விஜயம்





சிறிய இடைவெளிக்குப் பின் ஊர் திரும்புகிறோம்.மழைக்கால அதிகாலை ரயிலில் விடிவதற்கும் முந்திய ‘விடியக் காலத்தில்’ வீடு திரும்ப இம்முறை வாய்த்தது. எங்கள் வீட்டிற்கு நாங்களே விருந்தாடிகள்.வழக்கமாக ஆட்டோ தான் பிடிப்போம். ஆளுக்கு இரண்டு பெட்டியை இழுத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் விஜயன் வந்து விட்டார். வாடகைக் கார் வைத்திருக்கிறார். பழைய வெள்ளைக் கலர் அம்பாசிடர். இதற்கு முன் இரண்டு முறை அவர் வண்டியில் போயிருக்கிறேன். ‘கொடுக்கதைக் கொடுங்க’ என்பார். ‘ உங்களுக்குத் தெரியாதா?’ என்பார். ஆட்டோவில் போனால் இவ்வளவுதான் ஆகும். எதுக்கு நாங்க காரிலே வாரோம்?’ என்று கேட்டால், ‘சரி.அண்ணாச்சி.இதை ஆட்டோண்ணே நினைச்சுக்கிடுங்களேன்.’ என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ‘ என்ன கொறைஞ்சு போகப் போது? என்னக்கா?’ என்று பக்கத்து முகத்தைப் பார்ப்பார். பேசுகிற இந்த நேரத்தில் லக்கேஜ் எல்லாம் டிக்கியில் ஏறியிருக்கும். ஏறுவதற்குத் தோதுவாகக் கதவு திறந்து ’ஒருச்சாச்சு’ வைத்திருப்பார்.இன்றைக்கு அவருக்கு என் ஞாபகம் வரவில்லை. எங்களை விட ஒரு ஐந்து வயது குறையாகத்தான் இருக்கும். வயதுக்கும் ஞாபகத்திற்கும் என்ன இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கு ’சிலது’ மறக்கும். சிலது மறக்காது.‘போவும் அண்ணாச்சி. நாந்தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கனே’ என்றார். வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவரால் சொல்ல முடியாது. ஆனால் வீடு என்றால் எங்கேயாவது இங்கே தானே இருக்கும் என்று அவருக்குத் தெரியும். அவர் கூடவே டாக்சி ஸ்டாண்ட் வரை போய் ஏறிக்கொண்டோம்.‘வண்டி இண்ணைக்குக் கரெக்ட் டயத்துக்கு வந்துட்டான்’, ‘அங்கே மழை தண்ணீ எப்படி அண்ணாச்சி? இங்கே தூத்துக்குடி வரைக்கும் ஒரு ஆஃபர் போயிருந்தேன். மூணுமணி நேரம் ஊத்து ஊத்துண்ணு ஊத்தீட்டுது’, ‘மழக் காலம் லா. ஆறே கால் ஆகப் போது. இன்னும் முகம் தெளியக் காணும்” - இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறவர், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் வரும் போதுதான், நைசாக வீடு எங்கே இருக்கிறது என்று ஊகிப்பதற்கான அந்தக் கேள்வியைக் கேட்பார்.‘எப்படி அண்ணாச்சி ஸ்ட்ரெய்ட்டா பை பாஸ் வழியா போயிருவமா, பாளை பஸ் ஸ்டாண்ட் வழியா விட்டிருவமா? ரெண்டும் ஃப்ரீயாத்தான் இருக்கும். ஈ,காக்கா இருக்காது இப்ப’ என்றார். இதற்கு நாம் சொல்கிற பதிலைப் பொறுத்து வீடு இருக்கிற இடத்தை அவர் உத்தேசமாக நெருங்கிவிடுவார்.இந்த விளையாட்டுப் போதும் என்று தோன்றிவிட்டது எனக்கு. ‘ போகிற வழியில், பாளை பஸ் ஸ்டாண்ட் பக்கம் பால் வாங்கிட்டுப் போணும். பெருமாள் புரம் எல்ஷடா ஆஸ்பத்திரிக்கு ரைட்லே வீடு’ என்று சொன்னேன்.விஜயனுக்கு அப்போதும் நினைவு வரவில்லை. ‘நாந்தான் வந்திருக்கனே அண்ணாச்சி’ என்றார் ஆவின் கடை திறக்கவில்லை. பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷன் தாண்டின பிறகும் எல் ஷடாய் மருத்துவமனை பிடிபடவில்லை. வண்டி வேகம் குறைந்தது. நான்கு சக்கரங்களும் எங்கே திரும்ப வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள் என்றன.‘பழைய செகண்ட் ஸ்டாப்புக்கு வலது பக்கம் டென்னிஸ்கோர்ட் எல்லாம் இருக்கும்லா விஜயன்’ என்று சொல்லும் போது, அவர் ஒன்றும் சொல்லவில்லை. ‘நேர தானே அண்ணாச்சி. இப்போதாம் லெக்குத் தெரியுது’ என்றார். தனக்கு வீடு ஞாபகம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டதில் அவருக்கு பெரிய ஆசுவாசம் உண்டாகியிருந்தது. குரல் ஒரே ஒரு திரியில் விளக்குப் பொருத்தி எரிந்தது.‘தூத்துக்குடி ஆஃபர் கொஞ்சம் சுணங்கீட்டுது அண்ணாச்சி. பால பாக்யா நகர்ல கொண்டாந்து அவங்களை இறக்கி விட ராத்திரி ரெண்டு ரெண்டரை ஆயிட்டு’ என்றார். முகத்தில் இனித் தன்னிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்று அவருக்கே ஒரு நிறைவு. இதுவரை நேரே பார்த்து ஓட்டிக்கொண்டு வந்தவர் என் பக்கமாகத் திரும்பிச் சின்னப் பிள்ளை மாதிரிச் சிரித்தார்.‘சைடுல எல்லாம் இங்கியும் தண்ணி கெட்டிக் கிடக்கு. செத்த முந்திப் பெஞ்சிருக்கும் போல, கண்ணாடியா இருக்கு சுத்தமா” என்றார். வீடு வந்துவிட்டது என்பதிலும், அவருடைய பேச்சில் அவருடைய மறதியை ஒப்புக்கொண்டதும் உண்டான வெளிச்சம் எனக்குப் பிடித்திருந்ததாலும் உண்டான உணர்வில் அவர் தோளில் கைவைத்து ‘ அடுத்த லெஃப்ட்’ என்றேன்.விஜயன் இப்போது மேலும் விஜயனாகியிருந்தார். சாமி இல்லம் தாண்டும் போது தெரு அடைத்துப் பன்னீர்ப் பூ உதிர்ந்து கிடந்தது. ‘ பாய் மாதிரிக் கிடக்கு அண்ணாச்சி’ என்றார். சத்தியமாக, விஜயன் இப்படியே இதைச் சொன்னார்.நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘அந்த முக்கு வீடுதானே. நான் தான் வந்திருக்கனே’ என்றார்.நான் விஜயனின் தோளில் மீண்டும் கையை மட்டும் அப்படியே வைத்தேன்.ஒரே ஒரு கையால் ஒருத்தரை அணைக்க முடியாதா என்ன?%27.11.2017 முக நூல் பதிவு.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2019 19:46
No comments have been added yet.


Vannadasan's Blog

Vannadasan
Vannadasan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Vannadasan's blog with rss.