கால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..

“காய்நெல் அறுத்துக்கவளம் கொளினே
மாநிறைவு அல்லதும்
பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும்
தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும்
கால் பெரிது கெடுக்கும்”என்ற பிசிராந்தையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் வைத்தார்.ஒரு சின்னஞ்சிறிய நிலம். அங்கு விளைந்த நெல் விளைச்சலும் குறைவு. அதனால் ஒன்றும் பாதகம் இல்லை. விளைந்த நெல்லை அறுத்து, சமைத்து, கவளமாக்கி பலநாட்களுக்கு யானைக்கே ஊட்டி உணவளிக்கலாம்.அதே வேளை யானை தானே வயல்புகுந்து உணவெடுக்க முயலுமாயின் அது தின்றதைவிட அதன் காலில் மிதிபட்டு நெல் அழியும். ஒரே நாளில் யானைக்கான உணவும் தீர்ந்து போகும்.அதுபோல மன்னனும் மக்களிடம் உள்ளதற்கு ஏற்றவாறும் அரசின் தேவைக்கு ஏற்றவாறும் ஆலோசித்து வரி பெற வேண்டும். அல்லாது போனால் மக்களின் செல்வமும் அழிந்துபோகும், அரசு கஜானாவும் அழிந்துபோகும்.”இந்திய கல்விக் கொள்கை 2019” குறித்த நமது விமர்சனத்தை இதே பாடலைக் கொண்டே இறுதியாக நிறைவு செய்யலாம்.நிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்னதாகவே புதியக் கல்விக் கொள்கையின் வரைவறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. போகிறபோக்கில் நுனிமேய்தலிலேயே அதன் மும்மொழிக்கொள்கை பளிச்செனப் பல்லைக் காட்டியது. இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்தில் அதற்கு மிக பலமான எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக மத்திய அரசு பம்மியது.நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது ‘பிசிராந்தையார்’ என்பதை சரியாக உச்சரிக்கத் தெரியாமல் ‘பிசிர் ஆந்தையார்’ என்று திருமதி நிர்மலா வாசித்தார்.அவரது பிழையான உச்சரிப்பையும் மொழிக்கொள்கையில் மத்திய அரசின் பின்வாங்கலையும் ஏகத்துக்கும் பகடி செய்தோம். அதில் ஒருவிதமான மனநிறைவே நமக்கு கிடைத்தது என்பதைக்கூட நம்மால் மறுக்க இயலாது.நமது பகடிகளின் இரைச்சலினூடே அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிப்பதற்காக நிதியை ஒதுக்கிவிட்டார்கள்.அவர்கள் நினைத்ததை செய்வதற்காக எதையும் அவர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பது புலனாகிறது. எனவே அவர்களைப் பகடி செய்வதால் நமக்கொன்றும் நல்லது நடந்துவிடப் போவதில்லை. அறிக்கையை முழுமையாக வாசிப்பதும், அதன் ஆபத்துகளை உரியவர்களிடம் கொண்டு செல்வதும், இதற்கெதிராக அவர்களை ஒன்று திரட்டி களத்திற்கு கொண்டுவருவதும் மட்டுமே இப்போதைய உடனடித் தேவையாக இருக்கிறது.இந்த அறிக்கையை மேலோட்டமாக வாசித்தால் திகட்டித் திகட்டி மயங்கி விழுகிற அளவிற்கு தேனைத் தடவி வைத்திருக்கிறார்கள்.இந்த அறிக்கையில் ஓரிடத்தில் 2015 ஆம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ ஆறரை கோடி குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநின்றுவிட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஏன் இவ்வளவு குழந்தைகள் இடைநிற்கிறார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் நம்மைவிடத் தெளிவாகவே அலசியிருக்கிறார்கள்.அருகமைப் பள்ளிகள் இல்லாமை குழந்தைகளின் இடைநிற்றலுக்கான ஆக முக்கியமான காரணம் என்பதை இந்த வரைவறிக்கை மிகத் தெளிவாக சுட்டுகிறது. ஏழை எளிய மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிப் படிப்பிற்காக வெளியூர்களுக்கு அனுப்புவதற்கு பொருளாதார வசதி அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. மட்டுமல்ல, வசதி உள்ளவர்களாலும் சரியான நேரத்தில் போதுமான அளவு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தங்களது குழந்தைகளை வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்ப இயலாத சூழல் இருப்பதையும் இந்த வரைவறிக்கை உணர்ந்தே இருக்கிறது. உணர்ந்திருப்பது மட்டுமல்ல அது குறித்த தனது கவலையையும்கூட அது பதிவு செய்திருக்கிறது.