குழந்தைகளையும் பஞ்சு மிட்டாயையும் சேர்த்து வைக்க மெனக்கெடும் கவிதைகள்







யாழிசை மணிவண்ணனின் “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்” கவிதை நூலை முன் வைத்து”மழையின் தாளம் கேட்குது 
மனிதா மனிதா 
வெளியே வா”என்ற பாடலை கலை இரவு மேடைகளில் கேட்கும்போதெல்லாம் மனசு சிலிர்த்து போகும்.மழையை யார் எப்படி எழுதினாலும் நனைந்து பழக்கப் பட்டிருக்கிறோம்.ஈரமே அதன் ஜீவன் என்பதால் எந்த இசைக் கோர்வையைக் காட்டிலும் மழையின் சத்தம் உன்னதமானது.எவ்வளவோ வாசித்து விட்டோம் மழை குறித்தும் மழையின் இரைச்சல் குறித்தும்.”துளிகள் உடையும் சப்தம்”என்று மழை விழும் ஓசையை யாழிசை மணிவண்ணன்சொல்வது புதிது மட்டும் அல்ல. அது நுட்பத்தின் உச்சம்ஆஹா, துளிகள் உடைவதால் உண்டாகும் மழையின் வலி சத்தியமாய் தமிழுக்கு புதுசு.“தெளிந்த குளத்தில் தெரிகிறது
ஒரு வெளிறிய வானம்
அந்தப் பறவையின் பெயர் தவளை”ஒரு காட்சியை அப்படியே அழகுறப் பதிவது என்பதுகூட ஹைகூவிற்கான ஒரு கூறு என்று கூறப்படுகிறது. பாருங்களேன் எப்படி ஒரு காட்சிப் பதிவு.தெளிவான குளமாம், அதற்குள் தெரிவது வெளிறிய வானமாம், தவளை பறவையாம். உள்ளே இருப்பது வானமெனில் அங்கே இருக்கிற தவளை பறவை இல்லாமல் வேறு என்னவாம்.அவன் அறந்தாங்கியில் இருந்தால் ஒரு எட்டு ஓடிப்போய் முத்தம் இட்டுவிட்டு ஓடி வந்துவிடலாம்.இந்தக் கவிதையில் மீட்டர் கூடலாம் குறையலாம். அதைவிடுத்துப் பார்த்தால் நேர்த்தியான ஹைகூ இது.குழந்தைகளைத் தேடி
ஊருக்குள் நுழைகிறது
பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்என்கிறான். யார் யாரைத் தேடுவது? பஞ்சு மிட்டாய் குழந்தைகளையா? அல்லது குழந்தைகள் பஞ்சு மிட்டாயையா? இவன் யாரைக் கொண்டாடுகிறான்? குழந்தைகளையா அல்லது பஞ்சு மிட்டாயையா? எதற்கு இவ்வளவு மெனக்கெடுகிறான் இந்தப் பிள்ளை?குழந்தைகளையும் பஞ்சு மிட்டாயையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறது இவன் கவிதை.குழந்தைகளுக்காக பஞ்சு மிட்டாய் மரத்தை சுமப்பவனை வியாபாரி என்கிறோம். இவனோ கவிஞன் என்கிறான்.ஒரு கவிதை இதைவிட என்ன செய்துவிடும்? அல்லது இதைவிட என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?பனை வெல்லமும்
பொடி செய்த சீரகமும்
கடல் கடந்து அனுப்பியிருக்கிறாள்
இருமலுக்கு நன்றிஎன்கிறான். சன்னமாய் அழுதுவிட்டேன். நாலு வரிகளுக்குள் ஒரு குறும்படத்தை விரிக்கிற வித்தை இருக்கிறது இவனிடம்.சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு ஒருவன் அலை பேசுகிறான். பேச்சினூடே இருமல். பதறிப் போகிறாள். அழுகிறாள். மருத்துவ மனைக்கு அழைத்துப்போகக்கூட ஆள் இல்லையே. ஒரு கஷாயம் வைத்துக் கொடுக்கவும் வாய்ப்பில்லையே?மருந்துப் பொடி செய்கிறாள். விடுப்பில் அங்கிருந்து வந்திருப்பவர்களைத் தேடி பிடிக்கிறாள். பொடியை அனுப்புகிறாள். இணையாள் கைபட்ட பொடி வந்ததும் பூரிக்கிறான். ஊருக்கு வேண்டுமானால் அது மருந்துப் பொடி. அவனுக்கு அந்த டப்பி நிறைய அவளது அன்பு.பெற்றோர் பெண்டு பிள்ளைகளைப் பிரிந்து சம்பாதிப்பதற்காக புலம் பெயர்ந்த இளைஞனின் வலியை எவ்வளவு லகுவாக கவிதை ஆக்கியிருக்கிறான்.ஆண்டபரம்பரையின் பிணத்தில்
அடுக்கியிருந்த சாண விரட்டிகளில்
ஆதி திராவிடனின் கை ரேகைகள்சாணி மிதிப்பதைப்போல் சாதியை மிதிக்கிறது இந்தக் கவிதைகிழிந்த சுவரினை
தையலிட்டிருந்த்து 
எறும்புச் சாரைஎன்கிறான்.சில இடங்களில் செதுக்கி இருக்கலாம் என்பது தவிர கவிதையை மட்டுமே எழுதியிருக்கிறான். சாயல்களற்ற கவிதைகளின் தொகுப்பு. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.“இத்தொகுப்பில் இருளை எரிக்கும் கொண்டு வந்திருக்கிறார் யாழிசை. நமது விளக்குகளில் ஏந்திக் கொள்வோம்” என்கிறார் கரிகாலன்.ஏந்திக் கொண்டேன்.#சாமங்கவிய 36 நிமிஷங்கள்
27.08.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2018 20:16
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.