பெருநாவல் ‘மிளகு’ – There certainly is going to be a war. We don’t know who will fight whom

An excerpt from MILAGU

இதெல்லாம் சென்னாவா செய்ய மாட்டா அண்ணா. அவ ரொம்ப நல்லவ. சாது வேறே. அந்த அப்பக்காவோ, கிறுக்கு வேஷம் போடற அவாத்துக்காரன் வீரநரசிம்மனோ அவ மனசைக் கெடுக்கறாளாம்.

பெத்ரோ துரை இருக்காரே, போர்த்துகல் ராஜ பிரதிநிதி அவருக்கு மிர்ஜான் கோட்டையிலே இருக்கப்பட்ட செல்வாக்கு, விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயக் கிழடுக்குக் கூட அங்கே இல்லையாம். யார் கண்டா இவா வேறே என்ன மாதிரி ஒருத்தொருக்கொருத்தர் பட்சமா இருக்காளோ. வயசானா சிலபேருக்கு விபரீத ஆசை எல்லாம் திரும்ப வந்துடுமாம்.

அதெல்லாம் சரி, இந்த ராஜகுமாரன் நேமிநாதன். அவன் அலாதி குசும்பனாமே. அந்த மிட்டாய்கார தேவிடியாளோட சேர்ந்து ஊரைக் கொள்ளை அடிக்கத்தான் தீர்மானம் பண்ணி இறங்கியிருக்கானாம்.

இல்லேப்பா  இந்த ஊழல் சாம்ராஜ்யத்திலே ஸ்வயம் யோஜனையோடு தேசம் ஷேமமா இருக்க நான் சுமைதலை எடுத்துக்கறேன்னு   சின்ன வயசுலே ஒருத்தன் தைரியமா முன்னாலே வந்தா, அவனுக்கு நம்ம ஆதரவை கண்ணை மூடிண்டு கொடுக்கலாம்.   இப்ப இருக்கறதைவிட எதுவும் மோசமாகப் போகப்போறது இல்லே, என்ன சொல்றேள்?

ஆயிரத்துலே ஒரு வார்த்தை, ஆனா, அந்த மிட்டாய்க்கடைக்காரி?

அவளுக்கென்ன? லட்டுருண்டை மாதிரி நன்னாத்தான் இருக்கா

பார்த்துண்டே இரும் இன்னும் ரெண்டு மாசத்திலே ஒண்ணு இவன் அவளை துணியைக் கிழிச்சு தொரத்தி விட்டுடுவான். இல்லியோ அவ இவனை தொரத்தி விட்டுடுவா.

எனக்கு என்னமோ கிழவியை விரட்டறதுதான் நடக்கப் போறதுன்னு தோணறது. நேமி ராஜாவா வரட்டும். கிழவி இத்தனை வருஷம் மிளகு வித்து பசதி கட்டினது போறும். கொஞ்சம் ஓய்வெடுத்துக்கட்டும். தத்துப் பிள்ளைன்னாலும் சத்துப் பிள்ளையாக்கும்.

சரிதான் அண்ணா இதெல்லாம் அதுவாகவே நடந்துடுமா?

அதெப்படி தானா நடக்கும்? கலகம் பிறந்தாத்தான் நியாயம் பிறக்கும்.

கலகம்னா ராமராயரண்ணா, நாமும் ஆயுதம் எடுத்துண்டு யுத்தம் பண்ணனுமா? நமக்கு வேதமும் சம்பிரதாய மந்திரங்களும் தான் சொல்லிக் கொடுத்திருக்கா பெரியவா. இதை வச்சுண்டு வாள் ஓங்க முடியாது.

அது இருக்கட்டும். இங்கே இருக்கப்பட்ட, விஜயநகரத்துக்கு ஐம்பதும் நூறும் கப்பம் கட்டற ராஜ்ஜியங்கள் அதாவது நம்ம ஜெருஸொப்பா, உள்ளால், பனகுடி, கெலடி, பில்ஜி இப்படி சின்னச் சின்னதா இருக்கற ராஜ்யம் ஒவ்வொண்ணுக்கும் மிஞ்சிப் போனால் நூறு பேர் ராணுவம்னு சொல்லிண்டு இருப்பா. அவா யுத்தம்னு மோதறது ஊர் கம்மாய்க்கரை தகராறு மாதிரி இருக்கும்.

நல்ல உதாரணம் சொல்லணும்னா, ஊர்த் திருவிழாவிலே ரெண்டு கட்சி கட்டி மல்யுத்தம், கயறு இழுக்கறதுன்னு மோதி ஜெயிக்கறவாளுக்கு பணம், சேவல், கோழி. அரிசி, கோதுமைன்னு தர்ற மாதிரி நம்ம பிரதேச யுத்தம் அந்தப் பக்கம் இருநூறு பேர் இந்தப் பக்கம் இருநூறு பேர் மோதறதா இருக்கும்.

அதிலே ஜெயிச்சா ஆளற உரிமை ஒண்ணு கையை விட்டுப் போகும், இல்லேன்னா புதுசா வந்து சேரும்.

விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு இங்கே ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒரு வித்தியாசமும் தட்டுப்படப் போறதில்லே. அவாளே கவிழ்ந்து படுத்து ஒரு மாமாங்கம் ஆறது. எழுந்திருக்கற வழியை காணோம்.

