அதனால்தான் ராஜாஜி பள்ளிகளை மூடினார் அதனால்தான் பெருந்தலைவர் பள்ளிகளைத் திறந்தார்.

சர்க்கார் படத்தின் பாடல்கள் மத்திய அரசை விமர்சிப்பதாக உள்ளன. எனவே அந்தப் படத்தை வெளியிட விடமாட்டோம் என்கிறார் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் H.ராஜா.என்ன செய்யப் போகிறார் H.ராஜா என்று நமக்குத் தெரியவில்லை. நீதிமன்றத்திற்குப் போகப் போகிறாரா அல்லது படம் வெளியாகிற தியேட்டர்களின்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப் போகிறாரா?அவர் எதையோ செய்துவிட்டுப் போகட்டும். அது அவர் கவலை. அவர் திறமை.ராஜா விடமாட்டேன் என்று சொன்னால் படம் செமையா போயிடும் என்கிறார்கள் திரு விஜயின் ரசிகர்கள். அது அவர்கள் நம்பிக்கை.இது ஒருபுறம் இருக்க சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை மிகப் பிரமாண்டமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.அதற்கான செலவுத் தொகையை என் மகன் வ. கீரா விடம் கொடுத்தால் ஒரு அழகான படத்தையே எடுத்து விடுவான்.அவ்வளவு பிரமாண்டம், அவ்வளவு செலவு.இது திரு H.ராஜாவிற்கான எதிர்வினையா அல்லது வேறு எதுவோவா அது குறித்தும் நமக்கு கவலை இல்லை.அந்த விழாவில் உரையாற்றிய திரு விஜய் தனக்கும் முதல்வராவதற்கு ஆசை உண்டு என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.அதிலும் நமக்கு இப்போதைக்கு கருத்து எதுவும் இல்லை.முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒரு கோடு நீண்டிருக்கிறது. அவ்வளவுதான்.திரு பார்த்தசாரதி லண்டன் ஓடியதன் மூலம் குஜராத் மாநிலத்தைச் சாராத ஒருவரும் வங்கிக் கடனைக் கட்டாமல் கம்பி நீட்டிய வரலாறு பதியப் பட்டிருக்கிறது.ஆனால் இவை அனைத்தையும் தூசியைப் போல் கருதச் செய்துவிடும்படியான ஒரு செய்தியை இந்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மாநிலங்களில் கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்று ஒரு ஆய்வினை நிகழ்த்தியது. அந்த ஆய்வின் முடிவில் தேசத்தில் 13,511 கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லை என்கிற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.29.09.2018 அன்று வெளிவந்த விடுதலை ஞாயிறு மலரில் இந்தச் செய்தியைப் படித்ததில் இருந்து நிலைகுலைந்து போயிருக்கிறேன். இதைவிடவும் மேலே பார்த்த எது ஒன்றும் என்னை ஏதும் செய்துவிடவில்லை.கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். என்னைக் கேட்டால் பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பேன்.பள்ளிக்கூடம் இல்லாத ஊர் ஒரு மயானத்திற்கு சமம்.ஆங்கரை பைரவியா அல்லது சித்திரபாரதியா என்று தெரியவில்லை. எழுதியிருப்பான்,“கோவில் கண்களை
மூடச் சொல்லும்
பள்ளி
கண்களைத் திறந்து விடும்”குழந்தையே இல்லாத ஒரு கிராமத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு சபிக்கப் பட்ட கிராமம் இல்லவே இல்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு பள்ளிகள் வேண்டும்.13,511 கிராமங்களில் பள்ளியே இல்லை எனில் அந்தக் கிராமத்துக் குழந்தைகள் அனைவரும் எழுத்தறிவு இல்லாமலே இருப்பார்களா?நிச்சயமாக இல்லை.எனில், பள்ளிக்கூடங்களே இல்லாவிட்டாலும் அந்தக் கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகள் கல்விறிவு பெற்றவர்களா?நிச்சயமாக இல்லை.எது கேட்டாலும் நிச்சயமாக இல்லை என்றால் எப்படிக் கொள்வது.13,511 கிராமங்களிலும் கல்வியறிவு பெற்றவர்களும் இருப்பார்கள், எழுத்தறிவே இல்லாதவர்களும் இருப்பார்கள்.நான்கு கேள்விகள் இப்போது இயல்பானவை1) யாரெல்லாம் கல்வி அறிவு பெற்றிருப்பார்கள்?
