தண்டனையும் குற்றமும்
நரேந்திர மோடியின் ஐந்தாண்டு சாதனைகளுள் ஒன்று முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகளால் தயக்கமின்றி கொல்லப்படும் நிலையை உருவாக்கி வைத்திருப்பது.
பல மரணங்கள் ஒரே மாதிரி இவ்வகையில் நடத்தப்பட்டாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் தேசத்தின் ஆன்மாவையும் அரசியல் சாசனத்தையும் உலுக்கிக் கேள்வி கேட்டவை.

இந்த நால்வரும் எப்படி இறந்தார்கள்? சாகுமளவு அப்படி என்ன பிழை செய்தார்கள்?
*
நீதிபரிபாலனம் 1
தண்டனை: நரேந்திர தபோல்கர் 20 ஆகஸ்ட் 2013 அன்று காலை 7:20 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியில் இருந்த போது பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இருவரால்” மிக அருகிலிருந்து நான்கு முறை சுடப்பட்டார். அதில் இரு குண்டுகள் அவர் தலையிலும் மார்பிலும் துளைக்க, அந்த இடத்திலேயே உயிரை விட்டார்.
குற்றம்: இரு முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியது ஒன்று. அடுத்தது சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்றது.
1989ல் மஹாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (MANS) அமைப்பைத் தொடங்கி மூட நம்பிக்கைகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் எதிராகப் பரப்புரை செய்தார். இந்தியப் பகுத்தறிவுச் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகக் கொஞ்ச காலம் பணியாற்றினார். மூட நம்பிக்கைகளைக் கண்டித்து அவற்றை அகற்ற 3,000-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் நடத்தினார்; தொடர்பாய் பல நூல்கள் எழுதினார்.
2010ம் ஆண்டு முதல் மஹாராஷ்ட்த்தில் மூட நம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனிய எதிர்ப்புச் சட்டத்தைக்கொண்டு வரப்போராடினார் (Anti-Superstition and Black Magic Ordinance). நரபலியைத் தடை செய்யக்கோரும் அதற்கான வரைவை தன் MANS அமைப்பு மூலம் வடிவமைத்தார். பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் இதை இந்து மதத்திற்கு எதிரானது என எதிர்த்தன. ஆனால் அதில் கடவுள், மதம் பற்றி ஒரு சொல்லுமில்லை என்றார் தபோல்கர். அது எவருக்கும் எதிரானதல்ல, மாறாக எல்லோருக்குமானது என்றார்.
1980களில் பாபா ஆதவ்வின் ‘ஒரு கிராமம் ஒரு கிணறு’ என்ற சமூக நீதிப் போரில் பங்கேற்றார். விளிம்புநிலையிலுள்ள மனிதர்கள் பாதுகாப்போடும், கௌரவத்தோடும், வளத்தோடும் வாழ ‘பரிவர்தன்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1990களில் தீண்டத்தகாதோருக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துக் கடுமையாகப்போராடினார். மாரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு பாபாசாகேப் அம்பேத்கர் பெயர் சூட்டக்கோரினார்.
*
நீதிபரிபாலனம் 2
தண்டனை: கோவிந்த் பன்சாரே 16 ஃபிப்ரவரி 2015 அன்று காலை 9:25 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியின் போது பைக்கில் வந்த “இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால்” மிக அருகிலிருந்து ஐந்து முறை சுடப்பட்டார். அதனால் பின்கழுத்திலும், நெஞ்சிலும் படுகாயமுற்றார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின் கோமாலிருந்து நினைவு திரும்பியும் நான்கு நாட்கள் கழித்து உயிரை விட்டார். அவரோடு தலையில் தோட்டா வாங்கிய அவரது மனைவி பிழைத்துக் கொண்டார்.
குற்றம்: மூன்று முக்கிய விஷயங்கள் செய்தார் பன்சாரே. பொதுவுடைமைவாதியாக இருந்தார். பகுத்தறிவுவாதியாக இருந்தார். இந்துத்துவப் புரட்டுக்களை உடைத்தார்.
அடிப்படையில் பன்சாரே ஒரு கம்யூனிஸ்ட். பல தொழிற்சங்கங்களில், சேரி நலச் சங்கங்களில் பங்காற்றியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய நிர்வாகியாக உயர்ந்தவர். சுங்க வரியை எதிர்த்தார். கோட்ஸே புனிதப்படுத்தப்படுவதை எதிர்த்தார்.
அவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தார். கலப்புத் திருமணங்களை ஆதரிக்குமொரு அமைப்பை நடத்தினார். ஆண் குழந்தைப் பிறப்பிற்காக நடத்தப்படும் புத்ரகாமெஷ்டி யக்ஞத்தை எதிர்த்தார். தபோல்கர் மறைவுக்குப் பின் MANS அமைப்பு அவர் வழியைப் பின்பற்றித் தன் செயல்பாடுகளைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார் பன்சாரே.
சமூக அவலங்கள் குறித்து 21 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானது ‘சிவாஜி யார்?’ என்ற நூல். சிவசேனா போன்ற கடசிகள் சிவாஜியை இந்து மதக் குறியீடாக ஆக்கி வைத்திருந்ததை எதிர்த்து அவர் மதச்சார்பற்றவராக இருந்தார், இஸ்லாமியரைத் தன் படையில் தளபதிகளாக நியமித்தார் எனத் தன் புத்தகத்தில் நிறுவினார். சிவாஜி பெண்களை மதித்தார், முக்கியப் பணிகளில் அமர்த்தினார் என்பதையும் சுட்டிக் காட்டினார். பல மொழிகளில் பெயர்க்கப்படு சுமார் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையான அந்நூல், சிவாஜி பற்றிய பிம்பத்தை நொறுக்கியது.
*
நீதிபரிபாலனம் 3
தண்டனை: 30 ஆகஸ்ட் 2015 அன்று காலை 8:40க்கு எம்எம் கல்புர்கியின் வீட்டுக்கு பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இரண்டு பேர்” அவரது மாணவர்கள் என்று அவர் மனைவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து மிக அருகில் கல்புர்கியை இரண்டு முறை சுட்டு விட்டுத் தப்பித்தனர். மார்பிலும் நெற்றியிலும் படுகாயத்துடன் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட வழியிலேயே மரித்தார்.
குற்றம்: இரு விஷயங்கள்: மத நம்பிக்கைகளை, வரலாற்றுப் புரட்டுக்களை மறுத்தார்.
கல்புர்கி 103 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியவர். அவரது ‘மார்கா’ என்ற புத்தகத் தொகுதி புகழ்பெற்றது. அதன் நான்காம் பாகத்துக்கு சாஹித்ய அகாதமி விருது பெற்றார். ஹம்பியில் அமைந்துள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். அங்கு பல இலக்கிய, வரலாற்று ஆய்வுகளுக்கு வித்திட்டார். கர்நாடக அரசு நடத்திய சமக்ர வசன சம்புடா என்ற இதழின் ஆசிரியர்.
மார்கா முதல் பாகத்தில் லிங்காயத் மதத்தின் நிறுவனரான பசவா மற்றும் அவரது குடும்பம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். பசவேஸ்வராவின் இரண்டாம் மனைவியான நீலாம்பிகேவின் வசன கவிதைகளை ஆராய்ந்தவர் அவர்களுக்கு இடையேயான உறவு உடல்ரீதியானதல்ல என்றார். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் பசவேஸ்வராவின் சகோதரி நகலாம்பிகேவுக்கும் செருப்புத் தைக்கும் தொழில் மேற்கொண்டிருந்த கவிஞரான தோஹரா காக்கயாவுக்கும் பிறந்த குழந்தை தான் சன்னபசவா என்றார். பல அழுத்தங்களுக்குப் பின் அக்கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். தன் குடும்பத்தின் பாதுகாப்புக்காக செய்வதாகவும் அது தன் அறிவுத் தற்கொலை என்றும் அறிவித்தார்.
2014ல் மூடநம்பிக்கைச் எதிர்ப்புச் சட்டம் பற்றி பெங்களூரில் நடந்த ஒரு கூட்டத்தில் யூஆர் அனந்தமூர்த்தியின் ‘நிர்வாண வழிபாடு ஏன் தவறானது?’ என்ற நூலிருந்து சிறுவயதில் சாமி தண்டிக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க அவர் கடவுள் சிலைகளின் மீது சிறுநீர் கழித்ததாய் எழுதியிருந்ததைக் குறிப்பிட்டது சர்ச்சையானது.
*
நீதிபரிபாலனம் 4
தண்டனை: கௌரி லங்கேஷ் 5 செப்டெம்பர் 2017 அன்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பிப் பூட்டைத் திறந்து கொண்டிருந்த போது “மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்” ஏழு முறை சுடப்பட்டார். அதில் இருவர் பைக்கில் அவரைத் தொடர்ந்து வந்திருந்தனர். மூன்றாமவன் வீட்டின் அருகிலேயே காத்திருந்தவன். தலை, கழுத்து, மார்பு எனப் பாய்ந்த தோட்டாக்கள் அவ்விடத்திலேயே அவர் உயிரைப் பறித்தன.
