அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி - 2019


அமேஸான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்க‌ள் (E-books) வாசிக்க உதவும் கருவி (Device). கருவி வாங்கத் தோதுப்படவில்லை எனில் கிண்டிலின் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் செயலிகளிலும் (apps), வலைதளத்திலும் (website) கூட கிண்டில் மின்னூல்களை வாசிக்கலாம். இது வாசக தரப்பு. அந்தப் புறம் எழுத்தாளர்கள் சுயமாய்த் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடவும் கிண்டில் உதவுகிறது. அதன் பெயர் KDP. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்!

வாசகர்களுக்கு கிண்டிலால் ஏராளச் சகாயங்கள் உண்டு. பணத்தைச் சேமிக்கிறது; குறைந்த இடத்தை அடைக்கிறது. எடுத்துச் செல்வது எளிது; என்ன வாசிக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதால் பயணத்திற்குத் தோது. பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கின்றன, அதோடு அவற்றைக் கடன் பெறவும் முடியும். கருவியின் தோற்றம் கவர்ச்சிகரமானது என்பதால் அது உங்கள் பற்றிய ஒரு அந்தஸ்தான எண்ணத்தை ஏற்படுத்தும். இறுதியாக, அது ஓர் அறிவுஜீவி பிம்பத்தை உங்களுக்கு அளித்து கூட்டத்திலிருந்து தனித்துக் காட்டும்.

பல வாசகர்கள், கிண்டில் மின்னூல்களை வாசிக்க சில ஆயிரம் செலவிட்டு கிண்டில் ஈரீடர் கருவியை வாங்குவது தான் ஒரே வழி என நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. கிண்டில் செயலியை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல், டேப்லட், டேப்லட், ஐஃபோன், ஐபேட், மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இலவசமாகத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். அல்லது ப்ரவுஸரில் கிண்டில் க்ளவுட் ரீடர் வலைதளத்துக்குச் சென்றும் வாசிக்கலாம். இதன் பிறகு உங்கள் கருவியும் ஒரு கிண்டில் ஈரீடரைப் போலவே செயல்படத் தொடங்கும். மிக எளிது! (ஆனால் கிண்டில் கருவிக்கென சில பிரத்யேக மேன்மைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் - உதா: கண் கூசாது, கவனம் சிதறாது, நீடித்த பேட்டரி, நீர் நுழையாது, உடலுக்கு சொகுசு, பக்கம் திருப்ப பட்டன்கள்.)

எழுத்தாளர்கள் பக்கம் வருவோம். அவர்களுக்கும் கிண்டிலானது நவீனத்தின் திறப்பு. பைசா செலவில்லாமல், அமேஸான் வலைதளத்தில் ஒரு கணக்குத் துவங்கி, சிறிதோ பெரிதோ புத்தகத்தின் சீராக டைப் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட் இருந்தால் போதும் KDP-யில் மின்னூலைப் பதிப்பித்து விடலாம். விலையை எழுத்தாளரே நிர்ணயிக்கலாம். சில மணி நேரங்களில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஃப்ரான்ஸ் என உலகம் முழுவதுமுள்ள 13 அமேஸான் தளங்களில் உடனடியாய் விற்பனைக்கு வந்து விடும். அவ்வளவு தான் விஷயம். இனி வாசகர்கள் வாங்கலாம்.

மாதாமாதம் எழுத்தாளரின் வங்கிக் கணக்குக்கு ராயல்டி தொகை வந்து சேர்ந்து விடும் (அதிகபட்சமாய் நூலின் விலையில் 70% வரை கிட்டும்). புத்தகம் விற்பதற்கு மட்டுமல்ல; வாசிக்கப்படுவதற்கும் ராயல்டி உண்டு! கிண்டில் மின்னூல்கள் கள்ளப்பிரதி செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் குறைவு. அவ்வப்போது நூல்களைச் சலுகை விலையிலும் விற்பார்கள். எழுத்தாளர்களே சில தினங்களுக்கு இலவசமாக நூலை வழங்கும் வசதியும் உண்டு. Kindle Unlimited-ல் வாசகர்கள் கடன் பெற்றுப் படிக்கும் வாய்ப்பையும் வழங்கலாம். எழுத்தாளர்களுக்கான சொர்க்கவாசல் தான் கிண்டில்!