2) எப்படி அது சாத்தியப் பட்டிருக்கும்?
3) யாரெல்லாம் எழுத்தறிவு இல்லாமல் இருப்பார்கள்?
4) ஏன் இது சாத்தியப் படவில்லை?உள்ளூரில் பள்ளி இல்லை. அதனால் வெளியூர் சென்று படிக்க வேண்டும். அப்படி வெளியூர் சென்று கல்வி அறிவு பெற்றவர்களும் இருப்பார்கள். அப்படி வெளியூர் சென்று படிக்காதவர்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருப்பார்கள்.இவை இரண்டிற்கும் காரணம் ஒன்றுதான்.பணம்.ஆமாம், வசதி படைத்தவன் அசலூர் பள்ளிக்கு சென்று படிக்கிறான். வசதி இல்லாதவன் எழுத்தறிவை இழக்கிறான்.ஒருவன் கல்வி பெறுவதையும் எழுத்தறிவை இழப்பதையும் பணம்தான் தீர்மானிக்கும் என்றால் அது அந்த மண்ணின் அசிங்கம்பள்ளியே இல்லாத அதிக ஊர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன. நல்ல வேளையாக அந்தப் பட்டியலின் மேல் வரிசையில் தமிழ்நாடு இல்லை.ஆனால் மாணவர் சேர்க்கை குறைவதால் பள்ளிகளை மூட எத்தனிக்கும் அரசின் முடிவு நடைமுறைப் படுத்தப் படுமானால் தமிழ்நாட்டிலும் பள்ளிகளே இல்லாத கிராமங்கள் உருவாகக் கூடும்.ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரிடம் கேட்டார்களாம்ராஜாஜி பள்ளிகளை மூடினார். நீங்கள் அவர் மூடிய பள்ளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில் பள்ளிகளைத் திறக்கிறீர்களே. காரணம் என்ன?அவர் எந்தக் காரணத்திற்காக பள்ளிகளை மூடினாரோ அதே காரணத்திற்காகத்தான் நான் பள்ளிகளைத் திறக்கிறேன் என்று சொன்னாராம்.யோசித்துப் பாருங்கள்,பள்ளிகள் இருந்தால் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் படித்துவிடுவார்கள். அதனால்தான் ராஜாஜி பள்ளிகளை மூடினார்.பள்ளிகள் இருந்தால் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் படித்துவிடுவார்கள். அதனால்தான் பெருந்தலைவர் பள்ளிகளைத் திறந்தார்.இப்போது ஆள்பவர்களும் பள்ளிகளை மூட எத்தனிக்கிறார்கள்.நாமாவது ஊர்தோறும் பள்ளிகள் வேண்டும் என்கிறோம். பாரதியோ,“தெருதோறும் தமிழ்ப் பள்ளிகள் பெருக வேண்டும்” என்றான்.ஏதாவது செய்ய வேண்டும்.என்ன செய்யலாம்?தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லலாம்,இப்படி ஒத்து சிந்திக்கிறவர்கள் வலைதளங்களில் பகிரலாம். இப்படிப் பகிர்பவர்கள் ஊர்களில், தாலுக்காக்களில், மாவட்டங்களில், மண்டலங்களில், மாநிலத்தில் கூடிப் பேசி, விவாதித்து ஏதேனும் ஒரு முடிவினை எடுத்து செயல் படலாம்.இதை செய்யாவிட்டால்…ஒரு புள்ளியில் நாசமாய்ப் போவோம்.#சாமங்கவிய 20 நிமிடங்கள்
03.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2018 18:59
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.