குற்றம்: கௌரி தன் பத்திரிக்கையின் மூலம் வலதுசாரி அரசியலை எதிர்த்தார். நக்ஸல்களின் நியாயத்தைப் பேசினார். பிஜேபி கட்சியினரின் அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்தார். இந்து மதத்திலிருக்கும் சாதியத்தைக் கேள்வி கேட்டார்.
தன் தந்தையின் மறைவுக்குப் பின் அவர் நடத்தி வந்த லங்கேஷ் பத்ரிகே என்ற இதழுக்கு ஆசிரியரானார். 2005ல் அவர் நக்ஸல்களுக்கு ஆதரவாக வெளியிட்ட ஒரு கட்டுரையினால் அவரது சகோதரரின் எதிர்ப்புக்குள்ளாகி, கௌரி லங்கேஷ் பத்ரிகே என்ற கன்னட இதழைத்துவக்கினார். பிஜேபியின் எதிர்ப்பை மீறி 2014ல் அப்போதைய முதல்வர் சித்தராமய்யா நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடையச் செய்யும் கமிட்டியில் கௌரியை உறுப்பினராக்கினார்.
தன் இதழில் கடும் வலதுசாரி, இந்துத்துவ எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டார். பாபாபூதன்கிரியிலிருந்த தர்கா ஒன்றை இந்துமயப்படுத்த முயன்ற சங்பரிவாரத்தை எதிர்த்தார். மங்களூரில் சாதிக் குழுக்களைத் தடை செய்யக்கோரும் போராட்டத்தில் பங்கேற்றார். “இந்து என்பது மதமே அல்ல; அது ஒரு அதிகாரப் படிநிலை, பெண்கள் அதில் இரண்டாம் தர ஜீவன்கள்” என்றார். “லிங்காயத்துகளை சிறுபான்மை மதமாக அங்கீகரிக்க வேண்டும், பசவண்ணாவைப் பின்பற்றுவோர் இந்துக்கள் அல்ல” என்றார்.
“பிற்படுத்தப்பட்டவரான பெருமாள்முருகன் மாதொருபாகன் நாவலில் தாய்மைக்காக ஒரு பெண் கணவன் தவிர்த்த வேறொருவனுடன் உறவு கொள்வதாகச் சொன்னதை எதிர்த்த வலதுசாரி அமைப்புகள் பிராமணரான எஸ்எல் பைரப்பா பர்வா நாவலில் அதே போன்ற நியோக முறையை எழுதிய போது ஏன் எதிர்க்கவில்லை? அதுவே பிராமணியம்” என கன்னட இலக்கிய மாநாட்டில் பேசியது பிராமணர்கள் எதிர்ப்புக்கு உள்ளானது. ஹாசன் மாவட்ட பிராமணர் சங்கம் அவரைக் கைது செய்யக் கோரியது.
பிஜேபிக்கு ஊடக ஆலோசகரானதால் 35 ஆண்டு நண்பர் பிரகாஷ் பெலவாடியுடன் உறவை முறித்துக் கொண்டார். சில பிஜேபி தலைவர்கள் ஒரு நகைக்கடைக்காரரை ஏமாற்றியது குறித்து புலனாய்வு செய்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை அவர் தன் இதழில் வெளியிட்டார். அதற்காக அவர் மானநஷ்ட வழக்கைச் சந்திக்க நேர்ந்தது.
*
ஒரே மாதிரி நிகழ்ந்துள்ள இந்த நான்கு படுகொலைகளிலும் இன்னும் குற்றவாளிகள் முழுமையாகக் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. விசிக ரவிக்குமார் உட்பட இன்னும் பலரை இம்மாதிரி கொல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் பிடிபட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்தான். கருத்துரிமையை நசுக்குவதும், சிந்தனையாளர்களைக் கொல்வதும், அதிலிருந்து தப்பிப்பதும் இந்த ஆட்சியில் சுலபம் என லெட்டர்பேட் கட்சிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது அவலமான, பாதுகாப்பற்ற சூழல்.
2019 மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மன் கீ பாரத் நிகழ்ச்சியில் இது தான் கடைசி உரை என்று மூக்குச் சிந்துவதிலிருந்து கும்பமேளாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவுதல் வரை பிரதமர் மோடி தன் நாடகங்களைத் துவக்கி விட்டார். எழுத்தாளர்களுக்கு எதிரான இந்த அரசு மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் இந்த இழிநிலை மோசமடையவே செய்யும். சிந்திக்கும் ஒவ்வொருவரும், கருத்துரிமை விரும்பும் எல்லோரும் இதை மனதிலிருத்தி வாக்களிக்க வேண்டும்.
***
(மார்ச் 2019 உயிர்மை இதழில் வெளியானது)
Published on March 27, 2019 18:59
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