நான் KDP-ஐ விரும்புவதன் காரணம் அது லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய எளிமையான, துரிதமான, வெளிப்படையான, முதலீடற்ற, கள்ளப்பிரதிகள் சாத்தியமில்லாத ஒரே மார்க்கமாக இன்று இருக்கிறது. அது எழுத்தாளர்களை நம்பிக்கையாகவும், சுயாதீனமாகவும் உணரச் செய்கிறது.

இன்று உலகம், குறிப்பாய் தமிழ் வாசகத் திரள், மின்னணு யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அச்சு நூல்களை விட மின்னூல்களை அதிகம் விரும்புகிறார்கள். இதனால் KDP எனக்குத் தரும் ராயல்டி என் அச்சு நூல்களில் வருவதை விட அதிகமாக இருக்கிறது. தவிர, அச்சு நூல்களை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்ப, அதற்கு ஆகும் கூடுதல் செலவு தடையாக இருக்கிறது. ஆனால் KDP வழி ஒரு தமிழ் எழுத்தாளன், எந்தக் கூடுதல் வேலை அல்லது செலவும் இன்றி உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் ஒரு சீரிய தமிழ் வாசகனையும் சென்றடைய முடியும்.


கிண்டிலில் எழுதுபவர்களை ஊக்குவிக்க அமேஸான் இந்தியாவில் 'Pen to Publish' என்ற போட்டியை 2017 முதல் நடத்துகிறது. சென்ற ஆண்டிலிருந்து தமிழ் மொழியும் இப்போட்டியில் சேர்க்கப்பட்டது. மும்மொழிகள் - ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பரிசுகள்; தனித்தனியான தேர்வுக் குழு. வட இந்தியாவில் மக்கள் பரவலாய்ப் பேசும் இந்தியும், அகில இந்திய‌ இணைப்பு மொழியான ஆங்கிலமும் தவிர்த்து தமிழ் ஒன்று தான் இப்போட்டியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி (மேற்சொன்ன மும்மொழிகள் தவிர‌, மலையாளம், மராத்தி, குஜராத்தி மொழிகளிலும் கிண்டில் மின்னூல்கள் உண்டு). கிண்டில் மின்னூல்க‌ள் தமிழில் அதிகம் எழுதப்படுவதற்கும், வாசிக்கப்படுவதற்கும் இது எளிய, நேரடி ஆதாரம். இந்த அறிகுறி தாண்டி தமிழ் வாசகனாகவும், தமிழ் எழுத்தாளனாகவும் அதை நான் நேரடியாகவே உணர்கிறேன்.

போன முறை 'Pen to Publish' போட்டியில் தமிழுக்கு நடுவராக எழுத்தாளர் இரா.முருகன் இருந்தார். சென் பாலன் எழுதிய பரங்கிமலை இரயில் நிலையம் என்ற‌ நாவலும் விக்னேஷ் சி செல்வவராஜ் எழுதிய குத்தாட்டம் போடச்செய்யும் 'இசை' என்ற நீள்கட்டுரையும் பரிசு வென்றன.

இன்று இவ்வாண்டுக்கான 'Pen to Publish' போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது. போன முறையை விட கூடுதல் பிரம்மாண்டமாய், கூடுதல் வசீகரங்களுடன், அதனாலேயே கூடுதல் சவாலுடன்.

மும்மொழிகளில் தமிழ் பற்றி மட்டும் பார்ப்போம். எது வேண்டுமானாலும் எழுதலாம். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, அபுனைவு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போட்டியில் மொத்தம் இரண்டு வகைமைகள்: நீள்வடிவு (Long Form) மற்றும் குறுவடிவு (Short Form). 2,000 முதல் 10,000 சொற்களுக்குள் அமைந்த படைப்புகள் எல்லாம் குறுவடிவில் வரும். 10,000க்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட படைப்புகள் அனைத்தும் நீள்வடிவில் அடங்கும்.

