தாகமே விஷமாகி ...
ஒரு காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.மாற்றுத் துணி இல்லைஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.யாரேனும் வர மாட்டார்களா?ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?வாக்குகளையும் அம்பானி அதானியையும் தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.வர மறுக்கிறீர்கள்.ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018
01.12.2018
Published on December 05, 2018 23:54
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)