே எங்கேயும் அனுப்பலே”.

”ஒண்ணும் கஷ்டமில்லே. சென்னாமாமின்னு கூப்பிடு” என்றாள் சென்னபைரதேவி சிரித்தபடி.

“அது ரொம்ப போக்டாத்தனமா இருக்கும்”

pic 17th Century Indian man

ack britanica.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2021 04:20
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.