ஆக ஒரு யுத்தம், ஒரு நாள், அரை நாள்,  ரெண்டு மணி நேரத்திலே முடிஞ்சு உடமை கை மாறினாலும் சண்டை சண்டைதான். பெரிய யுத்தங்கள் மாதிரி, சுல்தானிய ராஜாங்கங்கள் கூட்டு சேர்ந்து விஜயநகர ராஜதானி மேலே படையெடுத்து வந்து மஹாராஜா அளியராயனை தலைக்கோட்டையிலே சிரச்சேதம் பண்ணி, அவா படையிலே ஆயிரம் பேரையும் கொன்னாளே, அப்படி இந்த உள்ளூர் யுத்தத்திலும் தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆறதாலே யுத்த பூமியிலே தலை நிறைய உருள வாய்ப்பு இருக்கு.

யுத்த பூமின்னு எல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்கோ. வயத்தைக் கலக்கறது

நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடுமா என்ன? யுத்தம்னு சொன்னா அடிச்சுக்கோ குத்திக்கோன்னு ஆரம்பமாயிடுமா என்ன? அப்புறம் இன்னொண்ணு, ரெண்டு தரப்புலேயும் ஆதரவு தர்றதா அண்டை அயலில் இருக்கப்பட்ட மற்ற ராஜ்ஜியங்கள் சேர்ந்துண்டா, யுத்தம் வலுக்க சந்தர்ப்பம் இருக்கு.

எப்படி இருந்தாலும், சண்டைக்கு அரிவாளை தூக்கிண்டு போறவன் மட்டுமில்லே நம்மை மாதிரி ஓரத்துலே நின்னு வேடிக்கை பார்க்கறவனும் கூடத்தான் உயிரைவிட வேண்டி வரலாம். கவனிக்கணும். வரும்னு சொல்லலே. அண்ணா இங்கே யுத்தம் வருமா வராதா?

வரலாம். வராமலும் இருக்கலாம். அம்மாவும் பிள்ளையும் ஆத்துக்குள்லே சண்டை போடற மாதிரித்தான் அடிச்சுப்பா, கூடிப்பா. என்ன ஆகுமோ தெரியலை.

அப்படி சண்டை வந்தா?

சண்டை வந்தா வர்ற மாதிரி சூசனை தட்டுப்பட்டா ஊரைக் காலி பண்ணிட்டு பெனுகொண்டா, மதுரை, மைசூரு, கோழிக்கோடுன்னு ஓடி ரட்சைப்பட பலபேரும் தயாராகிண்டிருக்கா தெரியுமா?

ராமராயர் அத்தனை வெற்றிலையையும் மென்று விட்டு கிள்ளிப் போட்டிருந்த வெற்றிலைக் காம்புகளை அடுத்து எடுத்து செல்லமாகப் பார்த்தபடி வாயில் போட்டுக்கொண்டார்.

அது இல்லே, ராமராயரே. மகாராணிக்கு அடுத்தபடி ஹேஷ்யம், ஆருடம், ஊகம் எல்லாம் அற்புதமா வாய்க்கப்பட்டவர், வியாகரணப்புலி வேறே.

யாரைச் சொல்றீர் என்றபடி குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டார் ராம ராயர்.

உம்மைத்தான் ராமராயரே என்று சிவராம பட்டர் சொல்ல ராமராயர் புளகாங்கிதம் அடைந்தது நிஜம்.

ஜெருஸோப்பா சின்ன ராஜ்ஜியம் தான். ஆனா பாருங்கோ இங்கே ஜெருஸோப்பாவில் ஒரு மாதிரி, ஹொன்னாவர்லே இன்னொரு மாதிரி பொதுஜன அபிப்ராயம் இருக்கறதா தெரியறது. ஹொன்னாவர்லே இங்கே கலவரம் வராதுன்னு சொல்றா. நன்னா சகல விதத்திலேயும் முன்னேறி காசு பணம் ஆட்ட பாட்டம்னு எல்லாம் நிறைஞ்சிருக்கு ஹொன்னாவர். சென்னா சண்டை போடற வர்க்கம் இல்லே.

நீங்க சொல்றேள் அண்ணா, கோழிக்கோட்டிலே சாமுத்ரி நீ வா, குஞ்சாலி மரைக்காயா நீ வான்னு கூட்டத்தை சேர்த்துண்டு சண்டை போட்டுத்தானே ரொம்ப நாளுக்கு ரொம்ப நாள் முந்தி சென்னா போர்த்துகீசுகாரனை அடிச்சு விரட்டினா

அது இல்லேங்காணும் இப்போ நிலைமை. அது சமுத்திரத்திலே கப்பல், பெரிய படகு வச்சு போர்த்துகல்லோடு மோதி ஜெயிச்ச காலம்.

இது தரையிலே வரக்கூடிய யுத்தம். இப்போ போர்த்துகல்லும் ஜெருஸோப்பாவும் நல்ல சிநேகிதத்திலே இருக்கப்பட்டவா. குஞ்சாலி மரைக்காயர் மாப்ளைப்படை சமுத்திரத்திலே ரொம்ப செயலா இருக்கு. கோழிக்கோட்டு சாமரின், சென்னா, அப்பக்கா, மாப்ளையார் எல்லாம் ஒரே பக்கம் தான்.

அப்போ எதிர்த்தரப்பிலே யார் இருக்கப் போறா?

அதுதான் தெளிவா  தெரியலே.

படம் மேசைப் பண்பாடுகள்

நன்றி கார்டியன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 07:12
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.