பரிசுத் தொகை:
நீள்வடிவு: முதல் பரிசு - ரூ. 5 லட்சம் | இரண்டாம் பரிசு ரூ. - 1 லட்சம் | மூன்றாம் பரிசு - ரூ. 50,000
குறுவடிவு: முதல் பரிசு - ரூ. 50,000 | இரண்டாம் பரிசு - ரூ. 25,000 | மூன்றாம் பரிசு - ரூ. 10,000

நீள்வடிவில் முதல் பரிசின் தொகையைக் கவனியுங்கள். ஐந்து லட்சம் ரூபாய். சாஹித்ய அகாதமி விருது வாங்கினால் கூட ரூ.1 லட்சம் தான் பரிசு. சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது வாங்கினால் கூட ரூ. 2.5 லட்சம் தான் தொகை. ஒற்றைப் படைப்புக்கு இந்தியாவில் வழங்கப்படும் பரிசுகளில் வேறெதுவும் இத்தனை அதிகப் பரிசுத் தொகை இல்லை. ஆக, க்ளீஷேவாக இருந்தாலும் இதைச் சொல்லித் தான் ஆக வேண்டியுள்ளது - இது ஒரு பொன்னான வாய்ப்பு!

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பரிசுகள் முடியவில்லை. நீள்வடிவில் இறுதிப் போட்டிக்குத் தமிழில் தேர்வாகும் படைப்புகள் உலகம் முழுவதுமுள்ள  'Pen to Publish' போட்டியில் தேர்வாகும் படைப்புகளுடன் மோதும். (இந்தியாவில் மும்மொழிகளில் போட்டி நடப்பது போல் பிற நாடுகளிலும் பல மொழிகளில் போட்டி நடக்கும்.) அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்பு அமேஸான் ப்ரைம் ஸ்டூசியோஸால் வெப் சீரீஸாகவோ திரைப்படமாகவோ எடுக்கப்படும்.  அந்தத் திரைக்கதைக்கான‌ உரிமத்தொகைக்கான முன்பணமாக‌ அந்த எழுத்தாளருக்கு ரூ. 7 லட்சம் வழங்கப்படும். (படமாக்க‌ 36 மாத ஒப்பந்தம் எழுதப்பட்டு பிறகு உரிய தொகை வழங்கப்படும்.)

வெற்றி பெற்றோர் போட்டி நடுவர்களிடம் எழுத்து நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறார்கள். அது போக, ஜெயித்தவர்களின் மின்னூல் விற்பனை விஷயத்தில் சில சலுகைகளும் உண்டு. இப்படி 'Pen to Publish' போட்டியின் பரிசுகள் பல திசையில் விரிகின்றன.

வெற்றிப் படைப்புகள் இரண்டு சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படும்: 1) விற்பனை மற்றும் வாசகர் மதிப்பீடு பொறுத்து ஒவ்வொரு வடிவிலும் தலா ஐந்து நூல்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்தெடுக்கப்படும். 2) இறுதிச் சுற்றில் அப்படைப்புகளை வாசித்து நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.

ஆக, 'Pen to Publish' போட்டியில் தரமான படைப்பை எழுதுவது மட்டுமின்றி, அது வாசகரிடையே போய்ச் சேர்வதும் அவசியம். அதாவது, சந்தைப்படுத்தலிலும் எழுத்தாளர் கவனம் செலுத்த வேண்டும். அது எழுத்தாளன் வேலையா எனக் கேட்டால், இந்தப் போட்டியைப் பொருத்தவரை ஆம். புத்தகத்தை விற்க வைக்க வைக்க வேண்டும். அதற்கான ஊக்குவிப்பு இது எனக் கொள்ளலாம்.