துவக்கப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் மேல்நிலைக் கல்வியை முடிக்காமல் இடைநிற்பதற்கு வீடுகளின் அருகில் இருக்கும் துவக்கப்பள்ளிகளின் அளவிற்கு மேல்நிலைப் பள்ளிகள் இல்லாமையை ஒரு பெருங்காரணமாக கவலையோடு பதிவு செய்து வைத்திருக்கிறது இந்த வரைவறிக்கை.வெளியூர் சென்று படிக்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு போதுமான அளவில் இல்லாததும் அவர்களது இடைநிற்றலுக்கு காரணமாக அமைவதையும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறது.குழந்தைகளின் இடைநிற்றலை என்ன விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த அறிக்கை. இடைநிற்றலுக்கான மேற்சொன்ன காரணங்களை களையச் சொல்லித்தான் நாமும் பல பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்.ஆகா, நாம் சொல்லும் காரணங்களைத்தான் அவர்களும் கூறுகிறார்கள். நம்மைப்போலவே அவர்களும் என்ன விலை கொடுத்தேனும் களைந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். பிறகென்ன நல்லது நடந்துவிடும், இடைநிற்றல் சிறுகச் சிறுகக் குறைந்து ஒருகட்டத்தில் இடைநிற்றலே இல்லை என்ற நிலை வந்துவிடும் என்று நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்கான முயற்சியை தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வேஷம் கலைந்து நிற்கிறார்கள்.27.06.2019 நாளிட்ட “THE HINDU” நாளிதழில் திரு கஸ்தூரிரெங்கன் அவர்களது நேர்காணல் வந்திருக்கிறது.சில பள்ளிகளில் ஆறே ஆறு மாணவர்கள் மட்டுமே இருப்பதாகக் கவலைப்படுகிறார். இந்த ஆறு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியரை நியமிக்கவேண்டிய அவசியம் இருப்பது குறித்தும் வருத்தம் தெரிவிக்கிறார். இது அனைத்து விஷயங்களிலும் மிகவும் அதிகப்படியானதாக அவர் உணர்கிறார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார். அதுதான் நமது ஆசையும்கூட. அவர் கொடுக்கும் குப்பியில் குடிக்கிற சூட்டில் பால் இருக்கும் என்று பருகத் தயாராகிறோம். பாலுக்கு பதில் நஞ்சிருக்கிறது. அதிர்ந்து போகிறோம்.இந்த ஆறு குழந்தைகளையும் ஒரு ஆசிரியரையும் வளமாக இருக்கக்கூடிய பக்கத்து ஊர்ப் பள்ளிக்கு மாற்றிவிடலாம் என்று பரிந்துரைக்கிறார்.அதாவது ஆறு மாணவர்கள் இருக்கக்கூடிய பள்ளியை மூடிவிட்டு அந்தக் குழந்தைகளையும் ஆசிரியரையும் 300 மாணவர்களும் பத்து ஆசிரியர்களும் இருக்கக்கூடிய பக்கத்துப் பள்ளிக்கு மாற்றுகிறார்.அப்படிச் செய்தால் 300 குழந்தைகள் இருந்த பள்ளியில் 306 குழந்தைகளும் பத்து ஆசிரியர்கள் இருந்த பள்ளியில் பதினோறு ஆசிரியர்களும் என்று ஆகிவிடும்.அந்த ஆறு குழந்தைகளும் ஒரு ஆசிரியரும் இருந்த பள்ளி குட்டிச்சுவராகி சமூக விரோதிகளுக்கான புகழிடமாக மாறிவிடும்.ஆறு குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதே தவறு. ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதே சரி.போதுமான அளவு மாணவர்கள் இல்லை என்கிறது அறிக்கை. போதுமான அளவு அந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதே உண்மை. ஒரு துவக்கப்பள்ளிக்கு இத்தனை மாணவர்களேனும் வேண்டும் என்று சொல்லும் அறிக்கை ஒரு துவக்கப் பள்ளிக்கு ஐந்து ஆசிரியர்களேனும் வேண்டும் என்பதை கள்ளத்தனமாக நிராகரிக்கிறது.மாணாவர்கள் இல்லாத்தால் ஆசிரியரை நியமிக்க இயலவில்லை என்று காரணம் கூறும் அறிக்கை போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாததுகூட மாணவர்கள் சேராததற்கான காரணமாக இருக்கக்கூடும் என்பதை ஒரு வாதத்திற்காகக்கூட ஏற்க மறுக்கிறது.அருகமைப் பள்ளிகளின் அவசியம் குறித்த தனது கவலையை தானே பகடி செய்கிறது இந்த அறிக்கை.இன்னும் எளிமையாக சொல்வதென்றால் இருக்கும் இடத்தில் இருந்துதான் இருப்பதில் இருந்து கொஞ்சத்தை இல்லாத இடத்திற்கு கொண்டு வருவோம்.
