மிளகு பெருநாவலில் இருந்து – Delving deep into the inner self of Nemi Nathan – a few excerpts

ஒரு மௌனப் புயல்போல் ரோகிணி என் வாழ்க்கையில் பிரவேசித்தாள். யார் அவள்? எந்த ஊர்? பெற்றோர் யார்? உற்றோரும் தோழியரும் யாரார்? எனக்கு இளையவளா, மூத்தவளா?அகவை எத்தனை? எந்தக் கேள்வியும் கேட்காமல் ரோகிணி என்ற வசீகரமான பெண் பைசாசத்தின் பேரழகுக்கு ஆளானேன்.

அது ஆராதிக்கச் சொல்லும் அழகில்லை. போற்றிப் புகழ்ந்து புல்லரித்து அடுத்து நின்று பணிவிடை செய்ய, அடிமைத்தனம் பண்ண ஆசை எழுப்பும் அழகில்லை. நெருக்கி அணைத்து உடலைத் துன்பம் கொள்ள வைத்து கசக்கி முகரச் செய்யும் அழகுமில்லை.

சற்றே பனிச் சிதறலை சந்தனப் பதுமை மேல் சீராக உடல் முழுதும் பூசினாற்போல கனம் கொண்ட ஆகிருதி. கண்ணில் மின்னும் சிரிப்பைக் கொண்டே நலம் விசாரித்து, என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டு, உன்னால் முடியாது என்று புறம் தள்ளி, முடியும் என்று மெய்ப்பிக்கும் வினாடி பிரமாதம் என்று பாராட்டி, அப்புறம் என்ன செய்யப் போகிறாய் என்று அழைத்து, ஓடத் தயாராக இருப்பதாக பொய்ப் பயம் காட்டி, திரும்ப அணைப்பில் வர நாணி, உதடு பிரியாமல், கண் இமை பிரிந்து சிரிக்கும் ரோகிணியை முதலில் சந்தித்ததும் ஒரே வருத்தம் தான். இந்த அழகை இவ்வளவு நாள் எப்படிச் சந்திக்காமல் போனேன்!

அவளே நானும் நானே அவளுமாக சில நாட்கள் பிரிய, ரஞ்சனா சங்கதி தெரிந்து ரோகிணியை நேரே ஹொன்னாவரில் ரோகிணியின் இனிப்பு அங்காடிக்கே போய்க் கண்டித்து விட்டு வந்தாளென்று ரோகிணியும் சொல்லவில்லை, ரஞ்சனாவும் சொல்லவில்லை.

என் தாயார் மிளகு மகாராணியார் என்னைக் கண்டிக்கக் கூப்பிட்டு விட்டு நான் போகாததால், எப்போது நான் மிர்ஜான் கோட்டையில் என் இல்லத்துக்கு வந்தேனோ அப்போது தானே நேரில் வந்துவிட்டார். அவர் வழக்கமான மென்மையான குரலில் நலம் விசாரித்து விட்டு விஷயத்துக்கு வந்து விட்டார்.

நேமி, நீ அரசாங்க குழு கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் வருந்துகிறேன். என்னோடு காலையுணவுக்கு வர மாட்டேன் என்று என்னைத் தவிர்த்தால் துயரமடைகிறேன். ஆனால், ரஞ்சனாவை புறக்கணித்து ஹொன்னாவரிலும் ஜெரஸோப்பாவிலும் மிட்டாய் அங்காடி நடத்தும் விதவையும் பேரிளம்பெண்ணும் பாதி போர்த்துகீச இரத்தமும் மீதி கொங்கணி குருதியும் ஓடும் பெண்ணோடு கண்மண் தெரியாக் காமத்தில் வீழ்ந்துகிடப்பதைக் கேட்டு கோபமடைகிறேன். இதற்காக உன்னை ஒரு அம்மா என்ற தகுதியில், நீ எனக்கு அந்தத் தகுதியை அளித்தாலும் இல்லாவிட்டாலும் நான் உரிமையோடு எடுத்துக்கொண்டு, தவறு செய்யும் மகனை அடித்துக் கேட்கும் தாயாக இருந்தால் என்ன என்று யோசிக்கிறேன். இது உன் அந்தரங்கம். என்றாலும் இதனால் ஜரஸோப்பா நிலப்பரப்பின், மிர்ஜான் கோட்டையின் பாதுகாப்பில் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற நிலை உருவானால், கண்டிப்பான நடவடிக்கை உன் மேல் எடுக்கத் தயங்க மாட்டேன். ரஞ்சனாவுக்கு நீ இழைக்கும் துரோகம் தவறு என்று உன்னிடம் உரிமையோடு சொல்கிறேன். வேண்டாம், கூடா நட்பு மட்டுமில்லை, தவறான காமமும் கெடுதிதான்.

