உங்களில் யார் அடுத்த சுஜாதா?

வெகுஜன எழுத்து என்பது ஒரு மொழியின் செழுமைக்கும், அதன் மக்களின் மகிழ்ச்சிக்கும் மிக அத்தியாவசியமானது என்பது என் வலுவான நம்பிக்கை. அதனால் ஒருபோதும் அதை நான் கீழ்மையாக எண்ணியதோ கேலி செய்ததோ இல்லை. (என் எழுத்தே இப்போதைக்கு ஒரு மாதிரி வெகுஜன எழுத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடைப்பட்டது தான்.)

ஆனால் அதே சமயம் வெகுஜன எழுத்து என்பது ஏனோதானோ என்றில்லாமல் தரமாக வர வேண்டும், அதில் புதுமைகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேற்கே அப்படித்தான். ஆக, வெகுஜனப் படைப்பொன்றை எழுதுவது பாவமோ கேவலமோ அல்ல. அதற்கும் நல்ல உழைப்பும், எழுத்து நுட்பமும் தேவை. எல்லோருக்கும் அது சுலபமாய் வாய்த்து விடாது.

அப்படிப் பார்க்கையில் சுஜாதா வெகுஜன எழுத்துக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

பதின்மத்திலிருந்து விலகும் ஒரு தமிழ் இளைஞனுக்கு வாசிப்பில் சுஜாதா ஒரு மிகச்சிறந்த ஆரம்பப்புள்ளி. சுலபமான அதே சமயம் கவர்ச்சிகரமான துவக்கம். ஆரம்பத்தில் வாசிப்பதற்கான ஒருவித ஊக்கத்தினை / போதையினை சுஜாதாவின் எழுத்துக்களிலிருக்கும் வாசிப்பின்பம் அளிக்கிறது. அது அலுக்கும் போது நிஜமான தேடலை உடையவன் அங்கிருந்து நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு நகர்வான். இத்தகைய எளிமையான‌ துவக்கத்தைத் தரக்கூடிய எழுத்து என்றால் தமிழில் பிரதானமாய் சுஜாதாவையே குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஒருவர் ஆழமான எழுத்துக்களை வந்தடைய‌ சுஜாதா ஒரு மறைமுக மார்க்கம். வாசிப்பின்பத்தை விட வாசிப்பாழம் முக்கியம் என்ற புரிதல் வருவதற்கு ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அந்த சுண்டியிழுக்கும் துவக்கத்தை குறைந்தபட்சம் அடுத்து வரும் ஐம்பதாண்டுகளில் எந்தவொரு சராசரித் தமிழ் இளைஞனுக்கும் சிறப்பான‌ முறையில் அளிக்க வல்லவை சுஜாதாவின் எழுத்துக்கள் என்பதாகவே எண்ணுகிறேன்.

மாறாக, விபத்தாய் ஆரம்பத்திலேயே சிக்கலான‌ எழுத்தை தன் வாசிப்பாய்த் துவக்கும் ஒரு பக்குவமுறா வாசகன் அதன் வீச்சின் கடுமையில் ஊக்கமிழந்து தன் வாசிப்பை நிறுத்திவிடக்கூடும். (இன்று வணிக இதழ்கள் கூட வெகுஜன எழுத்தைக் கைவிட்டு ஒரு மாதிரி நடுவாந்திர எழுத்தையே முன்வைக்கின்றன.) பதிலாய் அவன் சுஜாதாவில் தொடங்கி மெல்ல ஆழங்களுக்கு வரலாம். அதுவே இயல்பான படிநிலை வளர்ச்சி.

ஆரம்பத்திலேயே முதிர்ந்த நோக்குடன் வாசிப்பைத் தொடங்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைந்தவர்கள். அதே போல் சுஜாதாவில் தொடங்கி சுஜாதாவிலேயே முடிந்து விடுப‌வர்க‌ளும் இருக்கிறார்கள். இந்த இரு சாராரையும் தவிர்த்து, இன்னும் தொடக்கம் கிடைக்காத, கிடைத்தால் நல்ல வாசிப்பை நோக்கி நகரக்கூடிய வாசகர்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். இங்கு தான் சுஜாதாவின் தேவை இருக்கிறது.

இன்று சுஜாதா இல்லை. ஒரு வெற்றிடம் இருக்கிறது. (அவ்வப்போது 'அடுத்த சுஜாதா' என்று யாராவது யாரையாவது பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் ஷான் எழுதிய வெட்டாட்டம் தான் எனக்கு சமீபத்தில் நினைவுக்கு வரும் நல்ல வெகுஜன எழுத்தாக இருக்கிறது.) தொடர்ந்து சுஜாதா போல், டான் பிரவுன் போல் தரமான வெகுஜனப் படைப்புக்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் தேவை. அதற்குத் தான் அமேஸான் Pen to Publish போன்ற போட்டிகள் அவசியம் எனக் கருதுகிறேன். உரிய திறமையும் ஆர்வமும் உள்ளோர் பங்கேற்று அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும்.

"உங்களில் யார் அடுத்த சுஜாதா?" என்பது தான் இன்று தமிழகத்தின் அரை மில்லியன் ரூபாய் கேள்வி!

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2019 06:03
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.