இல்லாத இட்த்தில் இருப்பதையும் வழித்துக் கொண்டுவந்து இருக்கும் இடத்தை வளப்படுத்த சொல்கிறது இந்த அறிக்கை.மையப்படுத்துதலின் கூறு இது என்பதால்தான் நாம் பதட்டப்படுகிறோம்.உள்ளூர் பள்ளிக்கே ஆறுபேர்தான் வருகிறார்கள். இவர்களையும் அடுத்த ஊருக்கு போகச் சொன்னால் இந்த எண்ணிக்கை இன்னும் குறையாதா? எனில், 2015 ஆண்டில் ஆறரை கோடியாக இருந்த இடைநின்றவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்காதா?இன்னொரு கணக்கையும் நாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆறரை கோடியில் பெரும்பாண்மை தலித் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். எனில்,இந்த வரைவறிக்கை தலித்துகளின் கல்விக்கு எதிரானது அல்லவா?இரண்டாம் வகுப்பு பாடத்தை மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 75 சதமும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 50 சதம் பேராலும் எட்டாம் வகுப்பு மாணாவர்களில் 25 சதம் பேராலும் வாசிக்கத் தெரியவில்லை என்றும் இந்த வரைவறிக்கை கவலை கொள்கிறது.இந்தியாவில் ஏறத்தாழ 40000 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை மட்டுமே இருப்பதாகவும் இவற்றில் பெரும்பாண்மை அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருப்பதாகவும் கவலை கொள்கிறார் திரு கஸ்தூரிரெங்கன். அமெரிக்காவிலும் சீனாவிலும் இருக்கும் அதீக எண்ணிக்கையிலான காப்புரிமைகள் இருப்பது கண்டு புழுங்குகிறார்.புத்தகங்களை வாசிப்பதற்கும் காப்புரிமையை அதிகரிப்பதற்கும் இந்த வரைவறிக்கை என்ன மாற்றை வைத்திருக்கிறது?1) 5+5+2 என்று இருக்கக்கூடிய பள்ளிக் கட்டமைப்பை 5+3+3+4 என்று மாற்றி அமைக்கப் பரிந்துரைக்கிறது
2) மூன்றாம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் கட்டாயத் தேர்வு முறையைப் பரிந்துரைக்கிறது
3) பள்ளிக் கல்வியிலேயே தொழிற்கல்வியை பரிந்துரைக்கிறது
4) பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கப் பரிந்துரைக்கிறதுமுதல் இரண்டு காரணங்களும் ஆறரை கோடியில் இருக்கக்கூடிய இடைநிற்பவர்களின் எண்ணிக்கையை எட்டுகோடியாக அதிகப்படுத்தும். தொழிற்கல்வி குலக்கல்வியை கொண்டு வரும்.வேத கணிதம் பாடமாகிறது, ஜோசியம் அறிவியலின் ஒரு பகுதியாகிறது, ஆரியப்பட்டரும் சாணக்கியரும் பாடத்திட்டத்திற்குள் வருகிறார்கள். வள்ளுவரோ ராமனுஜரோ சர் சி வி ராமனோ இல்லை.யுனெஸ்கோவின் ஒரு அறிக்கை இப்படிக் கூறுகிறது,“The purpose of education is to include the excluded”பள்ளிக்குள் நுழைவதற்கு வக்கற்றவர்களை, அதாவது கல்வி மறுக்கப்பட்டவர்களை பள்ளிக்குள் வைத்திருப்பதே கல்வியின் நோக்கம் என்று இதைக் கொள்ளலாம். கட்டாயத்தேர்வு யுனெஸ்கோவின் இந்த அறிக்கைக்கு எதிரானது.40000 காப்புரிமைகளே இருப்பதற்காக திரு கஸ்தூரிரெங்கன் கவலைப்படுகிறார்.1) இன்னமும் பல்வேறு கிராமங்களில் இரட்டைக் குவளைமுறை உள்ளது
2) இந்திய ஜனாதிபதியே உள்செல்ல முடியாத ஆலயங்கள் இந்தியாவில் உள்ளன
3) ஆணவப் படுகொலைகள் தினமும் நடக்கின்றன
4) பச்சிளங்குழந்தைகள் தினமும் தினமும் வேட்டையாடப் படுகிறார்கள்
5) இன்னமும்கூட நரபலிகள் உள்ளன
6) முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள் அநாதைகளாகக் கிடக்கிறார்கள்இவை இல்லாமல் செய்வதுதான் கல்வியின் நோக்கம் என்கிறோம் நாம்.இந்தியக் கல்விக்காடு பன்முகத்தன்மை வாய்ந்தது. பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு தெய்வங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள், பல்வேறு கலாச்சாரங்கள் கொண்டது அது. ஒன்றிலிருந்து கொஞ்சம் எடுப்பதும் அதற்கு கொடுப்பதும் கவளம் கவளமாக இருக்க வேண்டும்உங்களிடம் இருப்பது யானைதான்,மறுக்கவில்லை.காட்டுக்குள் புகுந்தால் கல்விக்காடும் அழியும், யானையும் பட்டினி கிடக்கும்திருமதி நிர்மலா சொன்னதையே அரசுக்கு சொல்வோம்,“வாய்புகுவதனினும்
கால் பெரிது கெடுக்கும்”
நன்றி: வாசகசாலை இணையைதழ்              15.07.2019
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2019 23:32
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.