பிராயச்சித்தம்

செல்வகணபதி. நான் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் சிலரில் அவனும் ஒருவன். பள்ளிதொட்டே நண்பர்கள்தான். நடுவில் கொஞ்சம் விடுபாடு. உயர்நிலைக்கல்விக்குப் பின் மீண்டும் இந்தி டியூஷன் எங்களை சேர்த்து வைத்தது. லட்சியப் படிப்பெல்லாம் அல்ல. மாலை நேரத்தை கிரயம் செய்ய வேறுவழியில்லை. படிப்பு ரீதியான காரணத்திற்கு என்றுமே சுதந்திரம் உண்டு வீட்டில். ஆகையால் இந்த இந்தி டியூஷன் காரணம்.


ஆனால், அவன் கெட்டிக்காரன் நன்றாக படிப்பான். சராசரி உயரம்தான். பார்த்தவுடன் பழகக்கூடிய முகக்கட்டுடையவன். அவன் பேச்சும் அப்படித்தான். போலைட்னெஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதற்கு முழு அர்த்தம் கொண்டவன்.


இருவரும் வெவ்வேறு கல்லூரியாதலால் மாலை நேரத்து பேச்சுக்கள் மட்டுமே. இந்தி டியூஷன், வீடு, கல்லூரி இந்த சுழற்சியில்தான் அன்றைய வருடங்கள் கடந்தன. இறுதி வருட படிப்பு அது. அந்த வயதிற்கு பையன்கள் பேசும் பெண்கள் பேச்சுக்குகூட செவி சாய்க்காதவன். அவன் சுபாவமே அப்படித்தான். வீடு, அம்மா, படிப்பு.


ஒரு வாரம் தான் வரப்போவதில்லையென்றும், மீண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று சந்திப்போம் என்று பேசிவிட்டுச் சென்றான். ஏதோ ஊரில் திருவிழா என்றான். எனக்குத் தனியாகவே கழிந்தது அந்த வாரம்.


கெடா மாதிரி வளர்ந்து சின்ன புள்ளைங்க கூட இந்தி டியூஷன் படிக்கற கொடுமை நம்ம நாட்ல மட்டும்தான் நடக்கும். அனுபவித்தேன். அதான் ஒரு வாரத்துல வந்திடுவான்ல என்ற நம்பிக்கை.


எனது கல்லூரியில் இறுதி பரீட்சை எழுத 75 சதவீதம் வருகைப்பதிவேடு அவசியம். சரியாக கணக்குப்போட்டு கட் அடிக்கும் பழக்கம் உள்ளவன் நான். அம்மாப்பேட்டை பேருந்து எண் 19 வந்தது, ஏறி ஜன்னலோரம் அமர்ந்து என் நோட்டை மடியில் வைத்தேன், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மடி முழுக்க நோட்டுகள், கோபுரமாய்.


நடத்துனரும் ஓட்டுனரும் விடியற்காலை டீ மாஸ்டர் எண்ணெயில் பொறித்த பேய் வடையை உறிஞ்சி உறித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு பேய் வடைக்கும் ஒரு டீக்கும் பேருந்து பறக்கும். அது அவர்களுடைய அன்றாட டீசல்.


வண்டி கிளம்பும் முன் கல்யாணி கவரிங் கடைக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டவே பிரத்யேகமாய் இருக்கும் சுவரில் போஸ்டரில்,


ஷண்முகா பாலிடெக்கினிக்கில் பயிலும் மாணவன் மரணம் என்ற செய்தி. படித்துவிட்டு திரும்பிவிட்டேன். பேருந்து நகர நகர மீண்டும் பார்க்க நேர்ந்தது அதே போஸ்டரை. போஸ்டரில் எனது நண்பன் செல்வ கணபதி. தெளிவான படம் இல்லை அது. சற்று ஊர்ந்து பார்த்துதான் ஊகிக்கவேண்டியிருந்தது.


ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போனவன் இரண்டாவது வாரமாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்.


அன்று நான் கல்லூரிக்கு செல்லவில்லையென்றால் என்றுடை 75 சதவீத வருகைப்பதிவேடு, குறிப்பிட்ட பேப்பருக்கு மட்டும் போய்விடும், இறுதியாண்டு பரீட்சை எழுத முடியாமல் போய்விடும் என்ற பயத்தில், குனிந்து யாரும் அறியாதபடி, பிறகு துடைத்துக்கொண்டேன்.


கல்லூரிவிட்டு மதியம் இரண்டு மணி வாக்கில் வந்துவிட்டேன், மிகுந்த பாரம், மனவேதனை.


மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். எப்படியும் இருப்பான், “தூக்கியிருக்கமாட்டார்கள்” என்ற நினைப்புதான்.


அது ஒரு அழகிய லெஷ்மி கடாஷம் பொருந்திய வீடு. பழைய காலத்து வீடு. அவன் வீட்டு வாசல் முதல் மெயின் ரோடு வரை ஜவ்வந்திப்பூவும் ரோஜாப்பு இதழ்களும் சிதறிக்கிடந்தன.


ஊதுவத்தி, ரோஜாப்பூ, ஜெவ்வந்திப்பூ, சந்தனம் இவையெல்லாம் ஒரே மாதிரியான வாசனைகளை கொண்டிருந்தாலும், அந்த நெடி கல்யாண வீட்டிற்கும் இழவு வீட்டிற்கும் மாறும் என்ற புரிதலை எனது மனம் ஏற்றுக்கொண்ட நாள் அது. நாராசமாயிருந்தது. கபகபா என்று வயிற்றை பிரட்டிக்கொண்டு என்னை ஒரு வழி செய்தது.


மன்னிப்பானா அவன் என்னை ? எப்பேற்பெட்ட சத்ரு த்ரோகம் புரிந்தவனாகிவிட்டேன் நான் ?


எனது இயலாமையை இப்படி சப்பைக்கட்டு கட்டி சொல்லிக்கொண்டிருக்க காரணம் ? போகவே முடியாது என்று தெரிந்தும், போக நினைத்ததும், மீண்டும் போக வேண்டாம் என்ற குரூர முடிவை எடுத்ததன் வெளிப்பாடுதான்.


முழு நேர வகுப்பு படித்தவன்தானே ? மாலை வர இருப்பான் என நினைத்தே இருந்துவிட்டேன் போல. இதுவும் சப்பைகட்டு கட்டத்தான் சொல்கிறேன்.


பேருந்திலிருந்து தடுமாறி விழுந்திருக்கிறான். மண்டையில் அடி. ஆஸ்பத்திரி தூக்கிக்கொண்டுப்போயிருக்கிறார்கள். ரத்தம் இல்லை. காயம் இல்லை. உயிர் பிரிந்துவிட்டதாம். அவன் படித்த கல்லூரியின் பேருந்து நிறுத்தத்திற்கு வேகத்தடை கிடையாதாம்.


அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் அந்த வீட்டை பார்த்துக்கொண்டே போவேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்த வீடு தரைமட்டமாகியிருந்தது. அவன் நினைவாக என்னிடம் நாங்கள் எடுத்துக்கொண்டே செல்பி போட்டாக்கள் இல்லை, ஒரு பாஸ்போர்ட் போட்டா கூட என்னிடம் கிடையாது, அந்த வீடு மட்டும்தான் இருந்தது. இப்போது அதுவும் இல்லை.


செல்வ கணபதி என்ற நண்பன் எனக்கு இருந்தான் என்று எங்கள் பள்ளியில் இருக்கும் பெயர் பட்டியல்தான் சொல்லும். நாங்கள் சாய்ந்து உட்கார்ந்து படித்த இந்தி டியூஷன் சுவருக்குத் தெரியும். எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம் சொல்லும். அவன் வீட்டு திண்ணை சொல்லும்.


நான் செய்தது தவறா ? இல்லை தவறு செய்துவிட்டு ஜஸ்டிபிகேஷன் தேடும் ஈனப்பிறவியா ?


“அடுத்த வாரம் வந்துடுவேண்டா” என்று அவன் சொன்ன வார்த்தைகள் மட்டும் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது இன்னமும்.


அவன் இல்லாத வீட்டை மட்டும் பார்க்க எனக்கு தைரியம் வந்துவிடுமா?  போயிட்டான்டான்னு சொல்லி அழும் அம்மாவை பார்க்கத்தான் தைரியம் வந்துவிடுமா ? எதையும் செய்யவில்லை. யாரிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்பேன் ? சாஷ்டங்கமாக அவன் அம்மாவின் காலில் விழுந்திருக்க வேண்டும். செய்யவில்லை. மறுநாளாவது வீட்டிற்கு போய் கேதம் விசாரித்திருக்க வேண்டும். செய்யவில்லை. அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகனுக்கு நண்பனாக இருக்கும் தகுதியை நான் என்றோ இழந்துவிட்டேன்


இதற்கு பிராயச்சித்தத்தை தேடினாலும் கிடைக்காது.


 


[image error]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2019 11:49
No comments have been added yet.