எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?
என் நிலைப்பாட்டை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
திரும்பவும் சொல்கிறேன். அரசு கையில் இருக்கும் கோவில்களில் எல்லாச் சாதியினரும் பெண்களும் திருநங்கையரும் அர்ச்சகர்கள்/பூசாரிகள் ஆகலாம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் இதை பெரியாரிய நாஜிகள் போன்றோ திராவிடக் கோமாளிகள் போன்றோ கலப்படக் கம்யூனிஸ்டுகள் போன்றோ, போன்றோ தடித்தனமாக அணுகக் கூடாது.
பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. பிராமணர் அல்லாதார் பூசாரிகளாக இருக்கும் கோவில்களிலும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.உள்ளூர் மக்கள் சம்மதம் இல்லாமல் அவ்வூர் கோவில்களின் இருந்து வரும் பாரம்பரியத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. பெரிய கோவில்களைப் பொறுத்தவரையில், – உதாரணமாக மதுரை மீனாட்சி, அறுபடை வீடுகளில் இருக்கும் கோவில்கள், ஸ்ரீரங்கம், சமயபுரம் மாரியம்மன், மருதமலை, காஞ்சிபுரம் கோவில்கள் போன்ற வருமானம் அதிகம் இருக்கும் புகழ் பெற்ற கோவில்களுக்கு – தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதால், தமிழக இந்து மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்து, அவர்கள் அனுமதி பெற்றுத்தான் பாரம்பரியத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எந்தெந்த கோவில்களுக்கு தமிழகம் முழுவதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வருமானத்தைப் பொறுத்து அரசே நிர்ணயம் செய்யலாம். தமிழகத்தில் செலவை விட வருமானம் அதிகம் வரும், ஆனால் அதிகம் புகழ் பெறாத ‘உள்ளூர்’ கோவில்கள் பல இருக்கின்றன. அவற்றில் உள்ளூர் இந்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகுதான் பாரம்பரியத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும். தமிழகத்தில் வருமானமும் இல்லாமலும், குறித்த நேரங்களில் பூசை நடக்காமலும் இருக்கும் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றிற்கு அரசு எந்த அர்ச்சகரை வேண்டுமானால் நியமனம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு அரசு ஒழுங்காக சம்பளம் கொடுக்க வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒப்பேற்றக் கூடாது. உள்ளூர் இந்து மக்கள் நியமனத்தை எதிர்த்தால் அவர்களே நிதி திரட்டி எந்த முறையில் கோவிலில் பூசை நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த முறையில் பூசை நடக்க அனுமதிக்க வேண்டும்.இந்து மக்கள் எவ்வாறு தங்கள் வழிபாட்டு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்து மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். அறநிலையத்துறைக்கோ அல்லது அரசிற்கோ இந்த அதிகாரம் கிடையாது. ஆனால் தமிழக அரசு தாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்து மக்களைக் கலந்து கொள்ளாமல் முடிவு எடுக்கும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. ஆனால் அது வெத்து வேட்டு முடிவாகத்தான் இருக்கும். இந்தியாவின் எந்த நீதி மன்றமும் அதை நிச்சயம் அனுமதிக்காது. ஒன்றியம் என்று அலறுவது போன்ற, நீட் தேர்வை நிறுத்த உயிரையே கொடுப்போம் போன்ற திராவிடப் போலி நாடகங்களில் ஒன்றாகத்தான் அது இருக்கும்.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
