ஐஐடி சென்னை – உண்மை என்ன?
அரவிந்தன் கன்னையன் ஐஐடி சென்னையில் நடக்கும் சாதியம் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். விடுதலை அதை மறு பிரசுரம் செய்யும் என்று நம்பலாம். “ஆமக்கா பப்படத்துக் காரி பார்வதியின் அத்தை மகள் அப்படித்தான் சொன்னா அன்னைக்கி” என்று புதுமைபித்தனின் வரிகளை நினைவுறுத்தும் வகையில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கட்டுரை முழுவதும் இருக்கிறது. ஐஐடி சென்னையும் மற்றைய ஐஐடிகளும். அறுபது ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கின்றன. அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்கள். அவற்றில் நடந்தவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்து எது வேண்டுமானாலும் எழுத முடியும். கேட்டை மூடி விட்டார் என்பதற்காக ஐஐடியில் சாதி இருக்கிறது என்று சொல்ல முடியுமானால், அருட் தந்தைகள் சிலர் வன்புணர்வு செய்கிறார்கள் என்பதனால் கத்தோலிக்க மதமே வன்புணர்வை தூக்கிப் பிடிக்கிறது என்று சொல்ல முடியும். கானடாவில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கத்தோலிக்க நிறுவனங்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதை வைத்துக் கொண்டு கத்தோலிக்க மதமே குழந்தைக் கொலைகளை ஊக்குவிக்கின்றன என்று சொல்ல முடியும். ஆனால் அப்படிச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகத்தான் இருக்கும். மேலும் உலகின் எந்த கல்வி நிறுவனத்தின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்கலாம். சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மீது அது இன வேறுபாட்டைக் கடைப்பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஐஐடிகளின் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு கடுகளவாவது நேர்மையிருந்தால் அஜந்தா சுப்பிரமணியம் சொல்லியிருக்கிறார் என்று மேற்கோள் காட்டக் கூடாது. அஜந்தா சுப்ரமணியத்தின் புத்தகம் முழுவதும் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இருக்கிறதே தவிர உருப்படியான புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. உதாரணமாக ஐஐடி மெட்ராசில் இன்று வரை படித்து வெளிவந்தவர்களில் பிராமணர்கள் எத்தனை மற்றவர்கள் எத்தனை போன்ற புள்ளி விவரங்கள் வேண்டும். ஐஐடிகள் அரசு ஆணைகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன. ஐஐடிகள் அரசு ஆணைகளை மீறி சாதிப் பாகுபாடு காட்டுகின்றன என்றால் நீதிமன்றத்தில் பொது வழக்குத் தொடர வேண்டும். வழக்கில் வெற்றி பெற்றால் ஐஐடிகளை மூடச் சொல்லுங்கள். குறிப்பாக சென்னை ஐஐடியை. இப்போது ஐஐடி சென்னையைக் குறித்து எழும் அவதூறுகள் நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்தது போல பிராமணர்களை அழித்தொழிக்க முடியவில்லையே, அவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு கல்வி நிறுவனங்களிலிருந்து விரட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் எழுவது. அவற்றைப் பிடித்துக் கொண்டு அரவிந்தன் தொங்கிக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பிராமணர்களையும் யூதர்களையும் ஒப்பிடக் கூடாது என்று அரவிந்தன் சொல்கிறார். இது போன்று நான்கு ஐந்து கட்டுரைகள் வரட்டும். திராவிட இயக்கத்தின் அப்பட்டமான இனவெறிக்கு சாமரம் வீசுவது தொடர்ந்து நடக்கட்டும். என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
இனி உண்மையான புள்ளி விவரங்களுக்கு வருவோம்.
ஐஐடி சென்னையில் மொத்தம் 10072 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் பொதுப் பிரிவில் இருப்பவர்கள் 5208 பேர்கள் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர்கள்- SC -1223, பழங்குடியினர் 502, பிற்படுத்தப்பட்டவர்கள் 2828, மற்றவர்கள் 301. பொதுத்தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். எனவே மாணவர் சேர்க்கையில் தகிடுதத்தம் நடக்கிறது என்று சொல்ல இயலாது. 10072 மாணவர்கள் படிக்கும் ஒரு நிறுவனத்தில் ஒன்றிரண்டு உதாரணங்களை எடுத்துக் கொண்டு கயிறு திரிப்பது எந்த அளவில் நியாயமாக இருக்க முடியும்? மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது பொறியியல் பிரிவுகளிலிருந்து இல்லை. இவை பொருளாதார, சமூகவியல் பிரிவுகளிலிருந்தே எழுகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இனி அங்கு வேலைபார்க்கும் ஆசிரியர்கள் எத்தனை என்று பார்ப்போம்.
அறிவிக்கப்பட்ட ஆசிரியர் இடங்கள் -1000
இப்போது இருக்கும் ஆசிரியர்கள் – 597.
அதாவது 40 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர் இடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்குக் காரணம் தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடைக்காததுதான். நிலைமை எல்லா முன்னிலை ஐஐடிகளிலும் இதே போன்றுதான். கரக்பூர் 1390 -722. கான்பூர் 835-462. தில்லி 776-653. இவை அனைத்தும் ஜனவரி 2021 புள்ளி விவரங்கள். இடங்களை உயர்சாதியினரை வைத்து நிரப்ப அரசும் நினைக்கவில்லை. நிறுவனங்களும் நினைக்கவில்லை. எனவே ஐஐடிகள் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கவில்லை என்பது மிகக் கேவலமான, அருவறுக்கத்தக்க பொய்.
அஜந்தா சுப்ரமணியம் சொல்கிறார்:
……by bracketing out historically accumulated advantages and disadvantages, the notion of meritocracy, like that of a color-blind society, has come to service the reproduction of inequality. Although meritocracy as a principle continues to animate calls for equalization, the divergence between its ideal meaning and its social life should call into question the assumption that meritocracy is indeed a leveler of opportunity.
தகுதி என்றால் என்ன என்பதைப் பற்றிய விவாதம் எல்லாத் தளங்களிலும் நடக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. எந்த அளவிற்கு அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சமூகமாகத்தான் இருக்க முடியும். ஐஐடிகள் நம் சமூகத்தில் ஓர் அங்கம் அவை தனித்துச் செயல்பட வேண்டும், குறிப்பாக சென்னை ஐஐடி தனித்துச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