போட்டியில் கலந்து கொள்வது எப்படி?
1) 15 செப்டெம்பர் 2019 முதல் 14 டிசம்பர் 2019க்குள் KDP-யில் நூலைப் பதிப்பிக்க வேண்டும்.
2) பதிப்பிக்கையில் நூலுக்கான Key Words-ல் pentopublish2019 என்பதைச் சேர்க்க வேண்டும்.
3) நூலுக்கு KDP Select ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (இது புத்தகத்தைக் கடன் வழங்க‌).

சில விதிமுறைகள்:
1) எழுத்தாளர் 18 வயதுக்கு மேற்பட்டவராய் இருக்க வேண்டும்.
2) படைப்பு இது வரை அச்சிலோ, மின்வடிவிலோ எங்கும் வெளியாகி இருக்கக்கூடாது.
3) எழுத்தாளருக்குப் படைப்பின் மீது முழு உரிமை இருக்க வேண்டும்.
4) ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம்.
5) போன முறை போட்டியில் வென்றவர்களும் பங்கு கொள்ளலாம்.
6) க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர எந்நாட்டவரும் பங்குகொள்ளலாம்.
 
எழுத்தாளர்கள் நூலைப் பதிப்பித்த நான்கு வேலை தினங்களுக்குப் பின் அமேஸான் தளத்தின் 'Pen to Publish' போட்டிப் பக்கத்தில் 'View Entries' என்ற சுட்டிக்குப் போய் போட்டிக்கு அவர்களின் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டதை அறிந்து கொள்ளலாம். இறுதிச்சுற்றுக்குத் தேர்வானோர் பட்டியல் 25 ஜனவரி 2020 அன்று வெளியிட‌ப்படும். வெற்றியாளர்கள் 20 ஃபிப்ரவரி 2020 அன்று அறிவிக்கப்படுவர்.

இப்போட்டியின் மூலம் தமிழ்ச் சூழலில் இரண்டு விஷயங்கள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்: 1) சுஜாதாவுக்குப் பின் தமிழ் வெகுஜன எழுத்தில் ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இந்தப் போட்டி அதை நிரப்ப உதவும். 2) எழுத்தாளராகும் ஆற்றல் கொண்ட, சமூக வலைதளங்களில் இயங்கி வருபவர்கள் தங்கள் முதல் நூலை இப்போட்டியின் வழி வெளியிடுவார்கள்.

போட்டித் தேதிகளை நினைவிற்கொள்வது எளிது. போட்டி ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது; பேரறிஞர் தினத்திலிருந்து மின்னூல்களைப் பதிப்பிக்கத் துவங்கலாம்.

இனி யோசிக்க ஏதுமில்லை.  "Everyone has a story" என்பது திருமதி சவி ஷர்மா வாக்கு. "எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் எழுதுவது தான்" என்பது சிஎஸ்கே வாக்கு. கொஞ்சம் முயன்றால் யாரும் அதை எழுதி விடலாம். அர்ப்பணிப்பு மட்டுமே தேவை. ஆக, மேற்சொன்ன‌ ரொக்கப் பரிசுகளைப் பார்த்து, "ஐயோ, சொக்கா சொக்கா! அத்தனையும் எனக்கா!" என்ற குரல் எழுதுபவர்கள் / எழுத எத்தனிப்பவர்கள் மனதில் ஒலிக்க வேண்டும். ஆனால் மண்டபத்தில் யாரிடமாவது எழுதி வாங்காமல், சொந்தப் படைப்புக்களைப் போட்டிக்கு அனுப்ப வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு: இம்முறை தமிழுக்கான நடுவர் குழுவில் அடியேனும் உண்டு. இன்னொருவர் பாரா!

***

சில சுட்டிகள்:
2019 போட்டிப் பக்கம்: https://www.amazon.in/pen-to-publish-contest/b?node=13819037031போட்டி பற்றிய‌ கேள்விகள்: https://www.amazon.in/b?node=15883391031KDP மின்னூல் பதிப்பிக்க‌: http://kdp.amazon.com/சென்ற ஆண்டு வென்றவை: https://www.amazon.in/s?node=14333006031விரிவான சட்டதிட்டங்கள்: https://www.amazon.in/b?node=15883392031  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2019 09:36
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.