இப்படியும் இன்னும் நிறைய இதே தொனியிலும் பேசினார் மிளகுராணி. நான் புன்சிரிப்பு சிரித்தும் முகத்தை சிரத்தையாகக் கேட்பதாக வைத்தும் ஒரு வார்த்தை பேசவில்லை.

அவர் திரும்பும்போது ஜெய் மகா காளி சென்று வாருங்கள் என்றேன். இந்த விளி புதிதாக உள்ளதே, நீ குருதி பூஜை செய்யும் கூட்டத்தோடு இருக்கிறாயா என்று கேட்டார் சென்னா ராணி. ஏன் உங்கள் ரகசியத் தகவல் சேகரிப்பு துறை இதை உங்களுக்குச் சொல்லியிருப்பார்களே என்று குறும்பாகக் கேட்டேன். நீ குழுவில் உண்டா என்றா இல்லை என்றா? அவர் குரலை சற்றே உயர்த்திச் சொன்னார். நான் புன்னகையே பதிலாக விடைகொடுத்தேன்.

இது போன மாதம் பௌர்ணமியன்று நடந்தது. அன்றைக்கு நான் ஹொன்னாவர் போகவில்லை. ரஞ்சனாவுக்கு ஒரு பிரப்பந்தட்டு நிறைய மல்லிகைப் பூ கொண்டு வரச் சொல்லியிருந்தேன். சிருங்காரத்தைத் தூண்டி அடிமட்ட விலங்கு உணர்ச்சியை மேலே எழுப்பிக் கொண்டு வந்து இரவு அதிகம் பூடகமான பின்புலம் ஏற்றிக் கொடுக்க இணை விழையும் அமைதியும் குளிருமான பொழுது அது. அந்த ராத்திரியில் ரஞ்சனா எனக்கு எனக்கு மட்டுமேயான ரதிதேவியாகி இருந்தாள். அன்றைய உறவு நிதானமாகக் கடந்து போக வீட்டு மாடிக்கு அவளைக் கூட்டிப் போய் பௌர்ணமிச் சந்திரன் பார்க்க இன்னொரு தடவை கூடினோம்.

அடுத்த நாள் ரோகிணியிடம் இதைச் சொல்ல, என்னோடும் அதேபடிக்கு இப்போதே விளையாடுங்கள் என்று நச்சரித்தாள். பௌர்ணமிக்கு நான் எங்கே போவேன்? ஆனால் அப்புறம் ரோகிணியோடு தான் அமாவாசையும் பௌர்ணமியும். அவள் தான் ரஞ்சனாவை, அவள் அழகை முதலீடு செய்யலாம் என்று யோசனை சொன்னவள்.

அதற்கு முன் இன்னும் சில செய்திகளைச் சொல்லியாக வேண்டும். என்னை முதலில் ராஜகுமாரர் என்று அழைத்தவள் ரோகிணி தான். சந்திரனில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் அவளுடைய முதல் கணவன் மாதிரி ஒரு பார்வைக்கு இருந்ததாகச் சொல்லி போகம் முந்தாமல் பார்த்துக் கொண்டாள் அந்தச் சிறுக்கி.

போர்த்துகல்கார ஐரோப்பியனான அவன் ஜெர்ஸுப்பாவோடு கப்பலில் வந்த போர்த்துகல் வீரர்கள் மோதாமல் தோற்ற சிறு யுத்தத்தில் இறந்து போனானாம். ஊமத்தை யுத்தம் என்ற அந்த யுத்தம் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன். அவனை ராஜா என்று நகைச்சுவையாகக் கூப்பிடுவாளாம் ரோகிணி. என்னை உண்மையாகவே அப்படி அழைப்பதாகச் சொல்லி மனதை மகிழ்வித்தாள் அவள்.

நான் உங்களை ராஜா என்று அழைத்த நல்ல வேளை நீங்கள் ஜெரஸோப்பா அரசராகப் போகிறீர்கள் என்று பூடகமாகச் சொன்னாள்.

pic Lisbon
ack theguardian.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 07:53
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.